இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி இரு தினங்களுக்கு முன் தன் மனைவியுடன் கோயம்புத்தூர் வந்து சென்றுள்ளார். அங்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இவரது சர்ப்ரைஸான தமிழ்நாடு விசிட்டின் காரணம் குறித்துத் திருமணத்தில் கலந்துகொண்ட சிலர் கூறிய தகவல்களைக் கேட்கலாமா?
”கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவங்க ரவி – சித்ரா தம்பதியினர். இவரது மகள் நிக்கி. இவங்களுக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கோகுல்தாஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயமாச்சு. கோகுல்தாஸ் குடும்பத்தினருக்குப் பூர்வீகம் கர்நாடகா. இப்ப வெளிநாட்டுல வசிக்கிறது இந்தக் குடும்பம். வெளிநாடுகள்ல இந்தக் குடும்பத்துக்குச் சொந்தமா தங்கச் சுரங்கங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
கோகுல்தாஸும் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷும் நெருங்கிய நண்பர்களாம். இந்தச் சூழலல் கோகுல்தாஸ் – நிக்கி ஜோடியின் கல்யாணத்தை கோவை சிறுவாணி அருகேயுள்ள பெருமாள்பதியில நடத்த திட்டமிட்டாங்க மணமக்கள் வீட்டார். தன்னுடைய திருமணத்துக்குத் தன் நெருங்கிய நண்பர் ஆகாஷ் அம்பானிக்கும் அழைப்பு விடுத்திருந்தார் கோகுல்தாஸ்.
அந்த அழைப்பை ஏற்றுதான் மனைவியுடன் கோயம்புத்தூர் வந்தார் ஆகாஷ் அம்பானி. முன்னதாக தனி விமானத்துல கோவை ஈஷா மையத்துக்கு வந்த ஆகாஷ் அம்பானி அங்கிருந்து தனியார் ரிசார்ட் ஒன்றுக்கு கார்கள் மற்றும் மும்பையிலிருந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ தங்குவதற்காகச் சென்றார். மொத்தம் 4 தனி விமானம், 40 கார்களில் இந்தத் திருமணத்துக்கு அம்பானி மகனுடன் மேலும் சில தொழிலதிபர்கள் வருகை தந்தார்கள் என்கின்றனர். அங்கிருந்து திருமணம் நடந்த இடத்துக்குச் செல்ல பிரபலம் ஒருவர் ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து தந்தார்.
கல்யாணத்தை முடிச்சிட்டு ஈஷா மையத்துக்குத் திரும்பி ஆதியோகி சிலை, தியான லிங்கம் ஆகியவற்றைத் தரிசனம் செய்து விட்டு அன்னைக்கு மாலையே மனைவியுடன் மும்பைக்குத் திரும்பிட்டார் ஆகாஷ்” என்றனர் அவர்கள்.
மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்தத் திருமணத்தையொட்டி கோவை தொண்டாமுத்தூர் பகுதிகளில் போலீஸ் தரப்பில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்களாம்.