2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் இறுதிப் போட்டியில் வென்று தங்கத்துடன் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 50 கிலோ எடைப் பிரிவைச் சேர்ந்த வினேஷ், நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிகம் இருந்ததால் கடைசி நேரத்தில் மல்யுத்த விதிமுறையின்படி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதன் பிறகு மனமுடைந்த வினேஷ் போகத், மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வையும் அறிவித்தார்.
அரையிறுதிவரை முன்னேறியதற்காக வெள்ளிப்பதக்கம் தர மேல்முறையீடு செய்ய வேண்டும் எனச் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத் சார்பில் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு மனுத்தாக்கல் செய்தது. ஆனால், இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்து, மனுவைத் தள்ளுபடி செய்தது நடுவர் மன்றம். வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து நாடு திரும்பிய போது ஹரியானா காங்கிரஸ் எம்.பி.தீபேந்தர் வரவேற்றார்.
அதிலிருந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார் என்று செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில் காங்கிரஸின் அழைப்பின் பேரில், வினேஷ் போகத்தும், பஜ்ரங் புனியாவும் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸில் இணைந்தனர். வினேஷ் போகத் தற்போது ஹரியானாவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வினேஷ் போகத்திற்கு பயிற்சி அளித்து வந்த அவரது பெரியப்பாவான மஹாவீர் போகத் வினேஷ் போகத் அரசியலில் களமிறங்குவதில் தனக்கு உடன்பாடில்லை என்று விமர்சித்து பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், ” வினேஷ் போகத் இன்னும் ஒரு ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவர் ஒலிம்பிக் இலக்கை அடைவதில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அவர் அரசியலுக்கு வருவதை நான் எதிர்க்கிறேன். அரசியலில் நுழைவது வினேஷ் போகத் மற்றும் அவரது கணவரின் விருப்பம். எங்களுக்கு அதில் விருப்பம் இல்லை. ஒட்டுமொத்த நாடும் அவர் 2028-ல் ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்தது. நானும் அதைதான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் அரசியலில் நுழைந்து விட்டார். அரசியலில் அவர் எம்.பி யாகவும். எம்.எல்.ஏ ஆகவும் ஆகலாம். ஆனால் அவர் தங்கம் வென்றால் அது வாழ்நாள் நினைவாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.