மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பெண்கள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையத்தில் விசாகா பெண்கள் தங்கும் விடுதி சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இதில் மதுரை, தேனி , திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 45-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்து வேலைக்கும், படிப்பதற்கும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 4 மணியளவில் விடுதியில் இருந்து கரும்புகை வெளியேறுவதை அருகிலிருந்தவர்கள் பார்த்து தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளிக்க, தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர்.
இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போராடி விடுதிக்குள் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். விடுதியில் இருந்த பிரிட்ஜ் வெடித்து அதிலுள்ள சிலிண்டரிலிருந்து வெளியான நச்சுப்புகையால் பெண்கள் மயங்கி விழுந்துள்ளனர்.
அதில் ஆசிரியர் பரிமளாவும், சரண்யா என்பவரும் உயிரிழந்துள்ளனர். விடுதி் வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி, சமையலர் கனி ஆகிய 3 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தங்கியிருந்த பல பெண்களின் கல்விச் சான்றிதழ்கள் முழுவதுமாக எரிந்து கருகியுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள புஷ்பா என்பவர் லீசுக்கு எடுத்து இந்த விடுதியை நடத்தி வந்துள்ளார். பழமையான கட்டடம் என இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் அதையும் மீறி விடுதி செயல்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.