வெளிநாட்டில் முதல்வர்!
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார். முதல்வர் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன்பாகவே அமைச்சரவை மாற்றம் இருக்கும், உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படும், கட்சியில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் இருக்கும் என்று பெருமளவில் பேசப்பட்டது. ஆனால், இதுவரை எந்த மாற்றமும் நடக்கவில்லை.
முதல்வர் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன்பாக அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்தது. அதேபோலவே, திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடந்து முடிந்திருந்தது. நான் வெளிநாட்டுக்குச் சென்றாலும், அங்கிருந்தே ஆட்சி பணிகளையும், கட்சி செயல்பாடுகளையும் தொடர்ந்து கவனித்து வருவோம். உங்கள் அனைவரிடமும் நடக்கும் பணிகள் கவனிப்பேன் என்று அழுத்தமாகச் சொல்லியிருந்தார். அதுபோலவே அவ்வப்போது கட்சியில் என்ன நடக்கிறது என்று மூத்த நிர்வாகிகளிடம் பேசி தெரிந்துகொண்டிருக்கிறார்.
ஆய்வுக் கூட்டம்!
கட்சி பணிகள் ஒருபுறமிருக்க அமெரிக்காவிலிருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொள்கிறேன் என்று முதல்வர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவு செய்திருந்தார். மேலும், கடந்த வாரத்தில் அறிவாலயத்தில் ஒருங்கிணைப்புக் குழு திமுக மூன்று சார்பு அணிகளுடன் ஆய்வுக்கூடம் நடத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில், இம்மாதம் நடைபெறவுள்ள திமுகவின் முப்பெரும் விழா, பவளவிழா ஏற்பாடுகள் குறித்துப் பேசப்பட்டது. அடுத்ததாகக் கட்சி சார்பில் மாவட்டம் தோறும் நடைபெறும் பொது உறுப்பினர்கள் கூட்டம் குறித்து தகவல் கேட்டறிந்தார். அதேபோல, அமெரிக்காவில் முதலீடுகள் தொடர்பாகத் தகவலையும் ஒருங்கிணைப்பு குழுவினரிடம் தகவல் பகிர்ந்திருக்கிறார் முதல்வர். பவளவிழாவுக்கு முன்பாக கட்சி உறுப்பினர்கள் வீடுகள், கட்சி அலுவலகங்களில் கட்சிக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார்.
மாற்றத்துக்கான பரிந்துரை!
ஒருங்கிணைப்புக் குழு சார்பாக அமைச்சர் உதயநிதி பேசும்போது, “கட்சியில் ஏற்படுத்தவேண்டிய மாற்றம் குறித்து ஒருங்கிணைப்புக் குழு பரிந்துரைகளைத் தயார் செய்து வருகிறது. முதல்வர் தமிழகம் திரும்பியதும் அந்த பரிந்துரைகளை முதல்வரிடத்தில் சமர்ப்பிக்கப்படும்” என்று பேசியதாக திமுக வட்டாரங்கள் தகவல் சொல்கின்றன.
அப்படி என்ன மாற்றம் இருக்கும் என்பது தொடர்பாக திமுக அறிவாலய மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த நேரத்திலிருந்து கட்சியிலும், அமைச்சரவையிலும் மாற்றம் இருக்கும் என்று தொடர்ந்து பேசப்பட்டுவந்தது. உதயநிதிக்குத் துணை முதல்வர் பொறுப்பு கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அந்த சமயத்தில் கட்சியில் சீனியர் ஒருவர் எனக்கும் துணை முதல்வர் பொறுப்பு தரவேண்டும் என்று அடம்பிடித்ததினாலேயே தாமதம் ஏற்பட்டது. அதேசமயத்தில், அமைச்சரவையில் ஒருசிலரை வெளியேற்றிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கவும் ஆலோசனை நடந்தது. அறிவாலயம் மற்றும் பென் கம்பெனி கொடுத்த லிஸ்டில் முதல்வருக்கு முழு உடன்பாடு இல்லாத காரணத்தினால் அந்த மாற்றமும் தள்ளிப்போனது.
செந்தில் பாலாஜி வெளியே வரட்டும் அமைச்சரவை மாற்றத்தைப் பார்த்துக்கொள்ளலாம் என்று முதல்வர் தரப்பும் மாற்றங்களைத் தள்ளிப்போட்டிருந்தது. ஆனால், தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் இனியும் காலதாமதப்படுத்த முடியாது. எனவே அமைச்சரவை மாற்றமும் சரி, மாவட்டச் செயலாளர்கள் மாற்றமும் சரி முதல்வர் தமிழகம் வந்ததும் முடிவு செய்யப்படும். முப்பெரும் விழா முடிந்ததுமே மாற்றங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம். மாவட்டச் செயலாளர்களைப் பொறுத்தவரை தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள மா.செ, நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றாத மா.செ என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. அந்த பட்டியலில் ஒருசிலர் தூக்கியடிக்கப்படுவார்கள். அதேபோல, நான்கு-ஐந்து மாவட்டங்கள் வைத்திருக்கும் மா.செ-களிடமிருந்து மாவட்டங்களைப் பிரிந்து புதிய மாவட்டம் உருவாக்கவேண்டும் என்ற பேச்சு இருந்தது. ஒருங்கிணைப்புக் குழுவும் அதற்கான பட்டியலைத் தயார் செய்து பரிந்துரை செய்யத் தயாராக இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டே இந்த மாற்றங்கள் அனைத்தும் நடக்கவுள்ளது” என்றார்கள் விரிவாக.