Lebanon: பேஜர் வெடிப்பில் இறந்தவரின் இறுதி ஊர்வலத்தில் மீண்டும் வெடிப்பு – லெபனானில் பதற்றம்!

லெபனான் நாட்டில் பேஜர்களைத் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்துச் சிதறிய சம்பவம் நடந்துள்ளது. பேஜர் வெடிப்பின் போது மரணமடைந்த ஹிஸ்புல்லா ககுழுவைச் சேர்ந்தவரின் இறுதி ஊர்வலத்திலேயே ஒரு வெடிப்பு ஏற்பட்ட வீடியோ பரவி வருகிறது.

இதுவரை எத்தனைக் கருவிகள் வெடித்திருக்கின்றன என்பது குறித்த துல்லியமான தகவல்கள் வெளியாகவில்லை. வாக்கி டாக்கிகள் மட்டுமல்லாமல் சோலார் கருவிகள், கையடக்க ரேடியோக்கள் மற்றும் லேண்ட் லைன் ஃபோன்களும் வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த இரண்டாவது அலை கருவிகள் வெடிப்பில் 450 பேர் காயமடைந்ததாகவும், 20 பேர் கொல்லப்பட்டதாகவும் லெபனான் சுகாதாரத்துறைத் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே, பேஜர் வெடிப்பில் 2,800 பேர் காயமடைந்தனர், 2 குழந்தைகள் உட்பட 12 பேர் மரணமடைந்துள்ளனர்.

பேஜர் வெடிப்பில் இரானின் லெபனானுக்கான தூதுவர் மொஜ்தபா அமானியும் காயமடைந்ததாக இரான் ஊடகம் தெரிவித்துள்ளது. இரான் ஆதரவில் இருக்கும் லெபனான் ஆயுத அமைப்பான ஹிஸ்புல்லா, இந்த வெடிப்புகளுக்கு இஸ்ரேல்தான் காரணம் எனத் தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாட், சில மாதங்களுக்கு முன்பு ஹிஸ்புல்லா இறக்குமதி செய்த கருவிகளில் வெடிமருந்துகளை வைத்துவிட்டதாக மூத்த லெபனான் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் விதமாக இஸ்ரேல் பீரங்கி தளத்தை ஹிஸ்புல்லா ஆயுத அமைப்பு விமானப்படை தாக்கியதாகத் தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் தனது படைகளை லெபனானை நோக்கித் திருப்புவதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் முழுமையான போர் வெடிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன.