கோவை தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “படித்தால் வேலை கிடைக்காது என்ற அவ நம்பிக்கை முன்பு இருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு 238 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறோம். அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள 75,000 பணியிடங்களை நிரப்பத் திட்டமிட்டுள்ளோம்.
பிரபல நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கு யாராவது பரிந்துரை கேட்டு வருவார்கள். நானும் அந்த நிறுவனத்துக்கு பரிந்துரை செய்து கடிதம் கொடுப்பேன். ஆனால் அந்த நிறுவனத்தின் கேட்டிலேயே தடுத்து விடுவார்கள்.
உள்ளே விடமாட்டார்கள். இதனால், கடிதம் போய் சேரவே முடியாது. அங்கே செல்லுங்கள், இங்கே செல்லுங்கள் என்று அலைக்கழிப்பார்கள். என்னிடம் கடிதம் வாங்கியவர்கள் படாத பாடு பட்டு விடுவார்கள்.
இதையெல்லாம் நீக்குவதற்காக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறோம். வேலை இல்லை என்பதை போக்கும் விதமாக, வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
நம் முதல்வரின் முயற்சியால் மூடப்பட்ட போர்டு நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எவர் ஒருவர் கடுமையாக முயற்சிக்கிறாரோ அவர் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். எனவே மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும்.” என்றார்.