அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸூம், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் தேர்தலில் மோதுகின்றனர். இதற்கிடையில், ஸ்பேஸ் எக்ஸ்-ன் சி.இ.ஒ எலான் மஸ்க், டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் நேருக்கு நேர் விவாதத்தில், கமலா ஹாரிஸின் குரல் வலுவாக இருந்ததாக கருதப்படுகிறது. பல்வேறுதரப்பிலிருந்தும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் ஒரு பூனையை கையில் ஏந்தியநிலையில் இருக்கும் தன் புகைப்படத்தைப் பகிர்ந்து, “உங்களில் பலரைப் போலவே நானும் இரண்டு அதிபர் வேட்பாளர்களின் விவாதத்தைப் பார்த்தேன். யாரை அதிபராக தேர்வு செய்யலாம் என்ற ஆய்வு குறித்த திட்டம் உங்களிடம் இல்லையென்றால், இந்த விவாதம் மூலம், எந்தத் தலைவர், எந்த மாதிரியான பிரச்னைகளுக்கு என்ன முடிவெடுக்கிறார்கள் என உங்கள் ஆய்வை மேற்கொள்ள இது சிறந்த நேரம். ஒரு வாக்காளராக, நாம் அனைவரும் இந்த நாட்டிற்காக அவர்களால் முன்மொழியப்பட்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பற்றிய செய்திகளை பார்க்கவும், படிக்கவும் வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
சமீபத்தில், டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பொய்யாக சித்தரிக்கும் “me” என்ற AI குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்து, எச்சரிக்கையானேன். AI பற்றிய எனது அச்சத்தையும், தவறான தகவல்களைப் பரப்புவதால் ஏற்படும் ஆபத்துகளையும் இந்த செய்தி உணர்த்தியது. அதனால்தான் ஒரு வாக்காளராக இந்தத் தேர்தலுக்கான எனது உண்மையான திட்டங்களைப் பற்றி நான் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். உண்மைதான் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கான எளிய வழி.
2024 அதிபர் தேர்தலில் நான் கமலா ஹாரிஸ், டிம் வால்ஸ் ஆகியோருக்கு வாக்களிப்பேன். ஏனென்றால் அவர் உரிமைகளுக்காக போராடுகிறார். நம் உரிமையை வென்றெடுக்க ஒரு போர்வீரர் தேவை என்று நான் நம்புகிறேன். கமலா ஹாரிஸ் உறுதியான, திறமையான தலைவி என்றே நினைக்கிறேன். மேலும் குழப்பம் இல்லாமல், அமைதியால் இந்த நாடு வழிநடத்தப்பட்டால் இன்னும் பலவற்றைச் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.
@timwalz என்ற இயக்கத்தின் மூலம் கமலா ஹாரிஸ், பல ஆண்டுகளாக LGBTQ+ உரிமைகளுக்காகவும், பெண்கள் கருத்தரித்தல் தொடர்பானவற்றில் இருக்கும் சிக்கல்களுக்காகவும், பெண் உடலுக்கான உரிமைக்காகவும் தொடர்ந்து போராடுவதை பார்த்து மனம் நெகிழ்ந்து அவரின் பக்கம் ஈர்க்கப்பட்டேன். நான் ஆய்வு செய்து என் விருப்பத்தை தேர்வு செய்துவிட்டேன். உங்கள் ஆய்வும், தேர்வும் உங்களுடையது.” எனக் குறிப்பிட்டு, டெய்லர் ஸ்விஃப்ட் – குழந்தை இல்லாத பூனைப்பெண் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பதிவுக்கு எக்ஸ் பக்கத்தில் பதிலளித்திருக்கும் எலான் மஸ்க், “ நல்லது டெய்லர்… நீ வெற்றி பெறு… நான் உனக்கு ஒரு குழந்தையைத் தருகிறேன். மேலும், உன் பூனைகளை என் வாழ்நாள்முழுவதும் பாதுகாக்கிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார். இந்த பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
‘நான் உனக்கு ஒரு குழந்தையை கொடுக்கிறேன்’ என அவர் குறிப்பிட்டிருப்பது மூலம், உறவின் மூலம் உருவாகும் குழந்தையையா… அல்லது தன் பிள்ளைகளில் ஒருவரை கொடுப்பதாக தெரிவித்திருக்கிறாரா என சமூகவலைதளவாசிகள் கேள்வி எழுப்பியநிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.