மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வி.சி.க-வின் மாநாடு குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர், சிவகங்கை மாவட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். மதுரையிலிருந்து கிளம்பிய உதயநிதிக்கு, அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் சிவகங்கை எல்லையான பூவந்தியில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்பு சிவகங்கை விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியினை தொடங்கி வைத்தவர், சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகளிடம் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து, ஆலோசனைகளை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “மதுரையை விட சிவகங்கையில் ஆய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றதது. நிறைவேற்றப்பட்ட அரசு திட்டங்கள் குறித்தும், இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ள நலத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தேன். விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூறியுள்ளேன். ஆய்வுப் பணிகள் குறித்து முழு அறிக்கையும் முதல்வரிடம் தெரிவிக்கப்படும்” என்றவரிடம், “உங்கள் கூட்டணியில் உள்ள வி.சி.க நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க பங்கேற்க உள்ளதே’ என்ற கேள்விக்கு, “பங்கேற்பது அவர்களது இஷ்டம். அதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்” என தெரிவித்தார்.