“என்னிடம் ஆதாரம் இருக்கிறது; சொன்னால் அவருக்கு அவமானமாகிவிடும்” – முதல்வர் ஸ்டாலின் காட்டம்

முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27-ம் தேதி அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். விமான நிலையத்திற்கு நேரில் சென்ற அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அமெரிக்க அரசுமுறைப் பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பியிருக்கிறேன். இது தமிழ்நாட்டுக்கு ஒரு வெற்றிகரமான, சாதனைப் பயணமாக அமைந்திருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

உலக நாடுகள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக, வெளிநாட்டு நிறுவனங்களை தொழில் முதலீடு செய்ய வைக்கும் ஒரு முயற்சியாக அமெரிக்கா பயணம் மேற்கொண்டேன். சான் பிரான்சிஸ்கோ-வில் 8 நிறுவங்கள், சிகாகோவில் 11 நிறுவங்கள் என 19 நிறுவங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருகிறது. இதன் மூலம்,ரூ.7618 கோடி முதலீடு தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கிறது. இதனால், 11,514 பேருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த முதலீடுகள், திருச்சி, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் அமையவிருக்கிறது. கடந்த மாதம் 29-ம் தேதி சான் பிரான்சிஸ்கோ-வில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவங்கள் பங்கெடுத்தன. அதில் தமிழ்நாடு அரசுடன் அந்த நிறுவங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். அதில் இன்னும் சில நிறுவனங்கள் வருங்காலத்தில் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்திருக்கின்றன.

முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளாக செய்யபட்டு, சில தவிர்க்க முடியாத சூழல் காரணமாக உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு (Ford) நிறுவனம், மீண்டும் மறைமலை நகர் தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்க எங்கள் வேண்டுகோளை ஏற்று முன்வந்திருக்கிறது. இதை வரவேற்று, அந்த நிறுவனத்துக்கான எல்லா வகையான உதவிகளையும் தமிழ்நாடு அரசு சார்பில் செய்துகொடுக்க ஆணையிட்டிருக்கிறேன். நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சிகளை வழங்க, கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்படவிருக்கிறது.

கடந்த மாதம் 31-ம் தேதி சான் பிரான்சிஸ்கோ-விலும், 7-ம் தேதி சிகாகோ-விலும் தமிழ் கூட்டமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். இதற்கு முன் நான் சென்ற அமெரிக்கா பயணத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து தெளிவாக அப்போதே விளக்கியிருக்கிறேன். தொழிற்துறை அமைச்சரும் சட்டமன்றத்தில் இது குறித்து புள்ளி விவரங்களுடன் பேசியிருக்கிறார். எனவே இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்படி படித்துப் பார்த்துவிட்டு வெள்ளை அறிக்கை கேட்கட்டும்.

முதல்வர் ஸ்டாலின்

அவர் முதல்வராக இருந்தபோது, தொழில் நிறுவனங்களை ஈர்க்க அமெரிக்க சென்ற எடப்படி பழனிசாமி செய்த முதலீடு ஒப்பந்தங்களில், 10 விழுக்காடு கூட நிறைவேறவில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அதைக் கூறினால் அவருக்கு அவமானமாக இருக்கும். அதனால் அதை விட்டுவிடலாம்.

அன்னப்பூர்னா நிறுவனரை ஒன்றிய அரசு கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டியது. அதை மக்கள் பாரத்துக்கொண்டுதான் இருக்கிறக்கிறார்கள்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்கள் புதியக் கல்விக் கொள்கை தொடர்பாக ஏற்கெனவே சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இதுகுறித்து நானும் பிரதமரை சந்தித்து பேசவிருக்கிறேன். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான முதலீடுகள் வந்திருக்கிறது. இதை விமர்சிப்பவர்கள் அரசியல் உள்நோக்கத்துடன் பேசுகிறார்கள். திருமாவளவன் அ.தி.மு.க-வை மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைத்தது தொடர்பாக அவரே விளக்கம் அளித்திருக்கிறார். ‘இது அரசியல் நோக்கத்துடன் நடத்தப்படும் மாநாடு அல்ல. பொதுவானது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதே பதில்தான் என்னுடையதும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY