`அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல நம் முன்னோர்கள்தான்!’ – ம.பி கல்வியமைச்சர் பேச்சு

அமெரிக்காவை முதலில் கண்டுபிடித்தது கொலம்பஸ் என்றே கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் திங்கள் அமெரிக்க நாடுகளில் கொலம்பஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இருப்பினும், அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல என்கிற பேச்சும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக, அமெரிக்கப் பழங்குடியினர், கொலம்பஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல இந்திய முன்னோர்கள்தான் என மத்தியப் பிரதேச பா.ஜ.க அமைச்சர் பேசியிருக்கிறார்.

கொலம்பஸ்

பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இதனைத் தெரிவித்த மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர், “அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ் என்பது இந்தியாவில் தேவையில்லாமல் கற்பிக்கப்படும் ஒரு பொய். இந்திய மாணவர்களுக்கு இது முற்றிலும் பொருத்தமற்றது.

அப்படியிருந்தும், அவர்கள் அதைக் கற்பிக்கப்போகிறார்கள் என்றால், கொலம்பஸுக்குப் பிறகு வந்தவர்கள் அங்கிருந்த பழங்குடியினத்தவர்களை எவ்வாறு அழித்தார்கள், அவர்களை எவ்வாறு மதமாற்றம் செய்தார்கள் என்பதையும் கற்பிக்க வேண்டும். மேலும், இந்திய மாலுமி ஒருவர் 8-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்குச் சென்று சான் டியாகோவில் பல கோயில்களைக் கட்டினார். நம் முன்னோர்கள் அங்கு சென்றபோது மாயா நாகரிகத்தோடு அவர்களின் கலாசாரத்தை வளர்க்க உதவினர்.

ம.பி உயர் கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர்

இந்தியாவின் இந்த சிந்தனை முறை மற்றும் தத்துவத்தை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். எதைக் கற்பித்தாலும் அதைச் சரியாகக் கற்பிக்க வேண்டும். எனவே, அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல, நம் முன்னோர்கள்தான். அதேபோல, இந்திய வர்த்தகரான சாந்தனின் கப்பல் தன்னுடைய கப்பலைவிட 2 முதல் 4 மடங்கு பெரியது என்று வாஸ்கோடகாமா எழுதியிருக்கிறார். சாந்தனைப் பின்தொடர்ந்துதான் வாஸ்கோடகாமா இந்தியா வந்தார். ஆனால், இந்தியாவிற்கான கடல் வழியைக் கண்டுபிடித்தவர் வாஸ்கோடகாமா என்று வரலாற்றாசிரியர்கள் இந்திய மாணவர்களுக்குத் தவறாகக் கற்பித்தனர்.” என்று கூறினார்.