பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்மையில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகைத் தந்துள்ளார். கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், “உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சியாக பா.ஜ.க இருந்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாகத்தான் சீனாவில் உள்ள கட்சிகள் உள்ளன. பா.ஜ.க – வில் 10 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த வருடம் 11 கோடியாக உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் நாடுமுழுவதும் தீவிரமாக களமிறங்கியிருக்கிறோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்பதே ஒரே இலக்காக கொண்டிருக்கிறோம். கிளை வாரியாகவும், பூத் வாரியாகவும் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான் பிறந்த சொந்த ஊர் பூத்தில் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்துவிட்டு, குன்னூர் வந்துள்ளேன். இங்கும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து இரண்டு மாதங்கள் தீவிரமாக உறுப்பினர் சேர்க்கையானது தொடர்ந்து நடைபெற இருக்கிறது” என்றார்.