அரசியல் குழப்பங்கள், அதீத கடன்சுமை, தீராத பொருளாதார நெருக்கடி என அசாதரண சூழ்நிலையில் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கும் இலங்கை தன்னை மீட்டெடுப்பதற்கான அதிபர் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக விளங்கும் 2024 அதிபர் தேர்தலில் இலங்கையின் வைர முள் கிரீடத்தை சுமக்கப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில், இந்த இலங்கைத் தேர்தலின் முக்கியத்தும் என்ன? தேர்தல் களத்தில் முந்துவது யார்? வெற்றி வாய்ப்பு யாருக்கு இருக்கிறது? உள்ளிட்டப் பல்வேறு கேள்விகளுக்கு விடையை விரிவாக அலசுவோம்.
இலங்கை அதிபர் தேர்தல் 2024: ஏன் முக்கியத்துவம்?
இலங்கையின் பத்தாவது அதிபரை தேர்ந்தெடுக்கப்போகும் 2024 அதிபர் தேர்தல் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை, கடந்த கால ஆட்சியின் நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்ட கடன் சுமைகள், கொரோனாவால் அதிகரித்த பொருளாதார நெருக்கடிகள், வெகுண்டெழுந்த மக்கள் போராட்டத்தின் விளைவுகள் உள்ளிட்ட சிறு வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.
இலங்கையின் அசாதாரண சூழ்நிலை:
2019-ம் ஆண்டு இலங்கைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ராஜபக்சே சகோதரர்களின் அரியனை முழுதாய் மூன்று ஆண்டுகள்கூட நீடிக்கவில்லை. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்துவந்து, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியைத் துவங்கிய மகிந்த ராஜபக்சே, 2019 இலங்கை அதிபர் தேர்தலில் தனது தம்பியான கோத்தபய ராஜபக்சேவை போட்டியிடவைத்தார். அந்தத் தேர்தலில் தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட சஜித் பிரேமதாசவைத் தோற்கடித்து பெரும்பான்மை வெற்றியுடன் அதிபர் பதவியேற்றார் கோத்தபய ராஜபக்சே. தான் வெற்றிபெற்றை கையோடு அடுத்துவந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது அண்ணன் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக்கினார் கோத்தபய. மீண்டும் இலங்கையின் ஆட்சி அதிகாரம் தங்கள் குடும்பத்தின் கைக்கு வந்த களிப்பில் இருந்த ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சியை ஆட்டம்காண வைக்க வந்தது கொரோனோ பெருந்தொற்று.
இலங்கையின் பொருளாதாரம் பெருமளவு சுற்றுலா, தேயிலை ஏற்றுமதி, இறக்குமதியையே நம்பியிருந்த நிலையில் உலகையே உலுக்கியெடுத்த கொரோன பெருந்தொற்று இலங்கைத் தீவை ஒட்டுமொத்தமாய் கடல்நடுவே முடக்கிப்போட்டது. மற்ற நாடுகளைப்போலவே கொரோனா தாக்கத்தால் இலங்கையின் பொருளாதாரமும் வேகமாக சரிவடைந்தது என்றாலும்கூட, கொரோனா தாக்கத்துக்கு முன்பே இலங்கை அரசு அதிகமான கடன் நெருக்கடியை நோக்கிதான் சென்றுகொண்டிருந்தது. அதற்கு முதன்மைக் காரணம் சீனாவின் கடன் வலையில் இலங்கை சிக்கியதுதான்.
இலங்கை கடனில் சிக்கிய கதை:
2009-ம் ஆண்டு இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் எழுப்பும் திட்டத்துக்காக 85 சதவிகித கடனை சீனா, இலங்கையின் ராஜபக்சே அரசுக்கு அளித்தது. அதாவது, 2010-ம் ஆண்டு 306 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை 6.3 சதவிகித வட்டிக்கும், 2011-ம் ஆண்டு 900 மில்லியன் டாலரை 2 சதவிகித வட்டிக்கும் வாங்கியது இலங்கை அரசாங்கம். விளைவு, 2017-ம் ஆண்டுவாக்கில் இலங்கையின் மொத்த பொருளாதாரத்தில் 50 சதவிகிதம் கடனாக மாறியது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுக்கால குத்தகைக்கு சீனாவிடம் தாரைவார்த்தது இலங்கை அரசாங்கம். அதேபோல், 2014-ம் ஆண்டு கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்காக சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டாலருக்கான திட்டத்தை அதிபர் ராஜபக்சே சீன அரசுடன் ஏற்படுத்திக்கொண்டார். இது இலங்கைத்தீவில் சீனாவின் மிகப்பெரிய திட்டமாகக் கருதப்பட்டது. அடுத்தடுத்த ஆட்சி மாற்றத்தால் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டது. 2019-ல் மீண்டும் ராஜபக்சேக்களின் ஆட்சி ஏற்பட்டது. அதேவேளையில் தொடர்ந்து சரிந்துவந்த இலங்கைப் பொருளாதாரம், 2020-ம் ஆண்டில் இலங்கையின் மொத்தப் பொருளாதாரத்தில் 80 சதவிகிதம் கடனாக மாறியது. விளைவு, அம்பாந்தோட்டை துறைமுகத்தைப்போலவே கொழும்புத் துறைமுக நகரமும் 99 ஆண்டுகள் குத்தகைக்கு சீனாவிடம் கைமாறியது.
இப்படி சீனாவிடம் வாங்கிய அடைக்க முடியாத கடன் ஒருபுறமிக்க, மற்றொருபுறம் இலங்கை அரசின் நிர்வாகத் தோல்வியும் காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, அரசியல் லாபத்துக்காக, பல்வேறு துறையினருக்கும் மானியங்களை வாரிவழங்கியது, இறக்குமதியை கணிசமாகக் குறைத்தது போன்ற நடவடிக்கைகள் அரசு கஜானாவை காலிசெய்யவைத்தது. முக்கியமாக, செயற்கை உரங்களுக்குத் தடைவிதித்து, முன் அனுபவம், சரியான திட்டமிடல் இல்லாமல் தீடீரென இயற்கை விவசாயத்துக்கு மாற வழிசெய்யும் இயற்கை விவசாயக் கொள்கைக்கு உத்தரவிட்டதால், இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி பெருமளவு பாதிப்படைந்தது.
இது தவிர, வெளிநாட்டு வங்கி, நிறுவனங்களிலிருந்து இலங்கை அரசு வாங்கிய கடனும் அடங்கியிருக்கிறது. இது போன்ற காரணங்களால், மேலும் மேலும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்ட இலங்கை அரசாங்கம், கடனைக் கட்டுப்படுத்துவதற்கு வழியில்லாமல், இன்னும் அதிகமானக் கடனை வாங்கிக் குவித்தது.
போராட்டத்தில் குதித்த மக்கள்; தூக்கியெறிப்பட்ட ஆட்சி:
ராஜபக்சேக்கள் ஆட்சிக்கு வந்த 2019-ம் ஆண்டு 7.5 பில்லியன் டாலராக இருந்த இலங்கையின் அந்நியச் செலாவணி 2021-ம் ஆண்டு ஜூலையில் சுமார் 2.8 பில்லியன் டாலராகக் குறைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 3.6 சதவிகிதமாகக் குறைந்தது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்தது. பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடைய, அரிசி, சர்க்கரை, பருப்பு என அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலையும், பெட்ரோல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்தது. ஒருகட்டத்தில் மக்களின் பணமும் காலியாக, பொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, `பொருளாதார அவசரநிலைப் பிரகடனத்தை’ அமல்படுத்த நாடு அசாதாரண சூழலுக்குள் தள்ளப்பட்டது. ஒருபக்கம் இலங்கை மக்கள் விலைவாசி உயர்வால் தத்தளித்துக்கொண்டிருக்க, ராஜபக்சே குடும்பமும், அமைச்சரவை சகாக்களும் சொத்துக்குவிப்பு, சொகுசு வாழ்க்கை என ஆடம்பரத்தில் ஊறித் திளைத்துக்கொண்டிருந்தனர்.
இதனால் வெகுண்டெழுந்த இலங்கை மக்கள் ராஜபக்சேக்களின் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். 2022-ம் ஆண்டு மத்தியில் ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக வேண்டும் எனக் கோரிய இந்தப் போராட்டம் மிகவும் தீவிரமடைந்தது. அமைதிவழியில் போராடிவந்த மக்களை, ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதையடுத்து, தங்கள்மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக போராட்ட கள மக்கள், ராஜபக்சே, அவரின் ஆதரளவாளர்கள், குடும்பத்தினர்கள், அரசாங்க அமைச்சர்களின் வீடுகளைத் தீக்கிரையாக்கினர். ராஜபக்சே சகோதர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டே தப்பி ஓடினர். இலங்கை மக்களின் போராட்டம் வெற்றிபெற்ற நிலையில், 2022 ஜூலை மாதம் நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் இலங்கையின் இடைகால புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.
இந்த நிலையில், 2024 நவம்பர் 17-ம் தேதியுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், இலங்கை சட்டப்படி, அதற்கு முன்பாகவே அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படவேண்டியது அவசியம். எனவே, 2024 செப்டம்பர் 21-ம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்கள், சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள், சுயேட்சைகள் என சுமார் 38 பேர் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக 38 பேர் போட்டியிட்டாலும் அதில் ஒருவர்கூட பெண் வேட்பாளர் இல்லை என்பது கூடுதல் தகவல்.
இலங்கை தேர்தல் களம் – முன்னணி வேட்பாளர்கள் யார்?
இந்தத் தேர்தலில், தற்போதைய இடைக்கால அதிபராக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசா, இடதுசாரி சிங்கள இனவாத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி) சார்பில் அனுரகுமார திசநாயக்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்சேவின் மகனான நிமல் ராஜபக்சே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின்போது இலங்கையின் ராணுவத் தளபதியாக செயல்பட்ட சரத் பொன்சேகா, மக்கள் போராட்டக் கூட்டணி சார்பில் வழக்கறிஞர் நுவான் போபகே உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் போட்டியிடுகின்றனர். இத்தனை தலைவர்கள் போட்டியிட்டாலும் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாசா, அனுரகுமார திசநாயக்க ஆகிய மூவருக்குள்தான் மும்முனை போட்டி நிலவுகிறது என்கிறார்கள் இலங்கை அரசியல் வல்லுநர்கள்.
இவர்களில், இடைக்கால அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே 2005-ம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 19 ஆண்டுகள் கழித்து அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். ரணில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தாலும் சுயேச்சையாகவே போட்டியிடுகிறார். ராஜபக்சேவின் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்களும் இவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். `மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் கடந்த 2022-ல் இலங்கையின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டது முதல் இரண்டு ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் பெரும்பங்கு வகித்து, நாட்டையும் நாட்டுமக்களையும் மீட்டெடுத்த தனக்கே வாக்களிக்க வேண்டும்’ என பிரசாரம் செய்திருக்கிறார். அதேசமயம், `ராஜபக்சேக்களின் ஆசியுடனும், பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன்தான் ஆட்சி நடத்தினார், மேலும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு குறைந்ததே தவிர விலைவாசி உயர்வு, மின்கட்டணம் எதுவும் குறைந்தபாடில்லை’ என ரணில் விக்ரம சிங்கே மீதான விமர்சனங்களும் நீடிக்கின்றன.
அதேபோல, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சார்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா வலுவான வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். ஏற்கெனவே ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியிருந்த சஜித் பிரேமதாசா, கடந்த 2019-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து களம்கண்ட இரண்டாவது இடம் பிடித்தார். தற்போது இரண்டாவது முறையாக இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் சஜித், `எனக்கு வாக்களித்தால் எல்லோருக்குமான வளர்ச்சியைக் கொடுப்பேன், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தை மேம்படுத்துவேன்’ எனக்கூறி வாக்கு சேகரித்திருக்கிறார். இவருக்கு, ஆல் சிலோன் மக்கள் காங்கிரஸ், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
ஜனதா விமுக்தி பெரமுன சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்கும் அனுரகுமார திசநாயக்க, கடந்த 2019 அதிபர் தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப் பிடித்தார். ஜே.வி.பி எனும் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியானது இலங்கை வரலாற்றில் சிங்களப் பேரினவாதக் கட்சியாக அடையாளம் காணப்படுகிறது. 80-களில் ஆயுதம் தாங்கிய தீவிரவாத இயக்கமாக செயல்பட்டுவந்த ஜே.வி.பி, அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்துவந்தது. மார்க்சியம் – லெனினியம் என்ற இடதுசாரிக் கருத்தியலைப் பேசினாலும் அடிப்படையில் சிங்கள இனவாத கட்சியாகவே செயல்பட்டுவந்தது. தற்போது ஜே.வி.பி தலைவராக இருக்கும் அனுரகுமார திசநாயக்க தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணியின்கீழ் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். `ஊழல் ஆட்சிகளுக்கு எதிராகப் போராடுவேன், ஊழல்வாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுப்பேன்’ என தேர்தல்களத்தில் ஒலித்திருக்கிறார்.
இவர்கள் தவிர மற்ற வேட்பாளர்களின் செல்வாக்கு என்பது பெரிய அளவில் இல்லை என்கிறார்கள் இலங்கை அரசியல் நோக்கர்கள். குறிப்பாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவுக்கு சொந்தக் கட்சியினரின் ஆதரவே முழுமையாக கிடைக்கவில்லை; பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிப்பதாலும், ஏற்கெனவே இலங்கை பொதுமக்கள் ராஜபக்சே குடும்பத்தை விரட்டியடித்திருப்பதாலும் இந்தத் தேர்தலில் செல்வாக்கு குறைந்த நபராகவே நமல் ராஜபக்சே பார்க்கப்படுகிறார். தேர்தல் களத்திலும்கூட `தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கக்கூடாது’ என்ற பழைய இனவாத பேச்சையே பேசிவந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிந்துகிடக்கும் தமிழ்த் தலைவர்கள்:
இலங்கையைப் பொறுத்தவரையில், 75 சதவீதம் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களும் மீதம் 25 சதவீதம் ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள், இஸ்லாமியர்கள் போன்ற சிறுபான்மையினரும் இருக்கின்றனர். தனித்து நின்றாலும், கூட்டணியில் இருந்தாலும்கூட சிறுபான்மையினருக்கான அரசியல் அதிகாரம் என்பது இலங்கையில் இல்லை என்பதுதான் வெளிப்படையான உண்மை. இருப்பிலும், சிங்களத் தலைவர்களிடையே பலமுனை போட்டி நிலவுவதால் சிங்கள மக்களின் வாக்குகள் பலவாறாக பிரியும். அதேசமயம் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகள் ஆட்சிமாற்றத்துக்கான காரணியாக அமையும் வாய்ப்புகளும் இருக்கின்றன.
ஆனால், இலங்கைத் தமிழ்த்தலைவர்கள் அனைவரும் பல்வேறு நிலைப்பாடுகளில், பல திசைகளில் பிரிந்துநின்று தேர்தலை சந்திக்கின்றனர்.
கவனிக்கப்படும் வகையில், தமிழ் பொதுக் கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழர்களின் பொது அதிபர் வேட்பாளராக முன்னாள் எம்.பி பாக்கியசெல்வம் அரியநேந்திரன் போட்டியிடுகிறார். இவருக்கு டெலோ, இ.பி.ஆர்.எல்.எஃப், பிளாட் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. தமிழர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வழங்காத, தமிழ் மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிரிந்தளிக்காத தென்பகுதி சிங்கள அரசாங்கத்துக்கு எதிராகவும், தமிழர் முகமாகவும் பாக்கியசெல்வம் அரியேந்திரன் நிறுத்தப்பட்டிருப்பதாக தமிழ் பொதுக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்தக் கூட்டணியை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உள்ளிட்ட பிரதான தமிழ்க்கட்சிகள் பலவும் ஆதரிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் ஶ்ரீதரன் இந்தப் பொதுவேட்பாளரை ஆதரிக்கவேண்டும் எனக் கூறினாலும், தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிற தலைவர்கள் அதை ஏற்கவில்லை.
மாறாக, பல்வேறு தமிழ்க் கட்சிகள் வழக்கம்போல சிங்களக் கட்சிகளின் தலைவர்களுக்கே ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கருணா அம்மான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செந்தில் தொண்டமான், சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அதேசமயம், தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மனோ கணேசன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ரவூப் ஹக்கீம், மலையக மக்கள் முன்னணியின் இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அதேசமயம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை புறக்கணித்திருக்கிறார். இப்படியாக, இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்த்தலைவர்கள் பல்வேறு அணிகளாக பிரிந்துகிடக்கின்றனர்.
இலங்கை அதிபர் தேர்தலில் பலமுனைப் போட்டிகள் நிலவினாலும், ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாசா, அனுரகுமார திசநாயக்க ஆகிய மூவருக்கும் இடையில்தான் மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதிலும் குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளருமான சஜித் பிரேமதாசாவுக்கும், மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரும் ஜே.வி.வி கட்சியின் தலைவருமான அனுரகுமார திசநாயக்கவுக்கும் இடையில்தான் `நீயா? நானா?’ என்ற போட்டி தீவிரமாகத் தேர்தல் களத்தில் எதிரொளித்திருக்கிறது. இதில், சஜித் பிரேமதாசா அதிபராக வெற்றி பெற்றால் இந்தியாவுடன் இணக்கமாக இருப்பார் என்றும், அனுரகுமார திசநாயக்க வெற்றிபெற்றால் சீனாவுடன் இணக்கமாக இருப்பார் என்றும் யூகிக்கப்படுகிறது. ஏற்கெனவே, இந்திய அரசு நேபாளம், வங்காளதேசம், மாலத்தீவு, மியான்மர் என அண்டை நாடுகளின் உறவுகளில் கடுமையான விரிசலை சந்தித்திருக்கும் நிலையில், இலங்கையும் கைமீறிச் சென்றால் இந்தியாவின் பூகோள, அரசியல் நலனுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆகவே, நாளை செப்டர்ம்பர் 21-ம் தேதி நடைபெறவிருக்கும் இலங்கை அதிபர் தேர்தலின் முடிவுகள் இலங்கையின் எதிர்காலம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பையும் உள்ளடக்கியிருக்கிறது.
தேர்தல் முடிவுகள் எதுவாக இருப்பினும், அதிபராக வெற்றிபெறப்போகும் வேட்பாளரின் கையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச நாணய நிதியம், வங்கிகளிடம் வாங்கிய கடனை அடைப்பது, இலங்கையில் அந்நிய நாடுகளின் அரசியல் தலையீடுகளை சமாளிப்பது உள்ளிட்ட பல்வேறு சவால்கள் எதிர்நோக்கியிருக்கின்றன. ஆகமொத்தம், 2024 இலங்கை தேர்தலின் அதிபர் பதவி என்பது வைரக்கல் பதித்த முள்கிரீடம் என்பது திண்ணம்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb