Srilanka Election: மும்முனை போட்டி; தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு – பத்திரிகையாளர் சிவராமசாமி பேட்டி

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள், தேர்தல் பிரச்சாரங்கள் எவ்வாறு இருந்தது, மும்முனைப் போட்டிதான் நிலவுகிறதா, தேர்தல் முறையாக நடக்குமா போன்றவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள ‘தமிழர்’ பத்திரிகையின் ஆசிரியர் திரு. சிவராமசாமி அவர்களைக் களத்தில் விகடன் சார்பாகச் சந்தித்து பேட்டி எடுத்தோம்.

மக்கள் ஆர்வமாக வாக்கு செலுத்த வாக்கு சாவடிக்குச் செல்கின்றனர்? இலங்கைக்கு இந்த தேர்தல் எவ்வளவு முக்கியம்?

இன்றைய நாளைப் பொறுத்தவரை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை இது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான ஒரு தேர்தல். ஏற்கனவே கோத்தபய ராஜபக்சே ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் பாதியை ரணில் சரி செய்துவிட்டார். பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டுதான் ரணில் ஜனாதிபதியாக இருந்தார். தற்பொழுது அவர் மக்களிடம் சென்று கேட்கிறார், தனக்கு அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதியைத் தாருங்கள் நான் இதை முழுவதுமாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று.

அதேபோல பிரதான இரண்டு வேட்பாளர்கள் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர், ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் ஆகிய இருவரும் கேட்கிறார்கள் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள். எங்களிடம் பல திட்டங்கள் இருக்கிறது. நாங்கள் இவரை விட பல நல்லவைகளைச் செய்வோம். வரி குறைப்பு செய்வோம், வருமானத்தை அதிகரிப்போம், ஏற்றுமதியை அதிகரிப்போம், தேவையில்லாத செலவுகளைக் குறைப்போம், லஞ்ச ஊழல்களைக் குறைப்போம் என அவர்களும் ஒரு திட்டத்தைச் சொல்கின்றனர். எனவே ஒரு கடுமையான போட்டி சிங்களர்கள் மத்தியிலும் தமிழர்கள், முஸ்லிம்கள் மத்தியிலும் கூட இந்த தேர்தலில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவுகிறது. அதேபோல் பிராந்திய ரீதியாகவும் தங்களுடைய நாட்டுக்கு நன்மைகள் தீமைகள் என்னென்ன வரும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் இருக்கிறது. எனவே இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக இருக்கிறது.

மும்முனை போட்டியாக இருக்கிறதா?

ஆமாம், தற்பொழுது மும்முனை போட்டியாக உள்ளது. ஆரம்பத்தில் அப்படி ஒரு போட்டி இருக்கவில்லை. இரண்டு முனை போட்டிகளாக இருந்தது. தற்பொழுது மும்முனை போட்டியாக மாறிவிட்டது.

மும்முனைப் போட்டியில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?

முதன்மை சுற்றில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் கூட இரண்டாவது சுற்று எண்ணும்போது அதில் யாருக்கு கூட வந்திருக்கும் அதன் அடிப்படையில் ஒரு தீர்மானத்திற்கு வரலாம். ஆனால் அந்த தீர்மானத்தை மற்ற தரப்புகள் அல்லது போட்டியிட்ட இதர தரப்புகள் ஏற்குமா என்ற ஒரு பிரச்னை இருக்கிறது. ஆனால் இன்றைக்கு இருக்கும் நிலையில் அவர்கள் ஏற்கும் நிலையில் இல்லை ஏனென்றால் எல்லோருமே அறிவிச்சிட்டாங்க நாங்க ஆட்சியைக் கைப்பற்றுவோம், வேறு கட்சியினர் கூட ஒரு கட்சி அமைச்சரவை வந்தால் உடனே ஒரு தற்காலிக அமைச்சரவை அமைப்போம் என்ற முடிவை எடுத்து விட்டார்கள். பாராளுமன்றத்தைக் கலைத்து விடுவோம் என்ற முடிவையும் எடுத்து விட்டார்கள். எனவே இது தேர்தல் ஆணைக் குழுவின் கையில்தான் இருக்கிறது.

தேர்தல் ஆணையத்தைப் பொருத்தவரை அவர்கள் எப்படி செயல்பட்டு வருகிறார்கள்?

தேர்தல் ஆணையத்தைப் பொருத்தவரை அவர்கள் மிகவும் பொறுப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். இந்த முறை அவர்கள் அரசியல் சார்பற்ற தன்மையுடன்தான் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் சில மிகப்பெரிய பொறுப்புகளைச் செய்து வருகிறார்கள். யாழ்பாணத்தில் ஒரு தீவில் எலக்சன் நடத்தினால் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வாக்கு பெட்டிகளைக் கொண்டு வருகிறார்கள். அப்படி அவர்கள் சில கடினமான செயல்களையும் செய்து வருகிறார்கள்.

இந்தியாவில் ஒருவர் ஒரு வாக்கு மட்டுமே செலுத்த முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் இலங்கையில் ஒன்று, இரண்டு, மூன்று வாக்குகள் செலுத்தலாம் என்ற நிலை உள்ளதா?

ஆம், இலங்கையில் அப்படி ஒரு ஆப்ஷன் உள்ளது.

ஆனால் மக்கள் இரண்டு, மூன்று வாக்குகளைச் செலுத்த மக்கள் பழகி விட்டார்களா மக்களுக்கு அந்த Awareness போய் சேர்ந்து விட்டதா?

மக்களுக்கு உரிய அறிவுறுத்தல்களைக் கொடுத்தார்கள். அந்த அறிவுறுத்தல்கள் மக்களிடம் சென்று சேரவில்லை. போன முறை 7 லட்சம் வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகள் செலுத்தப்பட்டது. அதேபோல இந்த முறை செல்லுபடியற்ற வாக்குகள் பத்து லட்சத்தைத் தாண்டலாம்.

இது பிரச்சினையாக மாறும் என்ற நிலை உள்ளதா? யார் வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாம் அல்லவா?

யார் வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாம், அதை ரீ கவுன்ட் கூட செய்யலாம். அவர்கள் கோர்ட்டுக்கு கூட செல்லலாம். ஆனால் தற்பொழுது 39 வேட்பாளர்கள் வேட்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில் ஒருவர் இறந்து விட்டதால் தற்பொழுது 38 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் பிரதான மூன்று வேட்பாளர்கள் இருந்தாலும் இதில் அதைவிட உதிரி வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கேபினட் மினிஸ்டர் இரண்டு பேர் போட்டி போடுகிறார்கள். மூத்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சே, அவர் ஜஸ்டிஸ் மினிஸ்டர் ஆக இருந்தார். அவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வரும். பெரிய அளவில் எதுவுமில்லை. அரியநேத்திரன், அவர் தமிழ் பொது வேட்பாளராக இருக்கிறார். அவர் அவருக்கு வரும் வாக்குகளை மற்றொருவருக்கும் போட சொல்லி இருப்பார்கள் அவருடைய ஆதரவாளர்கள். அதேபோல ஸ்போர்ட்ஸ் மினிஸ்டராக இருந்த பிரசாந்த் ராகசிங்கர், அவரும் போட்டியிடுகிறார். அவரும் சொல்லி இருப்பார் தனக்கும் இரண்டாவது ஆப்ஷனாக வாக்கு செலுத்த சொல்லி இருப்பார். ஆனால் அது எப்படி கவுன்ட் செய்யப்படும். மிகவும் முரணான வேலை முறை அதில் இருக்கு.

ரணில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்? சுயேட்சையாகப் போட்டியிடுபவருக்கு அவ்வளவு ஆதரவு கிடைக்குமா?

போன முறை அவர் ஐக்கிய தேசியக் கட்சியில்தான் கேட்டார். ஆனால் இந்த முறை சுயேட்சையாக வருவதை அறிவித்தாலும், இவரோட ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனல் இருக்கிறார்கள். இதில் அவரோட அதிக எம்.பி.,க்கள் இருக்கிறார்கள். இரண்டாவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, அந்த கட்சியில் மெஜாரிட்டி ஆட்கள் இவருடன் இருக்கிறார்கள். அதனுடன் லெப்டிஸ்ட் இருக்காங்க. இதை தவிர தமிழ் எம்.பி.,க்களும் ஆதரவாக இருக்கிறார்கள். மலையகத்தில் உள்ள கட்சிகளும் ஆதரவாக இருக்கிறார்கள். இப்படி எல்லா இடத்திலும் இருந்தும் ஆதரவு அளிக்கிறார்கள். நான் ராஜபக்‌ஷேவுடன் இருந்தேன் என்ற ஒரு பிராண்ட் வந்துட கூடாது என்பதற்காகத்தான் அவர் அவ்வாறு கூறுகிறார்.

தமிழர்கள் மூன்று பிரிவாக பிரிந்து உள்ளார்களா? தமிழர்களிடம் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறதா?

மூன்று பிரிவுகளை விட அதிகமாகப் பிரிந்து இருக்கிறார்கள். பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகும் கூட அந்தக் கட்சிக்குள்ளேயே ஒரு மனதான தீர்மானம் இல்லை. சஜித்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ஒரு தரப்பு தமிழரசுக் கட்சி சொல்கிறார்கள். தமிழரசு கட்சியின் ஒரு பழைய முன்னாள் எம்.பி., பொது வேட்பாளராக இருக்கிறார். தமிழரசுக் கட்சியின் தலைவர் அரியணேந்திரனுக்கு ஆதரவளிக்கிறார். ஆனால் அவரே ரணிலைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கிறார். சந்தித்து நீங்கள் வெல்ல வேண்டும் என நினைக்கிறேன் என்று கூறுகிறார். அப்படி பல பக்கங்கள் இருக்கிறது இதில். தமிழ் தேசியம் என்ற போராட்டத்தை விற்று விட்டார்கள். கொச்சைப்படுத்தி விட்டார்கள் என்றுதான் அர்த்தம்.