மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
திருப்பூரில் பரம்பொருள் என்கிற பெயரில் அறக்கட்டளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர் மகாவிஷ்ணு. இவர் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மீக சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார். அதன் ஒருபகுதியாக கடந்த 28-ம் தேதி சென்னை, அசோக் நகர், சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் ‘தன்னம்பிக்கை ஊட்டும்’ பேச்சு என்ற பெயரில் சொற்பொழிவாற்றினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். அதற்கு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சங்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை, மகாவிஷ்ணு இல்லத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போதுதான் மகா விஷ்ணு ஆஸ்திரேலியா சென்றிருப்பது தெரியவந்தது. இந்த சூழலில்தான் சென்னை திரும்பிய மகா விஷ்ணுவை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது…
இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரிகள் சிலர், “மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான், இந்த மகாவிஷ்ணு. இவருக்கு இளம்வயதிலேயே ஆன்மிகத்தில் நாட்டம் அதிகமாக இருந்திருக்கிறது. கோயில் திருவிழாக்களில்தான் முதலில் சொற்பொழிவாற்றியிருக்கிறார். பிறகு ‘பரம்பொருள்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதன்பிறகு யூடியூப் மூலம் சொற்பொழிவாற்றி வந்தார்.
வரவேற்பு அதிகரித்ததால் வெளிநாடுகளுக்குச் செல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளில் மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக உரையாற்றினேன். தான் எந்த தவறும்செய்யவில்லை. அடிக்கடி தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். அப்போது சித்தர்கள் என்னிடம் சொல்லியதைத்தான் மாணவர்களிடம் பேசினேன். சிறையில் கைதிகளிடமும், இதைத்தான் பேசுவேன். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்றும் சிரித்துக் கொண்டே கூறுகிறார்” என்றனர்.
வாக்குமூலம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்…
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “பா.ஜ.க, இந்து முன்னணியிடம் இருந்து ஆதரவை மேலும் கூடுதலாக பெறுவதற்குத்தான் மகாவிஷ்ணு இப்படி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர்களும் திருக்குறளில் இருப்பதைத்தான் பேசினார் என முட்டு கொடுத்து வருகிறார்கள். எனவேதான் மகாவிஷ்ணுவும் இப்படி பேசுகிறார். மேலும் இவ்வாறு பேசுவதன் மூலம் தனக்கு சிறையில் சலுகைகள் கிடைக்கும் என்றும் மகாவிஷ்ணு நினைக்கிறார். எனவேதான் தனது பேச்சில் இருந்து பின்வாங்கவில்லை. பாவம் செய்ததால்தான் மாற்றுத்திறனாளியாக பிறந்திருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு டெமெஜிக்.
பாவம், புண்ணியம் இருக்கிறதா என்று தெரியாது. ஆனால் இந்துக்கள் நம்பும் விஷயமாக இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு நீ பேசுகிறாய். அவரது வாக்குமூலம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இதன் மூலம் ஏற்கெனெவே சொன்னதுபோல இந்துத்துவாவின் ஆதரவை தனக்கு அதிகப்படுத்துகிறார். மறுபக்கம் தி.மு.க-வுக்கு எதிரான மனநிலையை உண்டாக்குகிறார். மதரீதியான பா.ஜ.க-வின் பிரசாரத்துக்கு துணை போகிறார். இந்த பேச்சுக்கு பெரிய அளவின் தண்டனை கிடைக்காது என நினைக்கிறார். இந்த பிரச்னையில் இருந்து மிகவும் சுலபமாக வெளியில் வந்துவிடலாம் என நினைக்கிறார். அதனால்தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்” என்றார்.