நாங்கள்லாம் அப்பவே இப்படி… ‘AI’ பாணியில் அன்றே மக்களை ஏமாற்றிய ‘நாஜி’ பத்திரிகை!

ஏஐ மூலம் இப்போது அங்கிங்கெனாதபடி செய்யப்படும் டகால்டி வேலைகளை பல தசாப்தங்களுக்கு முன்பே ஹிட்லரின் நாஜி ஆதரவு மாத இதழ் ஒன்று செய்து வந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு எல்லா துறைகளிலும் மனிதர்களுக்கு சவால் விடும் வகையில் மாபெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில், (ஒரு காலத்தில் என்றால் ஒரு 2, 3 ஆண்டுகளுக்கு முன்பு) செய்துமுடிக்க பல மணி நேரங்கள் அல்லது நாட்கள் எடுக்கும் வேலைகளை ஒரு சில நொடிகளிலேயே சுடச்சுடத் தருகிறது ஏஐ.

உதாரணமாக, நம்முடைய கற்பனையில் தோன்றும் விஷயங்களை உள்ளீடாக கொடுத்தால் நம் கற்பனையையே விஞ்சும் வகையில் ஓரிரு நொடிகளிலேயே அதனை உருவாக்கி தந்து விடுகிறது. இத்தனைக்கும் தற்போது இந்த ஏஐ அதன் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இது நேர்மறையான முன்னேற்றம்தான் என்றாலும், இது பலவகைகளில் பாதகமாகவும் அமைந்து விடுவதையும் பார்க்கிறோம். உதாரணமாக, ஏஐ மூலம் பிரபலங்களின் குரல் மற்றும் உருவங்களை நகலெடுத்து அவற்றைப் போலவே அச்சு அசலாக போலியாக உருவாக்குவதும் அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது.

அண்மையில், இந்தியாவின் சில முன்னணி நடிகைகளின் முகத்தை ஏஐ மூலம் தத்ரூபமாக மற்றொரு வீடியோவில் உள்ள பெண்ணின் உடலில் பொருத்தி சமூக வலைதளங்களில் பரப்பிய சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இது ஒருபுறமென்றால், இன்னொரு புறம் அரசியல்வாதிகள் தான் செய்த தவறுகளிலிருந்து தப்பிக்க ஏஐ மீது பழியை தூக்கிப் போடுவதும் நடக்கிறது.

இப்படியான சூழலில், ஏஐ கண்டுபிடிக்கப்படுவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்பே ஹிட்லரின் நாஜி ஆதரவு மாத இதழ் ஒன்று ஏஐ தற்போது செய்துகொண்டிருக்கும் வேலையை செவ்வனே(?) செய்து கொண்டிருந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம். தினசரி பத்திரிகைகளும் நாளிதழ்களும் ஓவியங்களுக்கு பதிலாக புகைப்படங்களை பயன்படுத்தத் தொடங்கியிருந்த காலக்கட்டம். இந்த பத்திரிகைகள் வீமர் குடியரசு ஆட்சி காலத்தில் (1919 – 1933) பிரபலமாகின. அதாவது தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர்கள் கட்சியின் எழுச்சிக்கு முந்தைய காலகட்டம். சுருக்கமாக சொன்னால் ‘நாஜி’ கட்சி.

அடால்ஃப் ஹிட்லர்

1920-களில் ஜெர்மனியில் பொருளாதார நிலையற்றதன்மை, நாடாளுமன்ற முடக்கம், சமூக குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் பரவலாக இருந்தது. இத்தகைய அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான குழப்பம் நிலவி வந்த ஒரு காலகட்டத்தில் நாஜிக்களால் நடத்தப்பட்ட மாத இதழ் ஒன்று புனையப்பட்ட போலி புகைப்படங்களை தொடர்ந்து தீவிரமாக பிரசுரித்து வந்தது. அதன் பெயர் Illustrierter Beobachter. ஆங்கிலத்தில் Illustrated Observer.

1920-ஆம் ஆண்டு அரசியல் கட்சியாக உருவெடுத்த நாஜிக்கள், 1926-ல் இந்த மாத இதழை தொடங்கினர். புனையப்பட்ட மற்றும் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்களை தொடர்ந்து பகிர்வதும், அவை உண்மையா, பொய்யா என்று தெரிந்து கொள்ளாமல் விடுவதும் பாசிசத்தை எந்த அளவுக்கு எழுச்சி அடைய உதவுகிறது என்பதை இந்த மாத இதழின் செயல்பாட்டின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

1926-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான Illustrated Observer இதழ், ஒரு சில புகைப்படங்களை பெரிய அளவில் பிரசுரித்திருந்தது. அது நாஜிக் கட்சியினர் நடத்திய ஒரு பேரணியின் புகைப்படங்கள். அதில் ஒரு புகைப்படம், அந்தக் கூட்டத்தை பிரம்மாண்டமாக காட்டுவதற்காக வைட் ஆங்கிள் கேமரா லென்ஸ் மூலம் எடுக்கப்பட்டது. கூடவே வாசகர்களை ஏமாற்றும் தலைப்புகளையும் நாஜிக்கள் அவற்றுக்கு கொடுத்திருந்தனர். இத்தனைக்கும் அந்த காலகட்டத்தில் நாஜிக் கட்சி மிகச் சிறிய ஒரு கட்சியாகத்தான் இருந்தது. ஆனால், இதுபோன்ற புனையப்பட்ட புகைப்படங்களும், போலியான செய்திகளும் அவர்கள் எதிர்காலத்தில் அசுர பலம் பெறுவதற்கான எரிபொருளாக இருந்தன என்பதே உண்மை.

அந்த புகைப்படங்களுக்கு நாஜிக்கள் கொடுத்திருந்த தலைப்பு “பொய் சொல்வது யார்? போட்டோகிராபியா அல்லது யூத பத்திரிகைகளா?” – இப்படியான தலைப்பின் மூலம் அந்த பேரணியில் கலந்து கொண்டவர்களின் உண்மை நோக்கத்தை தோலுரித்துக் காட்டிய ஜெர்மன் ஊடகங்களை நாஜிக்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினர்.

சில மாதங்களுக்குப் பிறகு Illustrated Observer-ன் கிறிஸ்துமஸ் சிறப்பிதழில் பிரசுரிக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரைக்கு இப்படி தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது: ‘யூதர்களும் அவர்களின் பணியாட்களும்”. அந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருந்த புகைப்படத்தில் அப்போதைய அமெரிக்க அதிபர் கால்வின் கூலிட்ஜ் நடுவில் இருக்க அவரைச் சுற்றி உயரமான தொப்பிகளுடனும், நீண்ட தாடிகளுடனும் பாரம்பரிய உடையணிந்த யூதர்கள் சிலர் இருந்தனர்.

ஆனால், உண்மையான புகைப்படம் வேறு. நாஜிக்கள் அந்தப் புகைப்படத்தை மிக கவனமாக கிராப் செய்து பிரசுரித்திருந்தனர். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற யூதர்களின் மதரீதியான ஒரு கூட்டத்தில் நூற்றுக்கும் மேறபட்ட யூதர்கள் கலந்து கொண்ட புகைப்படம் அது. அதை மிக லாவகமாக கிராப் செய்து, தவறான தலைப்பை கொடுத்ததன் மூலம், யூதர்களின் சதிகார கூட்டம் ஒன்று அமெரிக்க அதிபரை கட்டுப்படுத்துவதாக வாசகர்களை மூளைச் சலவை செய்ய முயன்றனர் நாஜிக்கள்.

வீமர் குடியரசு ஆட்சியின் இறுதிகட்டத்தில் இந்த புகைப்பட புனைவுகள் பரவலாக இருந்தன. 1933-ஆம் ஆண்டு நாஜிக்கள் ஜெர்மனியில் ஆட்சியை பிடித்ததில் இவையும் ஒரு முக்கிய பங்கு வகித்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான தலைப்புகளின் மூலம் வாசகர்களின் மனதில் சந்தேகத்தை நாஜிக்கள் தொடர்ந்து விதைத்து வந்துள்ளனர்.

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இந்த காலகட்டத்திலேயே போலி எது, உண்மை எது என்பதை பாமர மக்கள் மட்டுமின்றி படித்தவர்களால் கூட சரிபார்த்து உணர முடியாத நிலையில், எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத, பத்திரிகைகள் மட்டுமே ஒரே ஊடகம் என்ற சூழல் கொண்ட அந்த காலகட்டத்தில் அவை மக்களின் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை கற்பனை செய்துகொள்ளலாம்.

நாஜிக்கள் ஊடகங்களில் அப்போது செய்து வந்தவை பல தசாப்தங்களுக்குப் பிறகு தற்போது வேறு மேம்பட்ட வடிவம் எடுத்துள்ளன. தற்போதைய அரசியல் சூழலில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் போலி புகைப்படங்கள், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள், குரல் பதிவுகள், வாட்ஸ்-அப் ஃபார்வேர்டுகள் ஆகியவற்றோடு Illustrated Observer செய்தவற்றை ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அவற்றை மிக இலகுவாக எடுத்துக் கொண்டு, அவை நம்பகமானவையா என்று ஆராயாமல் போகிற போக்கில் பகிர்வது எதிர்காலத்தில் மிக பூதாகரமான விளைவுகளை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY