`உதயநிதியை துணை முதல்வராக்குவதில் எந்த தவறுமில்லை; ஏனென்றால்..!’ – டாக்டர் கிருஷ்ணசாமி சொல்வதென்ன?

மதுரை வந்திருந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் பிற மலைப்பகுதிகளில் உள்ள மக்களை வசிப்பிடத்தை விட்டு அகற்றவில்லை, மாஞ்சோலையில் வசித்த மக்கள் மட்டுமே மலையை விட்டு அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

Vijay TVK – விஜய் த.வெ.க

தேசிய மனித உரிமை ஆணையம், செப்டம்பர் 18-ம் தேதி மாஞ்சோலையில் விசாரணை நடத்துகிறது. அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 16-ம் தேதி பேரணி சென்று தலைமை செயலகத்தை முற்றுகையிட உள்ளோம்.

பூரண மது விலக்கை தேர்தலுக்காக மட்டும் பயன்படுத்தக் கூடாது, தமிழகத்திலிருந்து மதுவை அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

திரைத்துறையால் தமிழகத்தில் அரசியல் மாசடைந்துள்ளது, தமிழக அரசியலுக்கு வரக் கூடாது என நடிகர் விஜய்யை தடுக்க முடியாது, விஜய்யை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் கைகளில் உள்ளது.

விஜய்யின் மாநாட்டுக்கு யாரும் இடையூறு செய்யக் கூடாது, விஜய் மாநாட்டுக்கு கடும் கட்டுபாடுகளை விதிக்கக் கூடாது. விஜய் அரசியல் களத்திற்கு வரட்டும், அவரை நேரில் சந்திக்கலாம்.

டாக்டர் கிருஷ்ணசாமி

வாக்குகளை அளித்து தி.மு.க-வை ஆட்சியில் அமர வைத்துள்ளனர், அதனால் உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவதில் எந்த தவறுமில்லை. தி.மு.க – அ.தி.மு.க தேர்தலுக்கு முன் ஒரு கருத்தும், தேர்தலுக்குப் பின் ஒரு கருத்தும் பேசி வருகின்றன. எதிர்க்கட்சியாக இருந்தபோது பூரண மதுவிலக்கை அமல்படுத்த தி.மு.க கோரிக்கை விடுத்தது, மது விற்பனை இல்லையென்றால் ஆட்சியை நடத்த முடியாது என தி.மு.க – அ.தி.மு.க நினைத்துக்கொண்டு இருக்கின்றன.

மது இல்லாத ஆட்சியைக் கொடுப்பதற்கு தி.மு.க-அ.தி.மு.க உத்தரவாதம் தர வேண்டும், மது ஒழிப்பில் தி.மு.க – அ.தி.மு.க மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். மதுவை கொடுத்துதான் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் எனும் அவசியமில்லை, பிற கட்சிகள் பூரண மதுவிலக்கு கோரும்போது, தி.மு.க – அ.தி.மு.க மட்டுமே மதுவை தூக்கிப்பிடித்து கொண்டுள்ளன. பூரண மதுவிலக்கில் தி.மு.க -அ.தி.மு.க தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்” என்றார்.