திருப்பூர்: மாமனாரைக் கொன்று, தற்கொலை செய்துகொண்ட மருமகன் – நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி (70). இவரது மகள் அம்பிகாவுக்கும், படியூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. 6 ஆண்டுகளுக்கு முன் அம்பிகாவை ராஜ்குமார் அடித்துள்ளார். இதையறிந்த பழனிசாமி மற்றும் அவரது உறவினர்கள் ராஜ்குமாரைத் தாக்கியுள்ளனர். இப்பிரச்னை பெரிதாகவே உறவினர்கள் இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசி வைத்துள்ளனர்.

செல்பியால் வந்த பிரச்னை

அதன் பின் கடந்த ஆறு வருடங்களாக பழனிசாமியும், ராஜ்குமாரும் பேசிக் கொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற உறவினர் வீட்டுத் திருமணத்தில் பழனிசாமியும், அவரது மகள் அம்பிகாவும் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, அம்பிகா தனது தந்தை பழனிசாமியுடன் செல்பி எடுத்துள்ளார். இதைக் கண்ட ராஜ்குமார் அம்பிகாவிடம் சண்டை போட்டுள்ளார்.

Crime

ஏற்கெனவே தன்னை அடித்த ஆத்திரத்திலிருந்த ராஜ்குமாருக்கு அம்பிகா தனது தந்தையுடன் செல்பி எடுத்தது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பொருத்துக் கொள்ள முடியாத ராஜ்குமார், படியூரில் இருந்து காரை எடுத்துக் கொண்டு எல்லப்பாளையத்தில் உள்ள பழனிசாமியின் வீட்டுக்கு இன்று காலை சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராஜ்குமார் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு பழனிசாமியின் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் ஐந்து முறை சுட்டுள்ளார்.

ராஜ்குமார் தற்கொலை

இதில், பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பழனிசாமி உயிரிழந்ததை உறுதிப்படுத்திக் கொண்டு, படியூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்த ராஜ்குமார், தனது மனைவி அம்பிகாவிடம், “உன் தந்தையைச் சுட்டுக்கொன்றுவிட்டேன்.” எனக் கூறிவிட்டு, அதே துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு ராஜ்குமார் தற்கொலை செய்துகொண்டார். இரு சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

பழனிசாமி
ராஜ்குமார்

காவல்துறை விசாரணை

காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், “குடும்ப பிரச்னை காரணமாக இந்தக் கொலை நடைபெற்றுள்ளது. பெரிய அளவில் ஹாலோ பிளாக் கம்பெனி நடத்திவரும் ராஜ்குமார் துப்பாக்கி வைத்துக் கொள்ளக் காவல் துறையிடம் உரிமம் பெற்றுள்ளார். நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலுக்காகக் காவல் துறையிடம் தனது துப்பாக்கியை ராஜ்குமார் ஒப்படைத்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்புதான் துப்பாக்கியை மீண்டும் பெற்றுள்ளார். காவல் துறையிடம் இருந்து துப்பாக்கி வாங்கிய சில நாள்களிலேயே இந்தக் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காங்கேயம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.” என்று தெரிய வந்துள்ளது.

குடும்பத் தகராறில் மருமகனே மாமனாரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது காங்கேயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.