மதுரை புத்தகத் திருவிழா: `பேசுகிறேனா? இல்லையா?’ – விஜய் டிவி ராமர் சொல்லும் பதில் இதுதான்

‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ என எல்லோரையும் சிரிக்க வைத்த ‘விஜய் டிவி’ புகழ் ராமரையே தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்திருக்கிறது. மதுரை புத்தகத் திருவிழா நிகழ்ச்சி குறித்த விவாதங்கள்.

பள்ளிக்கூடத்தில் மகா விஷ்ணு பேசிய பேச்சுகள் வெளியான அடுத்த சில  தினங்களிலேயே ‘புத்தகத் திருவிழாவில் ராமர் பேசுகிறார்’ என்ற அறிவிப்பும் வெளியாக, இரண்டுக்கும் முடிச்சுப் போடத் தொடங்கி விட்டனர் சமூக வலைதளத்தில் சிலர்.

‘புத்தகத் திருவிழாவுல பேசறதுக்கு டிவியில காமெடியனா வந்தவர்தான் கிடைச்சாரா, இங்க இவர் என்னென்ன பேசக் காத்திருக்காரோ’ என்கிற ரீதியில் சமூக வலைதளங்களில் பலரும் பலவிதமான கருத்துகளைப் பகிர, வரும் சனிக்கிழமை (14/9/24) ராமர் பேசுவாரா மாட்டாரா என்கிற கேள்விக்கு இந்த நிமிடம் வரை தெளிவான பதில் யாரிடமும் இல்லை.

ராமரின் விஷயத்தில் எப்படி ஏன் சர்ச்சை கிளம்பியது? மதுரையைச் சேர்ந்த பிரபலங்கள் சிலரிடம் பேசினோம். ”நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெளிவில்லாதவங்களா, முடிவெடுப்பதுல உறுதியா இல்லாதவங்களா இருக்குறதுதான் எல்லாத்துக்கும் காரணம். சமூக வலைதளங்கள்ல யார் வேணாலும் என்ன வேணாலும் பேசுவாங்க. அதுக்கேத்த மாதிரியெல்லாம் முடிவுகளை மாத்திட்டே இருக்கறது சரியானதா? ராமர் உள்ளூர்காரர். நகைச்சுவை மூலம் சின்னத்திரையில் நுழைஞ்சு இப்ப நடிகராகவும் உயர்ந்திருக்கார். மதுரை நகைச்சுவை மன்றத்துல இருந்தவர்.

புத்தகத் திருவிழான்னா எழுத்தாளர்கள் மட்டும்தான் கலந்துகிட்டு பேசணும்னு இல்லைங்கிறதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏத்துக்கிட்டாங்க. புத்தகத் திருவிழா நடக்கிறப்ப ஒவ்வொரு நாளும் மாலை கலை நிகழ்ச்சிகள் நடக்குறதும் வழக்கம்தான். கலைநிகழ்ச்சிகளுக்குக் கலைஞர்களை அழைக்காம யாரைக் கூப்பிடறதாம்?

விஜய் டிவி ராமர்

தவிர, ஒரு விருந்தினரை அழைக்கறப்ப அவர் யார் என்ன பண்ணினார்ங்கிற விவரத்தையெல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டுதானே கூப்பிடுறாங்க? நிகழ்ச்சிக்கு கூப்பிடறதுன்னு முடிவெடுத்துக் கூப்பிட்டாச்சுனா, பிறகு என்ன விமர்சனம் வந்தாலும் தங்களுடைய நிலைப்பாட்டுல தெளிவா உறுதியா இருக்கணும் நிகழ்ச்சியை ஏற்பாடு செஞ்சவங்க.  ‘இவரை இதுக்காகத்தான் விருந்தினராக் கூப்பிட்டோம்’னு சொல்லிட்டுப் போக வேண்டிதானே?

ராமர் விஷயத்தில், அவரைப் புத்தகத் திருவிழாவுக்குக் கூப்பிட்டதுல எந்தத் தவறுமே இல்லை. டிவி சமையல் ஷோவுல அவர் கோமாளி வேஷம் போட்டு வந்தார்னா அதுவுமே ஜனங்களை மகிழ்விக்கத்தான். ‘அவர் என்ன பேசுவார்’னு கேட்டவங்களுக்கு அவருடைய வாசிப்புப் பழக்கம் பத்தித் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.. அவர் படிச்சிட்டிருந்த காலந்தொட்டே புத்தகங்களை வாசிச்சிட்டிருக்கிறவர்ங்கிறது அவருடைய நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்” என்றார்கள் அவரகள்.

வருகிற சனிக்கிழமை ராமர் பேசுவார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சில இடங்களில் ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகளில் ராமர் பெயர் மறைக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாக, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினைத் தொடர்பு கொண்டு நாம் இது தொடர்பாகக் கேட்டோம்.”பதிப்பாளர்களுக்கு அரங்கம் ஏற்பாடு செய்வது போன்ற வேலைகள்தான் எங்களுடைய பொறுப்பு . நிகழ்ச்சிக்கு விருந்தினர்களை அழைப்பதெல்லாம் மாவட்ட நிர்வாகம் தான். ராமர் பேசறாரா இல்லையாங்கிறதை நீங்க மாவட்ட நிர்வாகத்திடம்தான் கேட்கணும்’ என்கின்றனர். ராமரையே தொடர்பு கொண்டு நாம் பேசினோம்.”எனக்கு என்னை நீக்கியதாக எந்தத் தகவலும் சொல்லவில்லை. நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை நடக்குது. நான் பேசறேன் சார்” என உறுதியாகச் சொல்கிறார் ராமர்.ராமர் பேசவிருக்கிறா இல்லையா என்பது வரும் சனிக்கிழமை வந்தால்தான் தெரியவரும் போல. அவருடைய் ஸ்டைலில் சொன்னால், ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’னு சொல்ல வேண்டியிருக்கிறது.

புத்தகத் திருவிழாவில் ராமரைப் பேச அழைத்திருப்பது குறித்து உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!