திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள மின்னூர் ஊராட்சி சின்னப்பள்ளிக்குப்பத்தில் முகாம்வாழ் தமிழர்கள் வசிப்பதற்காக 236 குடியிருப்புகள் கட்டப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி தான் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இது தொடர்பான நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் அகதிகள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு குடியிருப்புகளை ஒப்படைத்தார்கள். இதையடுத்து, புன்முறுவலோடு குழந்தைகளுடன் புதிய வீடுகளில் குடியேறினார்கள் அந்த மக்கள். இந்த நிலையில், 20 நாள்களுக்குள்ளாக சில குடியிருப்புகளில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
காந்தன் – விஜயா என்கிற தம்பதிக்கு வழங்கப்பட்டிருந்த வீட்டின் உட்புற மேற்பூச்சு மொத்தமாக உதிர்ந்து கீழே கொட்டியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. `தரமற்ற கட்டுமானம்’ எனக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் முகாம் குடியிருப்புகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் தர்ப்பகராஜ், “ஒரு குடியிருப்பில் மட்டும் உட்புற கூரையினுடைய மேற்பூச்சு பெயர்ந்து விழுந்திருக்கிறது. இது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறேன். விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அந்த வீட்டையும் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.