‘நான் எல்லாம் 60 வயசு வரைக்கு இருப்பேனா?’ என்பது தான் இன்றைய தலைமுறையினருக்கு மில்லியன் டாலர் கேள்வி. ஆனால், 100 வயதைத் தாண்டி செம்ம ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார் கோவையை சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி. இன்று நடக்கவிருக்கும் திமுக முப்பெரும் விழாவில், இவர் ‘பெரியார் விருது’ பெற உள்ளார்.
யார் இவர்?
பாப்பம்மாள் பாட்டிக்கு சொந்த ஊர் தேனாவரம். தனது மூன்று வயதில் கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்திற்கு வந்தவர், இன்று வரை அங்கு தான் வசித்து வருகிறார். இப்போது இவருக்கு வயது 108.
சின்ன வயதிலேயே பெற்றோரை இழந்த இவருக்கும், இவரது அக்காவுக்கும் பாட்டி தான் அடைக்கலம் கொடுத்துள்ளார். இவர் செய்த முதல் தொழில் மளிகை கடையாம். இவரது அம்மா, அப்பா வழியில் இவரும் மளிகை கடை வைத்து தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
ஹோட்டல் டூ விவசாயம்…
பாப்பம்மாள் பாட்டி 20 வயதில் காதல் திருமணம் செய்திருக்கிறார். இவருக்கு குழந்தைகள் இல்லை. திருமணத்திற்கு பிறகு கடை வியாபாரம் நன்றாக செல்ல, ஹோட்டல் தொடங்கியிருக்கிறார்கள் இவரும், இவரது கணவரும். ஆரம்பத்தில் ஹோட்டலில் வந்த வருமானத்தில் 4 ஏக்கர் 29 சென்ட் நிலத்தை வெறும் 700 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். இப்போது இவருக்கு கிட்டதட்ட 10 ஏக்கர் நிலம் சொந்தம்.
இயற்கை விவசாயி…
கணவர் இறந்த பிறகு, வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விவசாயத்தை கற்றார். இன்றுவரை இவர் வயலில் இறங்கி இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவர் விவசாயம் கற்ற பல்கலைக்கழகத்திலேயே விவாதக்குழு உறுப்பினராக இருக்கிறார். விவசாயத்தில் இவரது பங்களிப்பை பாராட்டி, மத்திய அரசு இவருக்கு 2021-ம் ஆண்டு பத்மஶ்ரீ விருதை வழங்கியுள்ளது.
கலைஞரை பார்க்க விருப்பம் இருந்தது..
விவசாயத்தில் மட்டுமல்ல… இவருக்கு அரசியலிலும் அதிக ஆர்வம். திமுக கூட்டங்களில் கலந்துக்கொள்ளும் வழக்கம் இவருக்கு உள்ளதாம். இவருக்கு கலைஞர் கருணாநிதியை பார்க்க மிகவும் விருப்பம் இருந்தது. அந்த ஆசையை ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அடுத்த மூன்று மாதங்களிலேயே கலைஞர் இறந்துவிட்டதால், இவரது ஆசை நிறைவேறவில்லை.
மோடி சந்திப்பு…
கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த சர்வதேச சிறுதானிய மாநாட்டில் பாப்பம்மாள் பாட்டி கலந்துக்கொண்டார். அப்போது இவரின் காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசிர்வாதம் வாங்கியது மிகவும் பேசப்பட்டது. அதற்கு முன்பு, 2021-ம் ஆண்டு மோடி கோவை வந்திருந்தப்போது, இவரை நேரில் சந்தித்தார்.
இன்று இவர் திமுக பவள விழாவில் ‘பெரியார் விருது’ வாங்க உள்ளார்.