இன்றைய டெக்னாலஜி உலகின் ஜாம்பவான் ஆப்பிள் நிறுவனம். வெற்றிகரமான ஒரு நிறுவனத்துக்கு உதாரணமாகக் காட்டப்படுகிறது.
“புரட்சி என்பது தானாக மரத்திலிருந்து விழும் ஆப்பிள் அல்ல. அதை நாம்தான் விழச் செய்ய வேண்டும்.” என்பார் சேகுவேரா. ஆப்பிள் என்ற டெக்னாலஜி புரட்சியை விழச் செய்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ்!
ஜாப்ஸ் தனது ஐடியாக்களுக்காகவும், அர்ப்பணிப்புக்காகவும் அறியப்படுபவர். ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கியபோது அதன் மார்கெட்டிங்கில்தான் அதிக கவனம் செலுத்தினார். கணினி உருவாக்கத்தைப் பார்த்துக்கொண்டவர் ஸ்டீவ் வோஸ்னியாக்!
ஆப்பிள் நிறுவனம்
ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் இணைந்து ரொனால்ட் வெய்ன் என்பவரின் துணையுடன் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினர்.
எப்போதும் புதுமையான விஷயங்களின் மேல் நம்பிக்கை வைப்பவர் ஜாப்ஸ். ஒரு கண்டுபிடிப்பு உலகை மாற்றிவிடும் என நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது சாகச மனப்பான்மை அவருக்குப் பிரச்னைகளையும் கொடுத்தது.
இன்று அமோகமாக விற்பனையாகி வரும் மேக் கணினியின் முதல் வெர்ஷன் The Macintosh computer 1984 இல் வெளியானது. இதுதான் Mouse-ஐ கம்பியூட்டரின் இன்றியமையாத பாகமாக அமைத்தது. ஆனால் விற்பனையில் கோட்டைவிட்டது.
மேக்கின் தோல்வி ஆப்பிளின் இயக்குநர்களை ஸ்டீவ் ஜாப்ஸுக்கு எதிராகத் திருப்பியது. மேலும் ஜாப்ஸின் இயல்பு மற்ற தொழில்முனைவோர்களிடம் இருந்து வித்தியாசமாக இருந்ததாலும், அவரது சாகச மனப்பான்மையாலும் இயக்குநர்கள் அவரை நிறுவனத்திலிருந்து வெளியேற்ற முடிவு செய்தனர்.
ஸ்டீவ் ஜாப்ஸ் நெக்ஸ்ட் என்ற மற்றொரு கணினி நிறுவனத்தைத் தொடங்கினார்.
ஜாப்ஸ் தனது நிறுவனத் தயாரிப்புகளை வெறும் கேட்ஜெட்டாக இல்லாமல், கலைப்படைப்பாகப் பார்த்தவர். அதே நேரத்தில் அவர் ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்டும் கூட. தான் களமிறங்கும் இடம் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என நினைத்தார். அப்படியே ஆப்பிளுக்கு 1997ல் சி.இ.ஓவாக ரீ-எண்ட்ரி கொடுத்தார்!
ஆப்பிளின் இரண்டாம் ஆட்டம்
ஜாப்ஸின் வெளியேற்றத்துக்குப் பிறகு ஆப்பிள் நிறுவனம் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் திணறியது. வெற்றியோ, தோல்வியோ, “இதுதான் வழி என் பின்னால் வாருங்கள்” எனச் சொல்லும் தலைவன் இல்லாமல் போனதுதான் காரணம்.
மைக்கேல் ஸ்பின்ட்லெர், ஜான் ஸ்கல்லி, கில் அமெலியோ என ஆப்பிளின் சி.இ.ஓ-வாக பதவியேற்றவர்கள் சொதப்பினர். இயக்குநர்களுக்குள்ளேயே யார் ஆதிக்கம் செலுத்துவது என முட்டல் மோதல்கள்.
மைக்ரோசாஃப்ட், டெல், ஐபிஎம் நிறுவனங்கள் அசுர வளர்ச்சி பெற்றன. சந்தையில் ஆப்பிளின் இடம் கேள்விக்குறியானது. திறமையான ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறினர். 1996ம் ஆண்டு ஜாப்ஸின் நெக்ஸ்ட் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் ஜாப்ஸ் மீண்டும் நிறுவனத்துக்குள் வந்தார். ஆப்பிளின் இரண்டாம் ஆட்டம் தொடங்கியது.
புதுமைகளை வரவேற்ற ஜாப்ஸ், நிறுவனத்தின் வடிவமைப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்களுடன் அதிக நேரம் செலவிட்டார். ஐமேக், ஐபுக் என இரண்டு தயாரிப்புகள் சந்தையைத் திரும்பிப் பார்க்க வைத்தன. ஐ-டியூன்ஸ், ஐ-பாட் இளைஞர்களின் உள்ளங்கை அரவணைப்பைப் பெற்றன.
மேக் ஓஎஸ் எக்ஸ் (Mac OS X), ஆப்பிள் ஸ்டோர் அறிமுகப்படுத்தப்பட்டு ஆப்பிள் தயாரிப்புகள் புத்துயிர் பெற்றது. ஃபைனல் கட், லாஜிக் ஆடியோ நிறுவனங்களை ஆப்பிள் கைப்பற்றியது. இதனால் இன்றுவரை பொழுதுபோக்குத் துறை நிறுவனங்களுக்கு ஆப்பிள் கணினி இன்றியமையாததாக விளங்குகிறது.
புற்றுநோய்
காலத்தின் வேகத்துக்கும், டெக்னாலஜியின் வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து ஓடும் மாரத்தான் வீரராக மாறினார் ஸ்டீவ் ஜாப்ஸ். அவர் கால்களுக்கு வேகத் தடை போட்டது புற்றுநோய். 2003ம் ஆண்டு ஜாப்ஸின் கணையத்தில் புற்றுநோய் கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்றுச் சிகிச்சை என ஆண்டுகள் கடந்தன. ஆப்பிள் அசைக்க முடியாத விருட்சமாக வளர்ந்திருந்தது. 2011ம் ஆண்டு சி.இ.ஓ பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் ஜாப்ஸ். அக்டோபர் 5, 2011 மரணமடைந்தார்.
டிம் குக்
தனது நிர்வாகத்தில் சி.ஓ.ஓ பதவியிலிருந்த டிம் குக்கை பரிந்துரைத்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். அதனை இயக்குநர்கள் குழுவும் ஏற்றது. ஆப்பிளின் வரலாறு என்பதை ஸ்டீவ் ஜாப்ஸின் கதையிலிருந்து பிரித்துவிட முடியாது. ஸ்டீவைப் போலவே நிறுவனத்துக்காகத் தன்னை ஒப்புக்கொடுத்து வளர்ந்தவர் டிம் குக். ஆனால் இவர் ஸ்டீவைப் போலக் கலை நயமிக்கவரோ, புதுமையை விரும்புபவரோ அல்ல.
டிம் குக் ஒரு ராஜதந்திரி. அமெரிக்காவும் சீனாவும் அரசியல் களத்தில் இரு துருவங்களாக மோதிக்கொண்ட போதும் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு இரண்டு நாடும் ஆதரவளிக்கும்படி பார்த்துக்கொண்டார்.
2000களில் ஆப்பிள் தொழிற்சாலையைச் சீனாவில் அமைத்ததிலும் ஆசியாவில் ஆப்பிள் சந்தையை விரிவுபடுத்தியதிலும் டிம்மின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
நிறுவனர்-தலைவர் என்பவர்தான் ஒரு நிறுவனத்தின் ஆணிவேர். அவருக்குப் பிறகு அது சரிந்துவிடாமல் காத்தவர் டிம். அதற்காக மிகுந்த கண்டிப்புடன் நிர்வாகப் பணிகளை மேற்கொண்டார்.
புதுமைகளை உருவாக்குவதை விட ஜாப்ஸின் சாயலுடன் வெளிவந்த தயாரிப்புகளை மேலும் மேலும் சீர் செய்து மார்கெட்டின் உச்சத்தில் வைத்திருப்பதிலேயே கவனம் செலுத்தினார். ஆப்பிள் தயாரிப்புகள் மினிமலாக, சிம்பிளாக இருப்பதில் உறுதியாக இருந்தார். தங்களால் மிகச் சிறப்பாக வழங்க முடியாத தயாரிப்புகளை வெளியிடாமல் இருப்பது ஆப்பிளின் பாலிசி!
ஆப்பிளின் இன்றைய சந்தை மதிப்பு
அப்படியிருந்தும் குறைந்தபட்சம் தங்கள் போட்டியாளர்களை விட 2 ஆண்டுகள் முன்னதாகக் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நிறுவனமாகத் திகழ்கிறது ஆப்பிள். ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த ஆண்டு ஆப்பிளின் சந்தை மதிப்பு 348 பில்லியன் டாலராக இருந்தது. இன்றைய சந்தை மதிப்பு 3.36 ட்ரில்லியன் டாலர்கள்! இந்த உச்சத்தை எட்டச் செய்தவர் டிம் குக்.
2014ம் ஆண்டு தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்பதைப் பெருமையுடன் அறிவித்தார் டிம். அதற்காக எந்த மோசமான எதிர்வினையும் எழாதபடி பார்த்துக்கொண்டார். எல்.ஜி.பி.டி,க்யூ சமூகத்தின் அளப்பரிய ஆதரவையும் பெற்றார்.
ஆப்பிள் நிறுவனம் தன்னை எப்போதும் ஒரு பிரிமியர் பிராண்டாக நிலைநிறுத்திக்கொள்வதும், எத்தகைய சரிவிலும் பிடிவாதமாகத் தன்னிலை மாறாமல் இருப்பதுமே அதன் வளர்ச்சிக்கு அச்சாணி, இன்றைய உலகில் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் ஒவ்வொன்றும் தொழில்நுட்ப புரட்சிக்கான விதைகள்!