Sri Lanka Elections : இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு | Live Updates

இலங்கை அதிபர் தேர்தல்… யாழில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது; களத்திலிருந்து விகடன்!

இலங்கை அதிபர் தேர்தல்!

இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் மட்டுமன்றி பெரும்பாலான உலக நாடுகளின் கவனம் இன்று இலங்கை என்ற தீவு நாட்டின் மீது குவிந்திருக்கிறது. பெரும் பொருளாதார நெருக்கடி, அரசியல் அதகளங்கள் என கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கையில் அசாதாரண சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில், தற்போது நடைபெறும் அதிபர் தேர்தலானது, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நீராலான தேசம் தன்னை மீட்டெடுப்பதற்கான தருணத்தை எதிர்நோக்கும் தேர்தல் என்றே கூற வேண்டும்.

இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகமான வேட்பாளர்கள் (38 வேட்பாளர்கள் களத்தில்) போட்டியிடும் தேர்தலாக விளங்கும் 2024 அதிபர் தேர்தலில், இலங்கையின் வைர முள் கிரீடத்தை சுமக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில், தற்போதைய இடைக்கால அதிபராக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசா, இடதுசாரி சிங்கள இனவாத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி) சார்பில் அனுரகுமார திசநாயக்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்சேவின் மகனான நிமல் ராஜபக்சே,

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின்போது இலங்கையின் ராணுவத் தளபதியாக செயல்பட்ட சரத் பொன்சேகா, மக்கள் போராட்டக் கூட்டணி சார்பில் வழக்கறிஞர் நுவான் போபகே உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் போட்டியிடுகின்றனர். இத்தனை தலைவர்கள் போட்டியிட்டாலும் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாசா, அனுரகுமார திசநாயக்க ஆகிய மூவருக்குள்தான் மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் காலை 7 மணிக்கு அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், இன்றிரவே பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, நாளை மதியத்துக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, இலங்கையின் புதிய அதிபர் யார் என்பது அதிகாரபூர்வமாகத் தெரியவரும்.