கடந்த மாதம் 9-ம் தேதி கொல்கத்தாவில் ஆர்.ஜி கார் மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கான நீதி கேட்டு மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருக்கின்றனர். இந்த வழக்கை தற்போது மத்திய அரசின் விசாரணை அமைப்பான சி.பி.ஐ விசாரித்து வருகிறது.
மருத்துவர்களை சந்தித்த மம்தா
இந்த நிலையில், நேற்று மேற்குவங்க மாநிலச் செயலகத்தில் மருத்துவர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, “போராடும் மருத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. மருத்துவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு அரசு என்றும் தயாராகவே இருக்கிறது. இப்போது என் அரசு மீது, சமூகவலைதளங்களில் திட்டமிட்டு வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதற்குப் பின்னணியில் அரசியல் சாயம் இருப்பது சாமானிய மக்களுக்கு தெரியாது. கொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு நீதி வேண்டும் என்பதில் நானும் உறுதியாக இருக்கிறேன்.
முதல்வர் பதவிக்கெல்லாம் நான் என்றும் ஆசைப்படவில்லை. மக்களின் நலனுக்காக, சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் பதவி விலகத் தயார். ஆனால் அவர்கள் நீதியை நாடவில்லை. என் அரசின் மீது வீசப்படும் சேற்றுக்குப் பின்னால் பதவி வெறிதான் இருக்கிறதே தவிர நீதி வேண்டும் என்ற குரல் இல்லை. இதை புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்” என உருக்கமாக உரையாற்றினார்.
மேற்குவங்க ஆளுநரின் அறிக்கை
இந்த நிலையில்தான், மேற்குவங்க ஆளுநர் சிவி ஆனந்த போஸ் முதல்வர் மம்தா பனர்ஜியை கடுமையாக விமர்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில்,“அமைதி ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும். ஆனால், மாநிலத்தில் வன்முறை, வீட்டில் வன்முறை, அரசு வளாகத்தில் வன்முறை, மருத்துவமனையில் வன்முறை… தற்போது மேற்குவங்க மக்களின்பெரும்பான்மையினரிடம் அமைதி இல்லை. இந்த சூழலில் ஆளுநரின் நடவடிக்கை என்ன என மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இப்போதும், எப்போதும் நான் அரசியலைமைப்புக்கும், மேற்குவங்க மக்களுக்கும், பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவரின் குடும்பத்தாருக்கும், போராடுபவர்களுக்கும் உறுதுணையாக இருப்பேன். மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளாத மேற்குவங்க அரசு, கடமை தவறிவிட்டது. குற்றங்களைத் தடுக்க வேண்டிய கொல்கத்தா காவல்துறை ஆணையர் மீதும் கடுமையான குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்படுவது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அதனால்தான் ராஜ்பவனில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது காவல்துறை ஆணையர் அழைக்கப்படவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
`முதல்வருடன் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டேன்’
இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அவர் பாரதிய நியாய சந்ஹிதாவின் 329-வது பிரிவின் கீழ் தண்டிக்கப்படுவார். கடமை தவறிய மேற்குவங்க முதல்வரை சமூக நீக்கம் செய்வதாக முடிவு செய்திருக்கிறேன். நினைவில் கொள்ளுங்கள், அவரின் மௌனமே இந்த வன்முறை… எனவே, முதல்வரை இனி சமூக ரீதியாக புறக்கணிப்பேன். முதலமைச்சருடன் நான் எந்த பொது மேடையையும் பகிர்ந்து கொள்ள மாட்டேன். முதல்வர் பங்கேற்கும் எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டேன்” என அறிவித்திருக்கிறார்.