`அரசாங்கத்தில் பங்கு வேண்டும் என நினைத்திருந்தால்…’ – திருமா பதிவும் மதுரை கொடி கம்ப விவகாரமும்

‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்று திருமாவளவன் பேசிய வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி பின்பு நீக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியலை சூடாக்கியுள்ள நிலையில் மதுரையில் விசிக-வின் கொடிக கம்பம் காவல்துறையால் அகற்றப்பட்டுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடி கம்ப விவகாரம்- போராட்டத்தில் விசிக-வினர்

கொடி கம்பம் அகற்றப்பட்டதை எதிர்த்து விசிகவினர் போராட்டம் நடத்திய நிலையில் மதுரை வந்த திருமாவளன், ‘இதற்கு காரணம் மதுரை கலெக்டர்தான்’ என்று குற்றம்சாட்டி பேசியுள்ளார்.

கூட்டணியில் இருந்தாலும் முரண்பாடான விஷயங்களில் திமுக-வுக்கு தோழமை சுட்டி வந்த விசிக-வினர், மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது திமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கொடி கம்பம் அகற்றிய விவகாரம் குறித்து விசாரித்தபோது, “1990-ம் ஆண்டு விடுதலை சிறுத்தை கட்சி மதுரையில் தொடங்கப்பட்டபோது கே.புதூரில் விசிக-வின் முதல் கொடி, 20 அடி உயரம் கொண்ட கம்பத்தில் திருமாவளவனால் அப்போது ஏற்றப்பட்டது.

அப்போதிருந்து புதூர் பிரதான சாலை அருகே வைக்கப்பட்ட அக்கட்சி கொடி கம்பத்தை 62 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட கம்பமாக ஊன்றுவதற்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் முடிவு செய்து பழைய கொடிக கம்பத்தை அகற்றிவிட்டு புது கொடி கம்பத்தை நேற்று ஊன்றி வைத்தனர். மதுரைக்கு வரும் திருமாவளவன் மூலம் புதிய கொடி கம்பத்தில் கொடியை ஏற்ற திட்டமிட்டு இருந்தனர்.

கலெக்டர் சங்கீதா

இந்த நிலையில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்சி கொடி கம்பம் இருப்பதாக வருவாய்த்துறையினர் அனுமதி அளிக்க மறுத்தனர். நேற்று இரவு பலத்த போலீஸ் பாதுகாப்போடு கொடி கம்பம் அகற்றப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து இன்று காலை விசிக நிர்வாகிகள் அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரை கலெக்டர் சங்கீதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், முறையாக விசாரித்த பிறகே அனுமதி வழங்க முடியும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

உடனே அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்திய விசிக நிர்வாகிகள், கொடிக்கம்பம் இருந்த இடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் எக்ஸ் தள பதிவு பரபரப்பை ஏற்படுத்திய சூட்டோடு மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த திருமாவளவன், செய்தியாளர்களிடம் பேசும்போது, “தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்த காலத்தில் இருந்து மது ஒழிப்பு குறித்து பேசி வருகிறோம்.

கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என 1999-ல் பேசினேன். அதை நினைவு படுத்தி நேற்று செங்கல்பட்டில் நான் பேசியதை என் அட்மின் எடுத்து பதிவு செய்துள்ளார்கள். ஏன் அதை நீக்கினார்கள் என தெரியவில்லை. இன்னும் என்னுடைய அட்மினை தொடர்பு கொண்டு பேசவில்லை.

மலைச்சாமி நினைவேந்தல் நிகழ்வில்

அதிகாரம் எளிய மக்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் எப்போதும் எங்கள் கோரிக்கை. ஜனநாயக பரவலாக்கத்தை எப்போதும் பேசலாம். உண்மையில் அரசாங்கத்தில் பங்கு வேண்டும் என நினைத்திருந்தால் தேர்தல் நேரத்தில் கேட்டிருப்பேன். இப்போது கேட்க வேண்டிய அவசியமில்லை. இதை தேர்தல் அரசியலோடு இதை முடிச்சு போட கூடாது.

காவிரி நீர், ஈழத் தமிழர் விவகாரங்களில் அனைவரும் இணைவது போல், மது ஒழிப்பிலும் இணையலாம். பாமக-வுடன் எங்களுக்கு கசப்பான அனுபவங்கள் இருப்பதால் அவர்களை அழைக்கவில்லை. இப்போதும் நாங்கள் திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம். அதில் எந்த பிரச்னையும் இல்லை.

மதுரையில் விசிக கொடி கம்பம் அமைப்பதற்கு கலெக்டர் சங்கீதா அனுமதி அளிக்கவில்லை. விசிக கட்சிக்கு எதிரான நிலைப்பாடுடன் கலெக்டர் சங்கீதா தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மீண்டும் கொடி கம்பம் அமைக்க அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அனுமதி கிடைத்த பின்னர் கொடி கம்பத்தை வைப்போம்.

பாஜக, பாமக உடன் சேர்ந்தால் நாங்கள் கரப்ட் ஆகி விடுவோம். அந்தளவுக்கு கசப்பான அனுபவத்தை பாமகதான் கொடுத்தது. மதுவால் கண்ணீர் விட்டு கதறும் தாய்மார்களுக்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. அரசியல் கணக்கோடு இந்த மாநாட்டை நடத்தினால் இதை விட அசிங்கம் எனக்கு வேறில்லை. இதில் ஒரு சதவிகிதம் கூட தேர்தல் கூட்டணி கணக்கு இல்லை” என்றார்.

இந்த நிலையில், திருமாவளவர் ட்விட்டர் பக்கத்தில், “”கடைசி மனிதனுக்கும் சனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்! ஆட்சியிலும் பங்கு !அதிகாரத்திலும் பங்கு ! – என 1999ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ” – என்று கடந்த செப்-12 ஆம் தேதி மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் ஆற்றிய உரையின் சுருக்கம்..” என மீண்டும் அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY