Chennai: ‘No Parking’ போர்டுகளுக்கு வருகிறது கட்டுப்பாடு; என்ன சொல்கிறது சென்னை உயர் நீதிமன்றம்?

நகரங்களில் வீடுகள் முன்பும், கடைகள் முன்பும் பல ‘நோ பார்க்கிங்’ (No Parking) போர்டுகளை பார்த்திருப்போம். ஆனால் அந்த போர்டுகள் அனைத்தும் சட்டப்படிதான் மாட்டப்பட்டிருக்கிறதா என்று யாருக்கும் தெரியாது.

சட்டத்திற்குப் புறம்பாக ‘நோ பார்க்கிங்’ போர்டுகள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No Parking ‘பொதுநல வழக்கு’!

சட்டத்திற்குப் புறம்பாக மாட்டப்படும் ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை அகற்ற வேண்டும் என்று ஒரு பொதுநல மனுவை ஒன்றைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நந்தகுமார் என்பவர் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “சென்னையில் அடையாறு, மயிலாப்பூர், மந்தைவெளி, மாம்பலம், அசோக் நகர் உள்ளிட்ட பல இடங்களில் அடுக்குமாடி கட்டடங்கள், அடுக்குமாடிக்குடியிருப்புகள் மற்றும் பங்களாக்களுக்கு முன்பாக, சட்டத்திற்குப் புறம்பாக பொது இடங்களை ஆக்கிரமித்து ‘நோ பார்க்கிங்’ போர்டுகள், தடுப்புகளும் மற்றும் மணல் பைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த இடங்களில் பொதுமக்களால் வாகனங்களை நிறுத்த முடிவதில்லை.

இந்த பலகைகள் சட்டத்திற்குப் புறம்பானதாக இருந்தாலும், இவற்றை காவல்துறையின் உதவியுடன்தான் கட்டட உரிமையாளர்கள் வைக்கின்றனர்.” என்று கூறப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி டி. கிருஷ்ண குமார், நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்தது. இந்த வழக்கு சம்பந்தமாக வாதிட்ட அரசு வழக்கறிஞர், “சட்டத்திற்குப் புறம்பாக வைக்கப்பட்டிருக்கும் ‘நோ பார்க்கிங்’ போர்டுகள், தடுப்புகள், மணல் பைகள் ஆகியவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமான வழிமுறைகள் இரண்டு வாரத்திற்குள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்னை காவல்துறை ஆணையரால் வெளியிடப்படும்.” என்று கூறினார்.

‘No Parking’ போர்டுகளுக்கு ‘நோ’!

இதன்பின்னர், “சட்டத்திற்குப் புறம்பாக, முன் அனுமதியின்றி ‘நோ பார்க்கிங்’ போர்டுகள், தடுப்புகள் வைத்திருப்போர் மீது சட்டரீதியாக காவல்துறை நடவடிக்கை வேண்டும்” என்று அமர்வு உத்தரவிட்டது.