Kolkata Case: “நீதிக்காக என் பதவியையும் ராஜினாமா செய்ய தயார்!” – மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தில், கடந்த மாதம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில், சி.பி.ஐ., ஒருபக்கம் விசாரித்துக்கொண்டிருக்க, மறுபக்கம் உச்ச நீதிமன்றம் பணிக்குத் திரும்புமாறு கூறியும் நீதிக்கான உத்தரவாதம் வேண்டி 30 நாள்களுக்கு மேலாகப் பயிற்சி மருத்துவர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலை – மருத்துவர்கள் போராட்டம்

மறுபக்கம், இந்த சம்பவத்தை மூடி மறைக்க தங்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாகவும், இதனை வெளிப்படையாகக் கூறியபோது முதல்வர் பொய் என்று கூறுகிறார் என்றும் பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் குற்றம்சாட்டினர். நிலைமை இவ்வாறிருக்க, போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து, பேச்சுவார்த்தைக்கு வருமாறு பயிற்சி மருத்துவர்களுக்குத் தலைமைச் செயலாளர் தரப்பிலிருந்து கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்குப் பயிற்சி மருத்துவர்கள், “30 பேரை அனுமதிக்க வேண்டும். பேச்சுவார்த்தையை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். எங்களின் 5 கோரிக்கைகளின் மையமாகப் பேச்சுவார்த்தை இருக்க வேண்டும்” என்று பதில் தெரிவித்தனர். ஆனால், நேரலை ஒளிபரப்பு செய்வதற்கு அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில், தலைமைச் செயலகத்தில் இன்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நேரலை ஒளிபரப்புக்கு அரசு மறுத்ததால் பயிற்சி மருத்துவர்கள் தரப்பில் யாரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருப்பதாக மம்தா தெரிவித்திருக்கிறார்.

மம்தா பானர்ஜி

இது குறித்து பேசியுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, “பதவியைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எனக்கு நீதிதான் வேண்டும். நீதியைப் பற்றி நான் மட்டுமே கவலைப்படுகிறேன். எனவே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் நான் தயார். பயிற்சி மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த என்னால் முடிந்தவரை நான் முயற்சித்தேன். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பயிற்சி மருத்துவர்கள் ஏற்காதபோதும், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், டிஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் மூன்று நாள்களுக்காக அவர்களுக்காகக் காத்திருந்தேன்.

எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சாமானியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து மூன்று நாள்களாகியும் பயிற்சி மருத்துவர்கள் பணிக்குத் திரும்பவில்லையென்றாலும், சில சமயம் பொறுத்துக்கொள்ள வேண்டியிருப்பதால் எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொறுத்துக் கொள்வது நம் கடமைதான்.” என்று கூறியிருக்கிறார்.