உச்ச நீதிமன்றம் வைத்த செக்
கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வரானார்.
இந்த சூழலில்தான் கடந்த 21.3.2024 அன்று மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் கைதானார். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று டெல்லி கீழமை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அவரை விடுதலை செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணி வலியுறுத்தி வந்தது. தொடர்ச்சியாக அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது. ஒருவழியாக கடந்த 13-ம் தேதி கெஜ்ரிவால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், ‘முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது. ஆளுநரின் ஒப்புதல் இன்றி கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது’ என உச்ச நீதிமன்றம் செக் வைத்திருக்கிறது.
இந்த சூழலில்தான் கெஜ்ரிவால், “எனது பதவியை இன்னும் இரண்டு நாள்களில் ராஜினாமா செய்யவுள்ளேன்” என அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “மக்கள் தீர்ப்பை அறிவிக்கும் வரை அந்த நாற்காலியில் அமரமாட்டேன். சட்ட நீதிமன்றத்தில் நீதி கிடைத்தது, இனி மக்கள் நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும். மக்கள் ஆணை பிறகே முதல்வர் நாற்காலியில் அமருவேன். நான் மக்களிடம் செல்கிறேன். அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நேர்மையான மனிதர் என்று மக்கள் தீர்ப்பு வழங்கும் வரை நான் முதல்வர் இருக்கையில் அமர மாட்டேன். மேலும் துணை முதல்வரான மனிஷ் சிசோடியாவும் அவருடைய பதவியைத் தொடரமாட்டார். மக்கள் எங்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்கும் போதுதான் அவரும் துணை முதல்வர் பொறுப்பை ஏற்பார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தலை இந்த ஆண்டு நவம்பரிலேயே நடத்த வேண்டும்.
சிறையில் இருந்தும் ஆட்சி நடத்த முடியும் – கெஜ்ரிவால்
டெல்லியில் தேர்தல் நடக்கும் வரை மற்றொரு தலைவர் முதல்வர் பொறுப்பு வகிப்பார். அவர் யார் என இரண்டு நாள்களில் அறிவிக்கப்படும். நான் இல்லாத நேரத்தில் அதிஷி என்னுடைய இடத்தில் இருந்து கொடியேற்ற வேண்டும் என்று நான் துணைநிலை ஆளுநருக்குக் கடிதம் எழுதினேன். அதற்கு, ‘இனி ஒருமுறை நீ எனக்கு கடிதம் எழுதினால் உன்னுடைய குடும்பத்தை உன்னால் பார்க்கவே முடியாது’ என்று கூறப்பட்டிருந்தது. என்னை ஜெயிலுக்கு அனுப்புவதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை உடைத்து என்னைப் பயமுறுத்தலாம் என்பதே என் கைதுக்குப் பின்னால் இருக்கும் நோக்கம். நான் சிறையில் இருந்து என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய விரும்பவில்லை. எனக்கு இந்த நாட்டின் ஜனநாயத்தின் பலம் தேவைப்பட்டது. சிறையில் இருந்தும் ஆட்சி நடத்த முடியும் என்பதை நான் நிரூபித்துவிட்டேன்.” என்றார்.
`சோனியா காந்தியை பின்பற்றுகிறார்’ – பாஜக
இதுகுறித்த கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, “இன்று ஆம் ஆத்மி கட்சி ஒரு ஊழல் கட்சியாக நாடு முழுவதும் அறியப்பட்டுள்ளது. இந்த பி.ஆர் ஸ்டண்ட் மூலம் இழந்திருக்கும் பிம்பத்தைக் கட்டியெழுப்ப அவர்கள் முயல்கிறார்கள். டெல்லி மக்களுக்கு இன்று மூன்று விஷயங்கள் மிகவும் தெளிவாகியிருக்கும். ஒன்று, அரவிந்தின் வங்கிக் கணக்கில் பணமே இல்லை என்று அவர் கூறுகிறார். ஆனால் அவரால் பிறகு எப்படி ஒரு மாளிகை போன்ற வீட்டைக் கட்ட இயலும்?. இரண்டாவதாக அவர் டெல்லி மக்களைச் சந்திப்பேன். அவர்கள் மீண்டும் அவரை முதல்வராக்கும் வரை வேறொரு நபர் முதல்வராகச் செயல்படுவார் என்று கூறியிருக்கிறார். இது சோனியா காந்தியின் செயலைப் பின்பற்றும் முறை.
மூன்றாவது, ஆம் ஆத்மி டெல்லி தேர்தலில் தோற்கப் போவதை அவர் உணர்ந்திருக்கிறார். அவரது பெயரை வைத்து இனி டெல்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கப் போவதில்லை. அதனால் மற்றொரு நபரை பலியாகத் தரப் போகிறார்” என்றார்.
`கட்டாயத்தின் பெயரில் எடுத்த முடிவு’ – ஐக்கிய ஜனதா தளம்
இதுதொடர்பாக ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளார் நீரஜ் குமார், “உச்சநீதிமன்றம் உங்களை நிர்பந்தித்தது. முதல்வர் அலுவலத்திற்குச் செல்ல உங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த முடிவை கட்டாயத்தின் பெயரில்தான் எடுத்தீர்களே தவிர உங்கள் மனதில் இருந்து இந்த முடிவை எடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
`அப்போதே பதவி விலகியிருக்க வேண்டும்’ – காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சித் தலைவர் சந்தீப் தீக்ஷித், “கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராவது அல்லது ஆகாமல் போவது இப்போதைய பிரச்னை இல்லை. ஆனால் அவர் வெகு நாட்களுக்கு முன்பே அந்தப் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும். நீங்கள் எந்தக் காரணத்திற்காக சிறை சென்றிருந்தாலும் அப்போதே அந்தப் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும். இப்போது நடப்பதெல்லாம் வெறும் நாடகம்தான். வரலாற்றிலேயே முதல் முறையாக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் சிறை சென்று பிணையில் வரும்போது, உச்சநீதிமன்றம், ‘எந்தவொரு கோப்புகளையும் தொடுவது அல்லது முதலமைச்சர் இருக்கையில் அமர்வது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. ஹேமந்த் சோரனும்கூட சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் அவர் மீது இத்தகைய தடை எதையும் நீதிமன்றம் விதிக்கவில்லை. இவர் மீண்டும் முதல்வராக வரும் பட்சத்தில் ஆதாரங்களை அழிக்கவும், சாட்சியாளர்களை மிரட்டவும் இயலும் என்று உச்சநீதிமன்றம் நினைத்துள்ளது. அவரை ஒரு குற்றவாளி போலத்தான் நீதிமன்றம் நடத்துகிறது. அந்தப் பதவியில் நீடிக்க அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை” என கொதித்திருக்கிறார்.
ஆம் ஆத்மி தரப்பு என்ன சொல்கிறது?
“கடுமையான ஜாமீன் நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றத்தால் திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கெஜ்ரிவால் ஏன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார்?” என்கிற கேள்விக்கு விடை தேடுவதற்காக டெல்லி ஆம் ஆத்மி வட்டாரத்தில் பேசினோம், “தலைவரின் இந்த முடிவுக்கு பின்னால் சில அழுத்தமான காரணகள் இருக்கின்றன. அதாவது டெல்லி சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவிருக்கிறது. அதற்கு இன்னும் ஐந்து மாதங்களுக்கும் குறைவான காலமே இருக்கிறது. ஆனால் ராஜினாமா செய்வதன் மூலம் முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என நினைக்கிறார். அதாவது நவம்பரில் மகாராஷ்டிரா தேர்தல் நடைபெறுகிறது. அதனுடன் டெல்லி தேர்தலில் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதன் மூலம் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் பழிவாங்கும் அரசியல் என்று அவரும் அவரது கட்சியும் மக்களிடம் நிலைநிறுத்திக்கொள்ள முடியும். பதவி விலகுவது மற்றும் முன்கூட்டியே தேர்தல் நடைபெறுவது பதவி விலகுவதன் மூலம் மக்களின் அனுதாபம் அப்படியே இருக்கும். அதே நேரத்தில் பிப்ரவரியில் தேர்தல் நடந்தாலும் பிரச்னை இல்லை. வேறு முதல்வர் இருந்தாலும் அவர் கேஜ்ரிவாலின் வழிகாட்டுதலின் கீழ்தான் செயல்படுவார். ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இருந்து உருவானதுதான் ஆம் ஆத்மி கட்சி. ஆனால் அதன் தலைவர்கள் மீது ஊழல் சர்ச்சை படிந்துள்ளது. இந்த சூழலில் பதவியை ராஜினாமா செய்வதன் மூலம் மக்களிடம் மீண்டும் தன்னை தூய்மையானவர் என நிரூபிக்க முடியும்.
இந்த முடிவுக்கு காரணம்…
இதன் மூலம் கட்சியின் சாதனைகள் மற்றும் எதிர்கால வாக்குறுதிகளில் கவனம் செலுத்தி, புதிய முதல்வர் முகத்துடன் பிரசாரம் செய்ய முடியும். மேலும் கட்சியில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய முடியும். டெல்லி சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் பிப்ரவரி 2025 இல் முடிவடைகிறது, ஆனால் 2024 நவம்பரில் கெஜ்ரிவாலின் தேர்தல் அழைப்பு மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் அட்டவணையுடன் ஒத்துப்போகிறது. தற்போதைய அரசியல் சூழல் கேஜ்ரிவாலுக்கு சாதகமாக இருக்கிறது. அதாவது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க-வுக்கு எதிராக அதிருப்தி அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில், சிவசேனா மற்றும் அஜித் பவாரின் என்சிபி தலைமையிலான ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாஜக, மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினை உட்பட பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. அதேபோல் ஜார்க்கண்டில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜாமீனில் ஹேமந்த் சோரன் வெளியில் வந்திருக்கிறார். எனவேதான் நவம்பரில் டெல்லி தேர்தல் நடத்த வேண்டும் என கெஜ்ரிவால் விரும்புகிறார்.
இதேபோல் கேஜ்ரிவால் பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அன்றாட நிர்வாக விவகாரங்களைச் செய்யத் தவறியதைக் காரணம் காட்டி, பல பா.ஜ.க தலைவர்கள் டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரினர். கெஜ்ரிவால் இத்தனை காலம் ஆட்சியில் ஒட்டிக்கொண்டார் என்று விமர்சனம் செய்தனர். கடந்த வாரம் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்ட பிறகு, அவர் டெல்லி முதல்வராகத் தொடர்ந்திருந்தால், பாஜக தலைமையிலான மத்திய அரசு, கெஜ்ரிவாலின் ஜாமீன் நிபந்தனைகளின் அடிப்படையில் சிக்கலை ஏற்படுத்தி தேர்தலை 6 மாதங்கள் வரை தாமதப்படுத்தலாம். எனவேதான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.
அடுத்த முதல்வர் யார்?
இதற்கிடையில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து நம்மிடம் பேசிய ஆம் ஆத்மி சீனியர் தலைவர்கள், “முதல்வராக வருவதற்கு மூத்த தலைவர் அதிஷி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இவர் அமலாக்க இயக்குநரகத்தால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு மிகவும் வெளிப்படையான ஆம் ஆத்மி தலைவராக இருந்தார். டெல்லி அரசாங்கத்தின் செயல்பாட்டில் முக்கியப் பங்காற்றி வருகிறார். மேலும் கேபினட் அமைச்சர்களில் மிக உயர்ந்த 14 துறைகளுக்குப் பொறுப்பாக உள்ளார். அவர் கவனிக்கும் முக்கிய அமைச்சகங்கள் கல்வி, நிதி, திட்டமிடல், பொதுப்பணித்துறை, நீர், மின்சாரம் மற்றும் மக்கள் தொடர்பு. டெல்லி சட்டசபையின் கல்விக்கான நிலைக்குழுவின் தலைவராகவும் அதிஷி பணியாற்றியுள்ளார். அவரது வலுவான பேச்சுத்திறன் அவரை முதல்வர் பதவிக்கு முன்னணியில் உள்ளவர்களில் ஒருவராக ஆக்குகிறது.
கோபால் ராய்
இதற்கு அடுத்த இடத்தில் கோபால் ராய் இருக்கிறார். இவர் அனுபவமிக்க அரசியல்வாதி ஆவார். டெல்லி அரசியல் நிலப்பரப்பில் நீண்ட காலமாக முக்கியப் பங்காற்றி வருகிறார். சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்கு, வளர்ச்சி மற்றும் பொது நிர்வாகத் துறைக்கான கேபினட் அமைச்சராக உள்ளார். ஒரு முறை பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது சுடப்பட்டார். தொழிலார் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
கைலாஷ் கஹ்லோட்
அடுத்த இடத்தில் கைலாஷ் கஹ்லோட் இருக்கிறார். இவர் டெல்லியின் அரசியல் சூழ்நிலையில் ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார். போக்குவரத்து அமைச்சராக இருந்திருக்கிறார். அவரது தலைமையின் கீழ் டெல்லியில் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கணிசமான முன்னேற்றங்களைச் செய்தது.
சுனிதா கெஜ்ரிவால்
அடுத்ததாக சுனிதா கெஜ்ரிவால் இருக்கிறார். இவர் முன்னாள் இந்திய வருவாய் சேவைகள் அதிகாரி. கணவரைப் போலவே, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வருமான வரித் துறையில் பணியாற்றினார். டெல்லி, ஹரியானா மற்றும் குஜராத்தில் ஆம் ஆத்மியின் மக்களவை பிரசாரங்களில் அவர் ஒரு முக்கிய முகமாக இருந்தார். ஆனால் சுனிதா கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக இல்லாததால், அவர் முதலில் அக்கட்சியில் சேர்ந்து ஒரு தொகுதியில் போட்டியிட்டு மூன்று மாதங்களுக்குள் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், டெல்லியின் அரசியல் சூழ்நிலையின் நிச்சயமற்ற தன்மை மற்றும் பிப்ரவரி 2025 இல் சட்டமன்றத் தேர்தல்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த நேரத்தில் இடைத்தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக இருக்கும். மேலும் குடும்ப அரசியல் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யக்கூடும். இருப்பினும் முடிவுகளை தலைவர்தான் எடுப்பார்” என்றனர்.