`கேள்வியெழுப்பிய இளைஞருக்கு சித்ரவதை; எஸ்.ஐ மீது நடவடிக்கை பாயாதது ஏன்?’ – கொதிக்கும் வேலூர் அதிமுக

வேலூர் அ.தி.மு.க சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு உட்பட அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பேசும்போது, “வேலூர் மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டத்தை பாதாளத்துக்குள் கொண்டுபோய் தள்ளிவிட்டார்கள் தி.மு.க-வைச் சேர்ந்த ஆட்சியாளர்கள். வேலூர் மக்களையும் சித்ரவதைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

எஸ்.ஆர்.கே.அப்பு

அமைச்சர் துரைமுருகனுடைய காட்பாடி தொகுதிக்குஉட்பட்ட சேண்பாக்கத்தில் இருந்து சேனூர் டி.கே.புரம் பாலாற்றின் குறுக்கே ஒருத் தடுப்பணை கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டன. டெண்டர் முடிந்து எட்டு மாதங்கள் ஆகின்றன. அதற்கான பில்லையும் கான்டிராக்டர் வாங்கிவிட்டார். அதன் பிறகும் அங்கு அமைக்கப்பட்டுள்ள ரெடிமிக்ஸ் கான்கிரீட் மிக்ஸிங் யூனிட்டை அப்புறப்படுத்தாமல் திருட்டுத்தனமாக மணல் எடுத்துகொண்டிருக்கிறார்கள்.

இதனால் அங்கு ஏற்பட்ட பள்ளத்துக்குள் சிக்கி யுவராஜ் என்ற இளைஞர் உயிரிழந்துவிட்டார். இதுவரை அந்தப் பகுதியில் மூன்று பேரின் உயிர்ப் போயிருக்கிறது. இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் எஸ்.பி-யிடம் மனுக்கள் கொடுத்து பலமுறை வலியுறுத்திவிட்டேன். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. `பொதுப்பணித்துறை கன்ட்ரோலில் இருக்கிறது’ என எஸ்.பி-யே இந்த விவகாரத்தை தட்டிக்கழிக்கிறார்.

விருதம்பட்டு எஸ்.ஐ ஆதர்ஷ்

இதையடுத்து, டி.கே.புரம் பகுதி மக்களே போராட்டத்தில் இறங்கி தட்டிக்கேட்டார்கள். அப்போது அங்கு வந்த விருதம்பட்டு காவல் நிலையத்தைச் சேர்ந்த எஸ்.ஐ ஆதர்ஷ் என்பவர் கேள்வியெழுப்பிய விஜய் என்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதோடு ஒரு கஞ்சா கைதியைபோல காவல் நிலையத்துக்கு இழுத்துசென்றார். காவல் நிலையத்துக்குள் அந்த இளைஞரை மேஜை மீது படுக்க வைத்து கொடூரமாக அடித்து சித்ரவதை செய்தார். `இதுதான் திராவிட மாடலா?’. புகாருக்குள்ளான அந்த எஸ்.ஐ கொலைச் செய்தாலும் அவரை மாற்ற முடியாது என்று ஆளுங்கட்சியினர் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு காட்பாடியில் அட்டூழியங்கள் நடைபெற்றுகொண்டிருக்கின்றன. ஆனால், மனசாட்சி இல்லாமல் சாதாரண பாத்ரூம் டெண்டரை எடுப்பதற்காக எம்.எல்.ஏ தொடங்கி, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் பலரும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்றார் கொந்தளிப்போடு.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb