Women Hostels: பெண்கள் விடுதிகள் நடத்த அரசின் விதிமுறைகள் என்னென்ன? | Tamilnadu

பணிக்காக, வேலைவாய்ப்பிற்காக, படிப்பிற்காக ஏராளமானப் பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு சென்னை, மதுரை, கோவை போன்ற நகர்புறங்களுக்குச் சென்று விடுதிகளில் தங்குகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணிபுரியும் பெண்களுக்கெனக் குறைந்த வாடகையில் பெண்கள் விடுதிகளுக்கானத் திட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகிறது. ஆனால், அது போதுமானதாக இல்லாததால் ஏராளமானத் தனியார் விடுதிகள் நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. வீடுகள், ஆப்பார்மென்ட்டை விடுதிகளாக மாற்றி நடத்துவது, வாடகைக்கு வீட்டை எடுத்து விடுதிகளாக மாற்றியும் பெண்களுக்கான விடுதிகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்படிப் பெண்களுக்கான விடுதிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு சமூகநலத்துறையிடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 2014-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு இதற்கெனப் பிரத்யேகச் சட்ட விதிமுறைகளை வகுத்திருக்கிறது.

Representational Image

பெண்கள் விடுதிகளுக்கான அரசின் சில முக்கியமான விதிமுறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்:-

1. அரசிடமிருந்து ஒப்புதல் பெற்ற கட்டடங்களில் மட்டுமே பெண்கள் விடுதிகள் அமைப்பட வேண்டும். உரிமம் வாங்காதக் கட்டடத்தில் விடுதிகளை நடத்தக் கூடாது. உரிமத்திற்கு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் கட்டாயம்.

2. உரிமத்திற்காக விண்ணபித்த விடுதியின் கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் அல்லது அவரது அலுவலர்கள் குழு ஆய்வு செய்து உரிமத்திற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

3. விபத்து, மருத்துவ அவரசம் உள்ளிட்ட எதிர்பாராதவிதமாக நடக்கும் சம்பவங்களுக்கு முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்புகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் விடுதிகளில் கட்டாயம் இருக்க வேண்டும்.

4. 24 மணிநேரமும் விடுதியில் பாதுகாவலர்கள் இருக்க வேண்டும். சுற்றுச்சுவர் நான்கு புறமும் இருக்க வேண்டும். அறையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெண்களே இருக்க வேண்டும்.

5. தங்குமிடத்தின் பராமரிப்புப் பணிகளைத் தவறாமல் செய்ய வேண்டும். உணவு, தங்கும் அறை, கழிவறை ஆகியவற்றில் சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும்.

Representational Image

6. வெறுமனே தங்கும் விடுதிகளுக்கான உரிமத்தை மட்டும் பெற்றுவிட்டு, பெண்கள் விடுதிகளை நடத்தக் கூடாது. தெளிவாக விண்ணபித்து பெண்கள் விடுதிகளை நடத்துவதற்கான உரிமத்தைப் பெற வேண்டும்.

7.  பெறப்பட்ட உரிமத்தை காலாவதியாகும் தேதிக்கு முன்பே அல்லது மூன்று மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும்.

8. விடுதியில் தங்கும் பெண்களுக்கான விவரங்களை முறையாக வாங்க வேண்டும்.

9. கட்டாயப்படுத்தி, ஒப்புதலின்றி பெண்களை விடுதியில் தங்க வைக்கக் கூடாது.

10. விதிமுறைகளை மீறுபவர்களுக்குக் குறிப்பிட்ட ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதங்கள் விதிக்கப்படும்.

11. அரசின் விதிமுறைகளை பின்பற்றாத விடுதிகள் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சமூகநலத்துறை, மாநகராட்சி, காவல்துறையிடம் புகாரளிக்கலாம்.

மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றித்தான் பெண்கள் விடுதிகளை நடத்த வேண்டும்!