திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் பணியில் இருந்தார். அப்போது, சேலத்தில் இருந்து டால்மியாபுரம் நோக்கி சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் சமையல் எரிவாயு டெலிவரி செய்யும் ஒருவர் மோதி இருசக்கர வாகன ஓட்டி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதனையடுத்து, அப்பகுதியில் பணியில் இருந்த காவலர் அரசு என்பவர் அவர்களை மீட்டு போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த பாலக்கரை பகுதியைச் சேர்ந்த கிரிஜா என்கின்ற பெண் யூடியூபர், அங்கு நடந்தவற்றி வீடியோ எடுத்து, போலீஸாரிடம் பிரச்னை செய்துள்ளார்.
அதை தட்டிக் கேட்ட காவலரிடம் நான் ஒரு செய்தியாளர் எனவும் நான் ஒரு வழக்கறிஞர் எனவும், உங்களால் என்ன செய்ய முடியும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அந்த காவலரை தகாத வார்த்தைகளில் கடுமையாகத் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து காவலர் அரசு, கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரில், பணியில் இருந்த என்னை பணியாற்ற விடாமல் தடுத்ததாகவும், தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும், அருகிலிருந்த பூக்கடையில் நிழலுக்காக அமைக்கப்பட்டிருந்த குடையை எடுத்து என்னை தாக்க முற்பட்டதாகவும், மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், கொள்ளிடம் போலீஸார் அப்பெண் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கிரிஜா என்ற அந்த பெண் கடந்த ஆண்டு காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றிய சுகுமார் மீது ஆட்சியரிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாரளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அப்படி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் சுகுமார் பணியிட மாற்றமும் செய்யப்பட்டார்.
மேலும் பல்வேறு இடங்களில் சென்று நான் ஒரு பத்திரிக்கையாளர் எனவும், வழக்கறிஞர் எனவும் கூறி இப்பெண் பலருக்கும் தொந்தரவு கொடுத்த வருவதாக, போலீஸார் இவர்மீது குற்றம்சாட்டுகின்றனர். போலீஸாரை மிரட்டிய வழக்கில் பெண் யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.