“பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் கையில் கொடுக்கக் கூடாது” – தொல்.திருமாவளவன்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள ஹெச்.ஏ.பி. பி தொழிற்சாலையில் உள்ள, அம்பேத்கர் தொழிலாளர் யூனியன் மற்றும் ஓ.எஃப்.டி அம்பேத்கர் தொழிலாளி யூனியன் சார்பில் தொழிற்சங்கர்களின் சிறப்பு கலந்துரையாடல் கூட்டம், செயற்குழு உறுப்பினர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்வில் பேசிய தொல்.திருமாவளவன், “இன்று வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். ஒரு நாள் முழுவதும் மகிழ்ச்சியான அனுபவம்தான். ஓய்வெடுக்க முடியவில்லை. சுற்றுப்பயணம் செய்து ஃபயரிங் எல்லாம் முடித்து வந்துள்ளேன். வித்தியாசமான, மறக்க முடியாத அனுபவம். OFT-யில் நுழைந்த பிறகு துப்பாக்கிகள் இயங்குகின்ற விதம், அவர்கள் பயன்படுத்துகிற புல்லட்ஸ் எப்படி தயாரிக்கிறார்கள் போன்ற விவரங்களை, புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன். இரண்டு தொழிற்சாலைகளிலும் என்னுடன் பயணித்த அதிகாரிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்கள், தொழிற்சங்க பொறுப்பாளர்கள், அலுவலர்கள் சங்கத்தை சார்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை தந்தார்கள். அதிகாரிகள் அந்த கோரிக்கைகளுக்கு அமர்ந்து, எது செய்ய முடியும், எது செய்ய முடியாது என பொறுப்பாக பதில் தந்தார்கள். 41 தொழிற்சாலைகளும், 7 கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றப்பட்டு, ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் சவால்கள், இழப்புகள் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் தெரிவித்தார்கள். கவலை தருவதாகவும், அதிர்ச்சி அடையக் கூடியதாகவும் அந்த தகவல்கள் இருந்தன.

தொல்.திருமாவளவன்

இப்படி, தேசத்தை பாதுகாப்பதற்கான ராணுவ தளவாடங்களை தயாரிக்கிற தொழிற்சாலையில் நீங்கள் ஆற்றி வருகிற பங்களிப்புகள், அதன் மூலம் அறிவுத்திறன், செயல் திறன் தேசத்துக்கு செய்யப்பட்ட அரும்பணி மெய்சிலிர்க்க வைத்தது. உங்கள் மேல் ஒரு மரியாதையை ஏற்படுத்தி உள்ளது. இது, எவ்வளவு பெரிய அர்ப்பணிப்பு!?. ஆபத்தான ஒரு களம். அதில் பொறுப்புடன் பணியாற்றி படைக்களத்திற்கு தயாரிக்க ஒரு தேசப் பணியை செய்து வருகிறீர்கள். அரசியலில் சேர்ந்து தான் நாட்டிற்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதல்ல. இதுபோன்று அறிவை தேசத்திற்காக அர்ப்பணிப்பது போற்றுதலுக்குறியது. நேரடியாக ஜவான்களாக எல்லையோரம் நின்று நாட்டை காப்பாற்றுவது போற்றுதலுக்குரியது என்றால், துப்பாக்கியை தூக்காமல் நீங்கள் ஆற்றுவது அதற்கு நிகரான பணி. உங்களது பங்களிப்பை பாராட்டுகிறேன்.

இதுதான் நம்முடைய நிலைப்பாடு…

கார்ப்பரேட் மயமாக மாறியதால் மாற்றங்கள், புதிய பணி நியமனம் இல்லை. நூற்றுக்கணக்கான தோழர்கள் அதிகாரிகளாகவும், பணியாளர்களாகவும் இருந்தாலும் ஓய்வு பெற்ற நிலையில் அந்த பணியிடங்கள் காலியாக உள்ளது. இறந்தவர்கள் குடும்ப சூழலுக்கு கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலைகள் தர வேண்டும். அதற்கான, எந்த வழிகாட்டுதலும் இல்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி, புதிய ஓய்வு திட்டத்தை கொண்டு வந்தார்கள். அவர்கள் சேர்த்த பணத்தை செலுத்தி ஓய்வு பெற்ற பின்னர் பெற்று கொள்ளும் கான்ட்ரிபூஷன் பென்ஷன் ஸ்கீம் அது கூடாது என குரல் எழுப்பிய பின்னர் யூனிஃபை பென்ஷன் ஸ்கீம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இதுவும் பயனுள்ளதாக இல்லை. புதிய பெயரை தாங்கியுள்ளது. அதையும் மாற்ற வேண்டும்.

தொல்.திருமாவளவன்

பழைய திட்டம் தான் புதிய பெயரை தாங்கி வந்துள்ளது என தெரிவித்தனர். அதனை மாற்ற வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசின் ஊழியராக வேலைக்குச் சேர்ந்து அரசு எடுத்த கொள்கை மாற்றத்தால் உள்ளே போகும்போது அரசு தொழிலாளர்கள், வெளியே வரும்போது கார்ப்பரேட் தொழிலாளர்களாக வரவேண்டிய சூழல். இது பெரிய அநீதி. அரசு அதிகாரியாக பெறுகிற அடிப்படை சலுகைகள் கார்ப்பரேட் தொழிலாளருக்கு கிடையாது.

பல்வேறு கோரிக்கைககள் படி நிர்வாக இயக்குனர் ஒவ்வொரு கோரிக்கையும் படித்து அதற்கான விளக்கங்களை கொடுத்தார். தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருந்து போராடினால் அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது. அதேநேரம், தொழிலாளர்கள் சிதறி கிடந்தால் எதுவும் செய்ய முடியாது. எந்தப் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்க கூடாது. கார்ப்பரேட் கையில் கொடுக்கக் கூடாது. இதுதான் நம்முடைய நிலைப்பாடாக இருக்க வேண்டும்.

திருமாவளவன்

கசப்பான உண்மை…

வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால், இது அரசாங்க நிறுவனம். அரசாங்கத்தினுடைய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை அரசு நிறுவனத்திற்கு உற்பத்தி செய்ய அனைத்து கட்டமைப்பும் இருக்கிறது. ஆற்றல் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தேவையான படைக்கலன்களை டெண்டர் விட்டு அதில் தனியார் நிறுவனம் பங்கேற்க வேண்டும். அரசு பொதுத்துறை நிறுவனமாக இருக்கின்ற OFT, HAPP-ம், பங்கேற்க வேண்டும் என்ற நிலை வருத்தத்துக்குரியது. இதில், ஆர்டர் எடுத்து உற்பத்தி செய்ய வேண்டும். இந்த பாலிசி எவ்வளவு வேதனைக்குரியது. இதனை இங்கு வந்தது அறிய முடிந்தது. ஏன் ஆர்டர் இல்லை, அரசு இறக்குமதி செய்யப் போகிறது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட கூறுகின்றனர். என்ன ஆகும் இந்த பொதுத்துறை நிறுவனம். இது மிகுந்த வலியை தரக்கூடிய கசப்பான உண்மையாக இருக்கிறது. கிரீமீலேகியருக்கு எதிராக பாராளுமன்றத்தில் முதல் குரல் கொடுத்த இயக்கம் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதுவரை கீரிமிலேயருக்கான வருமான வரம்பை கொஞ்சம் உயர்த்த வேண்டுமென மன்மோகன் சிங் பிரதமாக இருந்தபோது மனு கொடுத்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் இயக்கம். ஒருவருக்கு, ஒருவர் இணைந்து இணக்கமாக செயல்பட வேண்டும். உங்கள் கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் உரத்த குரலாக வைப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.