Tirupati Laddu: “மக்களுக்கு ஒரு கோடி பிரச்னை இருக்கு; கோயில், லட்டு, பூந்திய விட்டு வாங்க” – சீமான்

‘திருப்பதி லட்டு’ விவகாரம் தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்திருக்கிறார்.

“திருப்பதி கோயில் மிகவும் புனிதமானது. ஆனால் முந்தைய ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அங்குக் கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்குப் பதில், விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாகக் கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸும் வெட்கப்பட வேண்டும்.” என்று ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதனை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுத்திருந்தது.

Tirupati Laddu – திருப்பதி லட்டு – சந்திரபாபு நாயுடு

ஆனால் இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்ப, திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் மீன் எண்ணெய், சோயா பீன், சூரிய காந்தி எண்ணெய், விலங்குக் கொழுப்பு உள்ளிட்டவை திருப்பதி லட்டில் சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இவை பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பதி லட்டு விவகாரம் பேசுப்பொருளாகி இருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், “திருப்பதி லட்டு சாப்பிட்டவர்கள் எல்லாம் உயிரோடுதானே இருக்கீறார்கள். அதில் எந்த பிரச்னையும் இல்லைதானே? சரி இனிமேல் அப்படி தயாரிக்காதீர்கள் என்று கூறிவிட்டு, யாருக்கு ஒப்பந்தம் கொடுத்தார்களோ அவர்களை நீக்கிவிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்.

சீமான்

இதுவே தேசத்தின் மிகப்பெரிய பிரச்னையாகக் கொண்டு செல்வது சரி கிடையாது. கோயில், லட்டு, பூந்தி, ஜிலேப்பியை விட்டு வெளியே வர மாட்றாங்க. நாட்டு மக்களின் பிரச்னை ஒரு கோடி இருக்கிறது. ஆட்சியில் இருக்கிறவர்கள் உருவாக்கப்பட்ட பிரச்னையே நிறைய இருக்கிறது. அதைப் பற்றி பேசவே இல்லை. இப்போது லட்டைப் பிடித்துக்கொண்டு கிளம்பி விட்டார்கள். அப்படி செய்திருக்கக்கூடாதுதான். அது தவறு. யார் அந்த தவறைச் செய்திருக்கிறார்களோ அவர்களிடம்தான் விசாரிக்க வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.