மகாராஷ்டிராவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி சார்பாக தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று உத்தவ் தாக்கரே மறைமுகமாக கூட்டணிக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். ஆனால் எதிர்க்கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உத்தவ் தாக்கரேயை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த தயக்கம் காட்டின.
தேர்தலுக்கு பிறகு எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் முதல்வர் பதவி முடிவு செய்யப்படும் என்று சரத் பவார் தெரிவித்தார். இதனால் உத்தவ் தாக்கரே மிகவும் அதிருப்தியடைந்தார். அதோடு சரத் பவார் சொல்வது சரிதான் என்று உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகிகளும் பேச ஆரம்பித்தனர். இந்நிலையில் உத்தவ் தாக்கரே அகமத் நகர் மற்றும் பைதன் போன்ற இடங்களில் நடந்த கூட்டத்தில் கலந்து உத்தவ் தாக்கரே பேசினார்.
அதில், ”நான் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களின் ஆதரவால் நான் அதிகாரம் பெற்றவனாகவே உணர்கிறேன். பாலாசாஹேப் தாக்கரே எந்த பதவியும் வகிக்கவில்லை. ஆனால் மக்களின் ஆதரவு காரணமாக அவரிடம் அனைத்து அதிகாரங்களும் இருந்தது. எனக்கு முதல்வராகும் ஆசை இல்லை. 2019-ம் ஆண்டு மகாவிகாஷ் அகாடி ஆட்சிக்கு வந்த போது நான் முதல்வராக விரும்பியதில்லை. மகாவிகாஷ் அகாடி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். அரசியல் வளர்ச்சிக்காக தாய்க்கட்சிக்கு துரோகம் செய்தவர்கள்(ஏக்நாத் ஷிண்டே) மக்களுக்கும் அதே துரோகத்தை செய்யக்கூடும். தாய்க்கட்சிக்கு துரோகம் செய்த சகோதரர்கள் மீது பெண்கள் நம்பிக்கை வைப்பார்களா? அதனால் தான் இந்த அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று விரும்புகிறேன்.
எனக்கு உங்களால் ஓய்வு கொடுக்க முடியாது. உங்களது ஆதரவு இருக்கும் வரை அதிகாரம் எனது கையில் இருக்கும். மக்களின் அதிகாரம் மிகவும் முக்கியமானது. மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்துவது அரசின் கடமை. நாங்கள் ஆட்சியில் இருந்த போது விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தோம். ஆனால் அதற்காக விளம்பரம் தேடிக்கொண்டது கிடையாது. இப்போது மகாயுதி அரசு மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்களுக்கு விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறது. எங்களது அரசு ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்” என்றார்.
`நவம்பர் 2வது வாரத்தில் தேர்தல்?’
மகாராஷ்டிராவில் நவம்பர் இரண்டாவது வாரத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கக்கூடும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ”சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். சட்டமன்ற தேர்தல் நவம்பர் மத்தியில் இரண்டு கட்டமாக நடக்கலாம்”என்றார். தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து கேட்டதற்கு, வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் ஆய்வு செய்யப்பட்டு அதற்கு தக்கபடி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றார். தேர்தல் நேரத்தில் நலத்திட்டங்களை அறிவிப்பதால் மாநிலத்திற்கு நிதிச்சுமை ஏற்படாதா என்று கேட்டதற்கு, நிதி நிலைக்கு உட்பட்டுத்தான் திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY