Vijayakanth: 20-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தேமுதிக- தொண்டனான ரசிகனின் கனவு மீட்டெடுக்கப்படுமா?

விஜயகாந்த் தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதவர்.

தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலத்தில் தனிக்கட்சி தொடங்கியது, முதல் சட்டசபைத் தேர்தலை தனியாகச் சந்தித்து, கணிசமான வாக்குகளை வாங்கியதோடு விருத்தாசலத்தில் திமுக, அதிமுக வேட்பாளரைத் தோற்கடித்து தனியாளாக சட்டசபைக்குள் நுழைந்தது, தொடர்ந்து கருணாநிதியின் காலத்திலேயே திமுகவை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி, எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தது என விறுவிறுவென விஜயகாந்த் வளர்த்தெடுத்த ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ 20-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இருபதாண்டு பயணத்தில் முதல் பத்தாண்டுகள் ஓ.கே. ஆனால் அடுத்த பத்தாண்டுகள்?

அதிமுகவுடனான கூட்டணி முறிவு, சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு எதிராகத் திரும்பியது, விஜயகாந்துக்கு ஒத்துழைக்காத உடல்நிலை, தொடர் தோல்விகள் விஜயகாந்த்தின் மரணம் என வரிசையாக சறுக்கல்கள்.

இரண்டு பெரிய கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் பார்க்க நினைத்த தேமுதிக எங்கு சறுக்கத் தொடங்கியது? மீண்டும் ஆரம்பகால வேகத்துக்கு அதனால் திரும்ப இயலுமா? – பார்க்கலாம்

மக்களுடனும் ஆண்டவனுடம்தான் கூட்டணி!

ரசிகர்களை ஒருங்கிணைத்து கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்கிற பேச்சுகள் அடிபட்டதுமே விஜயகாந்துக்கு எதிரான வேலைகள் சில நடக்கத் தொடங்கின. அப்போது திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தது. டி.ஆர்.பாலு மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர். கோயம்பேட்டில் அமைந்திருந்த விஜயகாந்தின் கல்யாண மண்டபம் பாலம் கட்டுவதற்குத் தடையாக இருப்பதாக இடிக்கச் சொல்லியது அந்தத் துறை. மண்டபத்தின் ஒரு பகுதியைக் காப்பாற்ற விஜயகாந்த் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. தான் கட்சி தொடங்குவதை விரும்பாமல் தான் இந்த நடவடிக்கை என நினைத்தார் விஜயகாந்த். கலைஞர்  மீது இதுவரை இருந்த பிரியம் இந்தச் சம்பவத்துக்குப் பின் குறையத் தொடங்கியது.

இன்னொருபுறம், வட மாவட்டங்களில் ரசிகர் படை அதிகமிருந்த விஜயகாந்தின் வருகை தன் கட்சிக்கு பாதகத்தை உண்டாக்கலாமென நினைத்த பா.ம.க தரப்பிலும் விஜயகாந்துக்கு ஏக குடைச்சல்.

எல்லாவற்றையும் புறந்தள்ளி, ‘மக்களுடனும் ஆண்டவனுடனும்தான் கூட்டணி’ எனத் துணிச்சலாக களமிறங்கினார் விஜயகாந்த். 2005ம் ஆண்டு உதயமானது தேமுதிக.

ஜெயலலிதாவுடன் கூட்டணி!

2006ல் சட்டமன்றத் தேர்தல். கூட்டணி ஏதும் அமைக்காமல் அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்கினார். ஆளுங்கட்சியான அதிமுக மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க முயற்சித்தது. திமுகவுக்கு இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற நெருக்கடி. ஆனால் இரண்டு தரப்புக்கும் ஒரு பாதிப்பை உருவாக்கினார் விஜயகாந்த்.

அதிமுக ஆட்சியை இழந்தது. கணிசமான தொகுதிகளில் அதன் வேட்பாளர்கள் விஜயகாந்த் வேட்பாளர்களால் வெற்றி வாய்ப்பை இழந்தனர். திமுகவுக்கு பெரும்பான்மையுடன் ஆட்சி கிடைக்கவில்லை. இதற்குமே காரணம் தேமுதிக பிரித்த வாக்குகளே.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

கலைஞர் மற்றும் ஜெயலலிதா இருவரின் பார்வையும் விஜயகாந்த் பக்கம் திரும்பியது இந்தத் தேர்தலுக்குப்  பிறகுதான்.

தன் பக்கம் வருவார் என தி.மு.க தீவிரமாகக் காத்திருந்தது. இன்னொருபுறம் ஜெயலலிதா குணத்துக்கும் தனக்கும் செட் ஆகுமா என்ற யோசனையும் விஜயகாந்த்துக்கு ஓடியதாகச் சொன்னார்கள்.

கடைசியில் சோ உதவியுடன் ஜெயலலிதா நினைத்ததைச் சாதித்தார். அதிமுக தேமுதிக கூட்டணி அமைத்து 2011 தேர்தலைச் சந்தித்து வெற்றியும் கண்டார்கள். ஜெயலலிதா முதலமைச்சர். விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவர்.

`யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டேன்!’ என்ற விஜயகாந்தின் வார்த்தைகள் கேலிக்குள்ளாக நடுநிலை வாக்காளர்களிடமிருநது விலகினார் விஜயகாந்த்.

கொஞ்ச நாள் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் ‘எங்களால் தான் ஆட்சி அமைத்தீர்கள்’ என தேமுதிகவினரும், ‘எங்களால்தான் உங்களுக்கு எதிர்கட்சி அந்தஸ்து’ என அதிமுகவினரும் பரஸ்பரம் பேசத் தொடங்க, சட்டசபையில் ஜெயலலிதா- விஜயகாந்த் இருவரிடையே நேரடி வாக்குவாதம் தொடங்கியது. விவாதம் அனல் பறக்க, விஜயகாந்த் நாக்கை துருத்த, ஜெ.கண் சிவக்க என அதற்கடுத்து நிகழந்ததெல்லாம் நாடறியும். அதிமுகவுடனான கூட்டணி உடைந்ததன் விளைவு உட்கட்சியிலும் பிரச்னை. பல எம்.எல்.ஏ.க்களை விஜயகாந்துக்கு எதிராகத் திருப்பிவிட்டது அதிமுக.

நானே முதலமைச்சர்!

கட்சி தொடங்கிய பிறகு மூன்றாவதாக வந்தது 2016 தேர்தல். அதிமுக விஜயகாந்த் மீது கடும் கோபத்திலிருந்ததால் அந்தப் பக்கம் செல்ல இயலாது.

திமுகவுக்குமே கோபம்தான். அதனால் தேமுதிக கூட்டணிக்கு அவரகளும் மெனக்கெடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ‘வந்தால் பார்க்கலாம்’ என்கிற மனநிலையில் திமுக இருந்ததாகச் சொல்லப்பட்டது.

விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு வைகோ, திருமாவளவன், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்ந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கினார்கள்.

விஜயகாந்த் ஒருவேளை திமுக கூட்டணிக்குச் சென்றிருந்தால், திமுக ஆட்சியைப் பிடித்திருக்கலாமென அப்போது செய்திகள் வெளியாகின. அதிமுக ஆட்சியைத் தக்க வைக்க, அதேநேரம் திமுக மீண்டும் எதிர்கட்சியானது. விஜயகாந்த்தின் வாக்குகள் எங்கு போனதெனத் தெரியாமல் போயின.

கட்சி பலவீனமாக, இன்னோருபுறம் விஜயகாந்தின் உடல்நிலையும் மோசமானது. இந்தச் சூழலில்தான் கடைசியாகக் கடந்த பொதுத்தேர்தல். உடல்நலப் பாதிப்பால் ஆக்டிவ் அரசியலிலிருந்து விஜயகாந்த் விலகியிருக்க, அவரது மனைவி பிரேமலதா முடிவுகளை எடுத்தார். மறுபடியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணிக்குச் செல்ல அவர் நினைக்க, தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை உருவாகி அது அமையாமல் போனது. இறுதியில் டி.டி.வி தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கைகோர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியது கட்சி. கட்சி சந்தித்த சட்டசபைத் தேர்தல் வரலாறு இவ்வளவுதான். நாடாளுமன்றத்துக்கோ இதுவரை ஒரு உறுப்பினர் கூடச் செல்லவில்லை.

இந்தப் பின்னணியில்தான் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விஜயகாந்த் மரணமடைந்தார். அடுத்த சில மாதங்களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக அணியில் போட்டியிட்ட போது விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன். வெற்றி பெறலாமென பலரும் எண்ணிய வேளையில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவ, மிச்சமிருந்த தேமுதிக தொண்டனுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

20-வது ஆண்டு தொடங்கியிருக்கிற சூழலில், கட்சி மீட்டெடுக்கப் படுமா என எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறான் விஜயகாந்தை சினிமாவில் ரசித்து அவரது கட்சியில் சேர்ந்த அடிமட்டத் தொண்டன்.

பிரேமலதாவும் விஜய பிரபாகரனும் அந்தத் தொன்டனது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்களா? காலம்தான் பதில் சொல்லும்.

தே.மு.தி.க -வின் அரசியல் பயணத்தில் செய்த தவறு என எதை நினைக்கிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் சொல்லுங்கள்.