‘இனிமேல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டாம்’ என்று கூறினால், உங்களுக்கு எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். கிட்டதட்ட அந்த மாதிரியான சட்டம்தான் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தற்போது நெடுஞ்சாலை கட்டண வசூலில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இது ‘தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (விகித வசூல் நிர்ணயம்) திருத்த விதிகள் 2024’ என்று அழைக்கப்படுகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-03/1eb7b27f-9a2c-4f94-a6e3-a7a5bbf2f7ca/65e759f013ae3.jpg)
இந்தத் திருத்தம் நேஷனல் பெர்மிட் இல்லாத GNSS (Global Navigation Satellite System) பொருத்தியிருக்கும் அனைத்து தனிநபர் வாகனங்களுக்கும் பொருந்தும். “இனிமேல் சுங்கக்கட்டணமே கட்ட வேண்டாமா?” என்று கேட்காதீர்கள்… நிச்சயம் கட்ட வேண்டும். ஆனால், 20 கிலோமீட்டர் பயணம் செய்பவர்களுக்குச் சுங்கக்கட்டணம் கிடையாது.
தெளிவாகக் கூறவேண்டுமானால், நீங்கள் தேசிய நெடுஞ்சாலை, பை-பாஸ் போன்ற சாலைகளில் பயணிக்கும் முதல் 20 கிலோமீட்டரில் ஏதாவது சுங்கச்சாவடி வந்தால், அங்கே கட்டணம் செலுத்த வேண்டாம். ஆனால் அதற்கு மேல் அதாவது 20 கிலோமீட்டருக்கு மேல் வரும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சலுகை தினமுமே கிடைக்கும். ஒருவர் 20 கிலோமீட்டர்தான் பயணித்திருக்கிறார்களா? என்பது GNSS மூலம் கண்காணித்து கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
சுங்கச்சாவடிகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அதன் பணியை இன்னும் எளிதாக்கவும்தான் இந்த திருத்தம் நேற்று முதல் அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.