Haryana: காங்கிரஸ் ரூ.2000, பாஜக ரூ.2100; பறக்கும் வாக்குறுதிகள், பரபரப்பாகும் தேர்தல் களம்!

ஹரியானாவில் 90 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்துக்கு, அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற விருக்கிறது.

இந்தத் தேர்தலில் பலம் வாய்ந்த கட்சிகளாகக் கருதப்படும் காங்கிரஸும், பா.ஜ.க வும் தனித்துக் களம் காணுகின்றன. காங்கிரஸ் சார்பாக பூபிந்தர் சிங் ஹூடா, பா.ஜ.க சார்பாக நயப் சிங் சைனி முதல்வர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸ் அணியில் சேராமல் தனித்தனியே போட்டியிடுகின்றன. இது தவிர ஜே.ஜே.பி, ஏ.எஸ்.பி ஒரு கூட்டணி, ஐ.என்.எல்.டி, பகுஜன் சமாஜ் ஒரு கூட்டணி எனக் கைகோர்த்திருக்கின்றன.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை பிரச்னை எனப் பல பிரச்னைகளால் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த ‘பா.ஜ.க’வின் மீது ஹரியான மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர் என்ற கருத்து பரவலாக உள்ளது.

ஹரியானா சட்டமன்ற தேர்தல்

இதற்கிடையே பா.ஜ.க – ஜே.ஜே.பி கூட்டணியில் கலகக் குரல்கள் வெடிக்க, முதல்வர் பதவியிலிருந்து மனோகர்லால் கட்டார் மாற்றப் பட்டு, நயப் சிங் சைனி முதல்வராக்கப்பட்டார். ஆனாலும், மக்களிடையே எதிர்ப்பு அலை நீடிக்கவே செய்தது. போதா குறைக்கு இந்தத் தேர்தலில் புதுமுக வேட்பாளர்கள் நிறைய பேருக்கு பா.ஜ.க சீட் கொடுத்திருப்பதால், மூத்த தலைவர்கள் பலர் கட்சி மாறியிருக்கின்றன, அதில் சிலர் சுயேட்சையாக நிற்க முடிவெடுத்திருக்கின்றன.

‘பா.ஜ.க’ விற்கு எதிரான இந்த எதிர்ப்பு அலையைப் பயன்படுத்திக் கொண்டு, இந்த முறை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடலாம் என்று வியூகம் வகுத்துள்ளது காங்கிரஸ். மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக நிறுத்தப் பட்டிருப்பது காங்கிரஸுக்குக் கூடுதல் பலமாகவே கைசேர்ந்திருக்கிறது.  

பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த ‘பா.ஜ.க’வின் மீது ஹரியான மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, அதைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற தேர்தல் வியூகம் வகுத்திருக்கும் காங்கிரஸ் என ஹரியான சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்திருக்கிறது.

இந்நிலையில் பா.ஜ.க – காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் போட்டிப் போட்டு பிரசாரத்தில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து வருகின்றன. அதில் கவனம் பெற்ற சில முக்கியமான வாக்குறுதிகளைப் பார்க்கலாம்.

காங்கிரஸ்

– 18 – 60 வயதுவரை இருக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000.

– சிண்டர் விலை 500 ரூபாயாக நிர்ணயிக்கப்படும்.

– வேலை வாய்ப்பு; நிரப்பபடாமல் இருக்கும் 2 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

– போதைப்பொருள்கள் புழக்கமற்ற ஹரியானாவை உருவாக்குவோம். அதுசார்ந்த நடவடிக்கைகள், திட்டங்கள் வகுக்கப்படும்.

– ரூ.25 லட்சம் வரையிலான இலவச மருத்துவக் காப்பீடு.

– விவசாயப் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நியாயமாக நிர்ணயிக்கப்படும்.

– 300 யூனிட் வரை இலவச மின்சாரம்

– பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும், மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும் ரூ.6000 வழங்கப்படும்.

– வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கும் நிலமற்ற மக்களுக்கு நிலம் வழங்கப்படும்.

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் – பா.ஜ.க

பா.ஜ.க

– ‘லடோ லக்ஷ்மி யோஜ்னா’ திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,100.

– சிண்டர் விலை 500 ரூபாயாக நிர்ணயிக்கப்படும்.

– 50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

– படித்த 5 லட்சம் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

– ‘சிராயு ஆஸ்மான் யோஜ்னா’ திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலான இலவச மருத்துவக் காப்பீடு.

– 25 வகையான விவசாயப் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும்.

– மருத்துவம், பொறியியல் படிக்கும் OBC, SC மாணவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்.

– கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இரண்டு சக்கர வாகனம் வழங்கப்படும்.

– 5 லட்சம் வீடற்ற மக்களுக்கு வீடு கட்டித் தரப்படும்.

இப்படி பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை இரண்டு கட்சிகளும் போட்டிப் போட்டு அறிவிக்க ஹரியான தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.