குன்றக்குடி கோயில் யானை, தீ விபத்தில் காயமடைந்து இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கு கோயில் நிர்வாகத்தின் அலட்சியம்தான் காரணமென்று பொதுமக்கள் குற்றம்சாட்டுவது, பபரப்பை ஏற்படுத்தி வருகிறது
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கோயில் நிர்வாகம் மூலம் நன்கு பராமரிக்கப்பட்டு வந்த யானை சுப்புலட்சுமியின் தற்போதைய வயது 53. இந்த நிலையில்தான் யானை தீ விபத்தில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளது.
யானையின் திடீர் மரணம் குறித்து கவலையுடன் பேசிய அப்பகுதி மக்கள், “இக்கோயிலுக்கு கடந்த 1971-ம் ஆண்டு ஆத்தங்குடியைச் சேர்ந்த முருகபக்தர் ஒருவர் பெண் யானையை பரிசாக கொடுத்தார். அதற்கு சுப்புலட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டு, குன்றக்குடி வட்டார மக்களின் அன்பு பாசத்துக்கு மத்தியில் சிறப்பாக இருந்து வந்தது. இந்த நிலையில் கோயில் நிர்வாகத்தின் அலட்சியமான பராமரிப்பினால் தீ காயம் ஏற்பட்டு. இறந்துள்ளது” என்றனர்.
யானைக்காக கோயில் மலைப்படி ஏறும் இடத்தில் தகர சீட் மூலம் கொட்டகை போடப்பட்டிருந்தது. சமீபகாலமாக வெயில் கடுமையாக இருந்ததால், அதன் உட்பகுதியில் தென்னங்கீற்று மூலம் கொட்டகை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு மின் கசிவால் கொட்டகையில் தீ பிடித்ததாக சொல்லப்படுகிறது. அங்கு பாகனும் இல்லாத நிலையில் வேகமாக தீப்பிடிக்க, சங்கிலியால் கட்டப்பட்டு கிடந்த யானை தப்பிக்க முடியாமல் வேதனை தாளாமல் கதறிப் பிளிறியுள்ளது. பின்பு சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடியுள்ளது.
தகவல் தெரிந்து வந்த பொதுமக்கள், வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் சொல்ல, விரைந்து வந்த அவர்கள் யானையை மீட்டு கோயில் மடத்திற்கு கொண்டு வந்தனர்.
உடல் முழுவதும் கடுமையான காயம் ஏற்பட்டிருந்த யானைக்கு கால்நடைத்துறை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் யானை சுப்புலட்சுமி இன்று அதிகாலை மரணமடைந்தது. இந்த சம்பவம் குன்றக்குடி சுற்றுவட்டார பொதுமக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இறந்த யானைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மாலையிட்டு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்கள் அழுதபடி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். யானையை பராமரிப்பதில் கோயில் நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.