மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, கிட்டதட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று உச்ச நீதிமன்றம் பிணை வழங்கி உள்ளது.
மதுபான கொள்கை முறைகேட்டில் சம்மந்தப்பட்ட பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை, இந்தாண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி இரவு 9 மணி அளவில் கைது செய்தது. அதைத்தொடர்ந்து, ஜூன் 26 ஆம் தேதி, இந்த முறைகேடு குறித்து விசாரிப்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ., கைது செய்தது.
அமலாக்கத்துறை தொடர்ந்திருந்த வழக்கில், கடந்த ஜூலை 12-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பிணை கிடைத்திருந்தாலும், சி.பி.ஐ., கைது செய்ததன் காரணமாக, அவர் திகார் சிறையிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் அவரது ஜாமீன் மனு செப்டம்பர் 5, 2024-ல் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி உஜ்ஜல் பாயன் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. அன்று நடந்த வாதங்களுக்குப் பின்னர், வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று வழக்கு மீண்டும் அந்த அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி சூர்யகாந்த், “அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நேரம் பல கேள்விகளை எழுப்புகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும், நீதிபதிகள் பேசும்போது, “2023-ம் ஆண்டு மார்ச் மாதமே சி.பி.ஐ.,-யால் கெஜ்ரிவால் விசாரிக்கப்பட்டிருக்கிறார். அப்போது அவரை சி.பி.ஐ., கைது செய்யவில்லை. ஆனால் அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவால் ஜாமீன் மனு நிலுவையிலிருந்த நிலையில், கெஜ்ரிவால் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டிருக்கிறார்” என்று கூறியுள்ளனர்.
நீதிபதி உஜ்ஜல் பாயன் பேசும்போது, “விசாரித்த 12 மாதங்களுக்குப் பிறகு, அரவிந்த கெஜ்ரிவாலின் பிணை மனுவை மட்டுப்படுத்தவே சி.பி.ஐ அவரைக் கைது செய்திருக்கிறது. மேலும் மத்திய அரசின் ‘கூண்டு பறவை’தான் சி.பி.ஐ., என்ற மக்களின் பார்வையை சி.பி.ஐ மாற்ற வேண்டும். சி.பி.ஐ., எந்த பாரபட்சமுமின்றி செயல்பட வேண்டும்.” என்றும் கூறியுள்ளார்.