`தமிழ் ஆசிரியர் பணிக்கு எதற்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும்’ – மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்

வெளிநாடுகளில் இந்திய கலாசார மையங்களில், தமிழ் ஆசிரியர் பணிகளுக்கு எதற்கு இந்தி, சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் கேள்வியெழுப்பி கண்டனம் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (Indian Council for Cultural Relations – ICCR), செப்டம்பர் 13-ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

ICCR

அதில், `குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளில் இந்திய மிஷன்கள்/ கலாசார மையங்களில் தமிழ்மொழி ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது’ என ICCR குறிப்பிட்டிருந்தது.

அதோடு, இந்தப் பணிக்கான தகுதி, அனுபவம், விண்ணப்ப படிவம், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த தகவல்களை தங்களின் இணையதளப் பக்கத்தில் பார்க்குமாறும் ICCR தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில், “தமிழாசிரியர் பணிக்கு இந்தியும், சமஸ்கிருதமும் எப்படி விரும்பத்தக்க தகுதியாக இருக்க முடியும்?

வெளியுறவுத்துறையின் அப்பட்டமான இந்தித் திணிப்பு மற்றும் தமிழ் விரோத முயற்சிக்கு எனது கடும் கண்டனம். வெளியுறத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும்.” என்று ட்வீட் செய்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ICCR இயக்குநர் குமார் துஹின் ஆகியோருக்கு சு.வெங்கடேசன் கடிதமும் எழுதியிருக்கிறார்.