உலகம் முழுவதும் பரவலாக அறியப்படும் பிடிஎஸ் (BTS) இசைக்குழுவின் தலைவர் கிம் நம்ஜூன் (RM) பிறந்த நாள் இன்று (12.09.1994). இவர் ஒரு ராப்பர் (Rapper) மற்றும் பாடலாசிரியர்.
குழந்தைப் பருவத்தில் வேடிக்கை பார்ப்பதை அதிகம் விரும்பினார் நம்ஜூன். வேடிக்கை பார்ப்பதுதான் தனக்குப் பாடல்கள் எழுத உற்சாகம் அளிக்கும் என்கிறார்.
இவர் BTS குழுவில் அறிமுகம் ஆனபோது இவரின் வயது 19. அறிமுகம் ஆனதிலிருந்து பிடிஎஸ் சந்தித்த பிரச்னைகள் ஏராளம். இக்கட்டான சூழ்நிலைகளில் BTS-ஐ தாங்கிப் பிடித்து, அதன் அசுர வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது இவர்தான்.
கிம் நம்ஜூன் தான் BTS குழுவிலேயே ஸ்மார்ட்டான நபராம், இவரது IQ 148 என்கின்றனர். கொரியப் பாடகர் குழுவில் சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்த ஒரே நபர் கிம் நம்ஜூன் தான். “ஃபிரண்ட்ஸ் என்கின்ற தொடரைப் பார்த்துத்தான் ஆங்கிலம் பேசக் கற்றுக் கொண்டேன்” என்கிறார்.
BTS குறித்து ஆரம்பக் காலத்தில் வந்த வெறுப்பைக் கக்கும் ஆங்கில செய்திகளை எல்லாம் குழுவின் உறுப்பினர்களுக்கு ஊக்கம் தரும் நல்ல செய்தியாக மொழிபெயர்த்துக் கூறுவாராம். அவர்களை இழிவுபடுத்தும் செய்திகளை மறைத்துவிடுவார் நம்ஜூன்.
இவர் யுனிசெஃப் அரங்கில் ஆற்றிய உரை இன்றளவும் பலருக்குத் தன்னம்பிக்கையைத் தருகிறது. அதில், “நான் தென் கொரியாவின் சியோலுக்கு அருகிலுள்ள இல்சான் நகரில் பிறந்தேன். அது ஏரி, மலைகள் சூழ்ந்த அழகான இடம்.
நான் அங்கு மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தைக் கழித்தேன், ஒரு சாதாரண சிறுவனாக இருந்தேன். இரவு வானத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து, ஒரு சிறுவனின் கனவுகளைக் காண்பேன், நான் ஒரு சூப்பர் ஹீரோ, உலகைக் காப்பாற்றுகிறேன் என்று கற்பனை செய்துகொள்வேன்.
எங்கள் ஆரம்பக்கால ஆல்பம் ஒன்றின் அறிமுகத்தில், ‘என் இதயம் நின்றுவிட்டது… அப்போது எனக்கு ஒன்பது அல்லது பத்து வயது இருக்கலாம்’ என்று ஒரு வரி உள்ளது.
வளர வளர மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நான் கவலைப்பட ஆரம்பித்தேன், அவர்களின் கண்களால் என்னைப் பார்க்க ஆரம்பித்தேன். இரவில் நட்சத்திரங்களைப் பார்ப்பதை நிறுத்தினேன், பகல் கனவு காண்பதை நிறுத்தினேன்.
மற்றவர்கள் உருவாக்கும் அச்சுகளில் என்னை நானே பொருத்திக்கொள்ள முயன்றேன். விரைவில், நானே என் சொந்தக் குரலை நசுக்கி, மற்றவர்களின் குரல்களைக் கேட்க ஆரம்பித்தேன்.
நான் இன்னும் சாதாரண, இருபத்தி நான்கு வயது இளைஞன்தான். உலகில் நான் சாதித்தது ஏதேனும் இருந்தால், அது என் BTS உறுப்பினர்களும், எங்கள் ஆர்மி ரசிகர்களும்தான்.
நான் உங்கள் அனைவரையும் ஒன்று கேட்க விரும்புகிறேன், உங்கள் பெயர் என்ன? உங்களை உற்சாகப்படுத்துவது, உங்கள் இதயத்தை துடிக்க வைப்பது எது? உங்கள் கதையைச் சொல்லுங்கள். நான் உங்கள் குரலைக் கேட்க விரும்புகிறேன், உங்கள் நம்பிக்கையை நான் கேட்க விரும்புகிறேன்.
நீங்கள் யாராய் இருந்தாலும், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், உங்கள் தோலின் நிறம், பாலின அடையாளம் எதைப்பற்றியும் கவலைப் படாமல் உங்களைப் பற்றி பேசுங்கள். உங்கள் பெயரைக் கண்டுபிடியுங்கள், நீங்கள் பேசுவதன் மூலம் உங்கள் குரலைக் கண்டறியுங்கள்.” இப்படி தன் உரையை முடித்தார்.
ஒரு முறை இவரிடம் BTS உடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறாயா, இல்லை தனியாக பணியாற்றுகிறாயா என்ற கேள்விக்கு உறுதியாக ‘BTS’ என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார். அதனால்தான் இவர் தலை சிறந்த குழு தலைவராய் அறியப்படுகிறார்.
உலக அளவில் பல பிரபலங்கள் இன்று கிம் நம்ஜூன் ரசிகர்களாக இருக்கின்றனர். ஏனென்றால் என்றும் தலைசிறந்த தலைவர் RM!