பிரமாண்ட ஏற்பாடு…
மீண்டும் ஒரு பிரமாண்ட விழாவுக்கு மதுரை திமுக தயாராகி வருகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள நலத்திட்ட உதவி வழங்கும் அரசு விழாவுக்கு அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் மாவட்ட நிர்வாகம் செய்து வரும் பிரமாண்ட ஏற்பாடுகளால் மதுரை மாவட்டமே அமளி துமளியாகி வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த செல்லூர் ராஜூவும், ஆர்.பி.உதயகுமாரும் மாதமொரு பிரமாண்ட விழாக்களை நடத்தி மதுரையை அதிர வைத்து ஜெயலலிதாவையும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியையும் மகிழ்ச்சிப்படுத்தினார்கள்.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அதேபோன்ற பிரமாண்ட விழாக்களை அமைச்சர் பி.மூர்த்தி தொடர்ந்து நடத்தி வருகிறார். பெரிய மாநாடு போல அவர் மகன் திருமணம் நடந்ததை இன்றுவரை தமிழக மக்கள் மறக்கவில்லை.
இவர் நடத்துகிற பிரமாண்ட விழாவில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உற்சாகமாகி பாராட்டுவதால் அடுத்தடுத்த விழாக்களின் பிரமாண்டமும் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில்தான் மதுரை ஒத்தக்கடை அருகில் நடைபெறும் 22 ஆயிரம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த ஒரு மாதமாக மதுரையில் நடந்து வருகிறது.
இந்த விழாவுக்கு கூட்டத்தை கூட்ட வேண்டுமென்பதற்கு வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் மாவட்டம் முழுக்க பயனாளிகளைத் தேர்வு செய்து வருகிறார்கள், நலத்திட்ட உதவிபெறும் ஒவ்வொரு பயனாளியும் கடன் உதவி பெறவுள்ள 1000-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த ஒவ்வொருவரும் குடும்பத்துடன் வர வேண்டுமென்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனராம்.
மதுரை வரும் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு…
இது ஒரு பக்கமென்றால் ஒன்றியச்செயலாளர்கள், கிளை வாரியாக கட்சியினரை அழைத்துவர அனைத்து வசதிகளும் மாவட்ட செயலாளர்களால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் துணை முதலமைச்சராக உள்ள உதயநிதிக்கு நாம் அளிக்கும் வரவேற்புதான் மறக்க முடியாததாக இருக்க வேண்டும் என்று சமீபகாலமாக மாவட்டம் முழுவதும் நடந்த திமுக ஆலோசனைக் கூட்டங்களில் அமைச்சர் பி.மூர்த்தி பேசி வந்தாராம். மதுரை மாவட்டத்தில் மட்டுமல்ல, தென் மாவட்டத்திலேயே தான் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் நிரூபிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் என்று கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.
இந்த விழா குறித்து மதுரை அமைச்சர் பி.மூர்த்தி, மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி, தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு இணங்க மதுரை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் மைல் கல்லாக 22 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் 9-ஆம் தேதி வழங்குகிறார். இந்த விழாவில் கலந்துகொள்ள 8 ஆம் தேதி மாலை மதுரை வரும் உதயநிதிக்கு விமான நிலையத்திலிருந்து வருகின்ற வழியில் கொடியுடன் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்” என்று கேட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கான பயனாளிகள் தேர்வு முதல் பந்தல் ஏற்பாடுகள் வரை கட்சியினருடன் சேர்ந்து கலெக்டர், மாநகராட்சி கமிஷனரும் நேரில் சென்று கவனித்து வருகிறார்கள். இரண்டு லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டு, கலைஞர் நூற்றாண்டு நூலக மாதிரியுடன் கூடிய அலங்காரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY