“நாம் என்ன பேசுகிறோம்… அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதை இஸ்ரேல் ரகசியமாக கண்காணித்து வருகிறது. அதை வைத்து எப்போது வேண்டுமானாலும் நம் மீது தாக்குதல் நடத்தலாம். அதனால் நம் அமைப்பினர் யாரும் செல்போன் பயன்படுத்த வேண்டாம்” என்ற எச்சரிக்கை ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹிடம் இருந்து பறக்க, மொத்த அமைப்பினரும் செல்போனில் இருந்து பேஜருக்கு மாறினர்.
இந்த மாற்றம் நிகழ்ந்த சில நாள்களிலேயே (கடந்த செவ்வாய்கிழமை) ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர் மட்டுமல்ல…லெபனானில் பொதுமக்கள் வைத்திருந்த பேஜர்களுமே வெடித்து, இதுவரை 12 பேர் பலியாகி உள்ளதாகவும், 2,500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பு பற்றி…
மத்திய கிழக்காசிய நாடான லெபனானை சேர்ந்தது ஹிஸ்புல்லா அமைப்பு. ஹிஸ்புல்லா என்பதற்கு ‘கடவுளின் கட்சி’ என்று பொருள். இது ஒரு ஷியா முஸ்லீம் அமைப்பு ஆகும்.
1975-ல் தொடங்கி 1990 வரை நடந்த லெபனான் உள்நாட்டு போரில் 1982-ம் ஆண்டு பிறந்தது ஹிஸ்புல்லா அமைப்பு. இதன் ஆரம்ப கொள்கையே தெற்கு லெபனானில் இருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பை அகற்றுவது தான். அதை வெற்றிகரமாக 2000-ம் ஆண்டு சாதித்தது.
ஹிஸ்புல்லா வெறும் போராளி அமைப்பு மட்டும் அல்ல…1992-ம் ஆண்டிலிருந்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறது. இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்.
பிரச்னை என்ன?
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தான் இப்போது நடந்துக்கொண்டிருக்கும் இஸ்ரேல் – லெபனான் தாக்குதலுக்கு அடிப்படை. 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலை சேர்ந்த பலர் இறந்தனர்…சிலர் பணய கைதிகளாகவும் கொண்டு செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்து இதுவரை ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்திருக்கிறது.
இந்தப் போரில் பாலஸ்தீனத்திற்கு லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஆதரவு அளித்து வருகிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ராக்கெட் குண்டுகள், ஏவுகணை தாக்குதல்கள் என வான்வெளி தாக்குதல்களை ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இருத்தரப்பிலுமே உயிர் பலி, சேதம் என பாதிப்புகள் அதிகம்.
ஏன் பேஜர்?
இந்த நிலையில் தான், ‘செல்போன் பயன்படுத்த வேண்டாம்’ என்று ஹிஸ்புல்லா அமைப்பு தலைவர் எச்சரித்து, அந்த அமைப்பினரும் செல்போனில் இருந்து பேஜர்களுக்கு தாவியிருக்கின்றனர்.
செல்போன்களுக்கு பதிலாக ஹிஸ்புல்லா அமைப்பினர் பேஜருக்கு மாறியதற்கு பல காரணங்கள் உண்டு. மொபைல் போனை எளிதாக டிராக் செய்துவிடலாம். ஆனால் பேஜரை டிராக் செய்வதும், அதை வைத்து கண்காணிப்பதும் மிக மிக கடினம். இன்டர்நெட், நெட்வர்க் என எதுவும் இல்லாமல் எளிதாக பேஜர்களை இயக்கலாம்.
ஹிஸ்புல்லா அமைப்பினரை தவிர, லெபனானில் பொதுமக்கள் பலருமே பேஜர் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
பேஜர்கள் வெடிப்பு!
கடந்த செவ்வாய்க்கிழமை, லெபனானில் சூப்பர் மார்க்கெட் தொடங்கி பல இடங்களில் மக்களும், அமைப்பினரும் வைத்திருந்த பேஜர்கள் வெடிக்கத் தொடங்கி உள்ளன. இதில் இதுவரை வெளியாகி உள்ள தகவலின் படி, 12 பேர் பலியாகி உள்ளனர். 2,500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த பேஜர் வெடிப்பு சம்பவம், ஹிஸ்புல்லா அமைப்பின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் லெபனானின் தலைநகரான பெய்ரூட், தெற்கு லெபனான், கிழக்கு பெக்கா பள்ளத்தாக்கு போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பேஜர்கள் ஒன்றாக வெடித்து சிதறியது.
அடுத்து வாக்கி டாக்கி, சோலார் தகடுகள்…
லெபனானில் பேஜர்கள் வெடித்த அதிர்ச்சி அடங்கும் முன்னர், நேற்று வாக்கி டாக்கிகளும், வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் சோலார் தகடுகளும் வெடித்து இன்னும் பயத்தையும், பீதியையும் கிளப்பியுள்ளது. இதிலும் 30-க்கும் மேற்பட்டோர் பலி ஆகியிருக்கின்றனர். 3,250 பேர் காயமடைந்துள்ளனர்.
பேஜர் வெடித்து இறந்த ஹிஸ்புல்லா அமைப்பினரின் இறுதி சடங்கில் கலந்துக்கொண்டோரின் வாக்கி டாக்கி வெடித்தது மேலும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.
இந்த வெடிப்புகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மட்டுமல்லாமல், பொதுமக்கள், குழந்தைகள், சிறுவர் சிறுமியர்களும் உயிரிழப்பதும், காயமடைவதும் பேரதிர்ச்சியாக இருக்கிறது.
இங்கேயும் வேண்டாம்!
பேஜர், வாக்கி டாக்கி, சோலார் தகடுகள் என அடுத்தடுத்து வெடிப்புகள் நிகழ்வதன் காரணமாக, லெபனானின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றது. மேலும் எதாவது வெடிப்புகள் நடக்கலாம் என மருத்துவமனை ஊழியர்கள் யாரும் வயர்லெஸ் சாதனங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவசர கால நிலை அமல்படுத்தி விடுப்பில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.
இதுவரை எந்த பதிலும் இல்லை…
இந்த வெடிப்புகளுக்கு காரணம் இஸ்ரேல் தான் என ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம்சாட்டி வருகிறது. மேலும் ஐ.நாவும், பல நாடுகளும் இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் இஸ்ரேல் இன்னமும் இந்த சம்பவம் குறித்து எதுவும் பேசவில்லை. தாங்கள் தான் இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்றும் கூறவில்லை.
காரணம் என்ன?
இப்போது வெடித்துள்ள பேஜர்கள், வாக்கி டாக்கி, சோலார் தகடுகள் அனைத்தும் வாங்கும்போதே, அதில் இஸ்ரேலால் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பு பேஜர்கள் வாங்கிய தைவான் நிறுவனம் தங்களுக்கும், பேஜர் வெடிப்புக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளது.
இந்த வெடிப்புகள் இன்னமும் பிரச்னையையும், தாக்குதல்களையும் அதிகப்படுத்துமே தவிர, வேறு எதுவும் நடக்காது. இன்னும் சில நாள்களில் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் ஓராண்டை முடிவு செய்யவிருக்கும் நிலையில், இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
இதே மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருந்தால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் சில பொருளாதார மாற்றங்கள் ஏற்படலாம். இன்னும் என்ன நடக்கப்போகிறது என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!