“அரசுப் பள்ளியில் படித்தவர்கள் இஸ்ரோவில் இருக்கிறார்கள்” – ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம் (PM SHRI Scheme) விவகாரத்தில் மத்திய பாஜக அரசும், தமிழ்நாடு அரசும் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றன. 

கடந்த வாரம் ஆசிரியர் தினத்தையொட்டி சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம் குறித்து விளக்கிப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு கல்வி விஷயத்தில் தெளிவாகயில்லை என்றும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதில் தி.மு.க அரசுக்கு என்ன பிரச்னை என்றும் விமர்சித்துப் பேசியிருந்தார்.

ஆளுநர் ரவி

இதையடுத்து தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை ஆளுநர் குறைக் கூறுவதாகவும், மும்மொழிக் கொள்கை அடங்கிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கு நிதி ஒதுக்குவோம் என மத்திய அரசு நிர்பந்திப்பதாகவும் தமிழ்நாடு திமுக அரசு குற்றம் சாட்டியிருந்தது. தமிழ்நாட்டின் பாடத்திட்டம் குறித்த ஆளுநரின் இந்தப் பேச்சு விவாதப் பொருளாகி, பலரும் இது குறித்துக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மத்திய அரசின் பாடத்திட்டத்தை விடவும், தமிழ்நாட்டின் பாடத்திட்டம் சிறப்பாக இருக்கிறது என்று பலரும் கூறி ஆளுநரின் பேச்சை விமர்சித்து வருகின்றனர்.

அவ்வகையில் தற்போது ஆளுநரின் பேச்சிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உயர் கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி பேசுகையில், “அரசுப் பள்ளியில் தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தில் தமிழ் வழியில் படித்த வீரமுத்துவேல் இஸ்ரோவில் இருக்கிறார். இஸ்ரோவில் உயர் பதவியிலிருந்து சாதனை நிகழ்த்தி வருபவர்கள் தமிழ் வழியில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்தான். தமிழ்நாடு அரசின் கல்வித்தரம் சிறப்பாகயிருக்கிறது.

உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

நமது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நிறையப் புதுப்புது திட்டங்களைக் கொண்டு வந்து அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி வருகிறார். நமது தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கையால் கல்வித்தரம் உயர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆரம்பக் கல்வியிலிருந்து உயர் கல்வி வரையிலும் அனைத்திலும் கவனம் செலுத்தி மேம்படுத்தி வருகிறோம். இன்னும் நிறைய மேம்பாடுகளைக் கொண்டு வந்து கல்வித்தரத்தை உயர்த்துவதுதான் தமிழ்நாடு அரசின் நோக்கம். அதைத்தான் முதல்வர் ஸ்டாலின் செய்துவருகிறார்” என்று பேசியிருக்கிறார்.