கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் சிவக்குமார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் தண்டனை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிவக்குமாரை சிறைத்துறை டி.ஐ.ஜி-யின் வீட்டு வேலைக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அப்போது, டி.ஐ.ஜி வீட்டில் இருந்த ரூ.4.25 லட்சம் காணாமல் போனதாகக் கூறி அவரை அடித்து தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இது குறித்து சிவக்குமாரின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதன்முலம் நீதிமன்ற உத்தரவின்பேரில் வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் விசாரித்தார். அவரது அறிக்கையின் அடிப்படையில் சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அதே நேரத்தில், வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உட்பட 14 பேர் மீது 5 பிரிவுகளில் கீழ் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவக்குமாரிடம் நேற்று காலை சி.பி.சி.ஐ.டி எஸ்.பி வினோத்சாந்தராம் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நேற்று காலை 10:30 மணிக்கு சேலம் சிறைக்குள் சென்ற சி.பி.சி.ஐ.டி போலீஸார் மாலை 8:30 மணி வரை சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவருடைய வாக்குமூலத்தை கேமராவில் பதிவு செய்துகொண்டனர்.
அடுத்தகட்டமாக வேலூர் சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்காக இன்று காலை வேலூருக்கு விரைந்திருக்கின்றனர், சி.பி.சி.ஐ.டி போலீஸார். இன்று காலை 11 மணியளவில் வேலூர் மத்திய சிறைச்சாலைப் பகுதியை அடைந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், சிறையிலுள்ள மற்ற கைதிகளிடமும் விசாரணை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.