“சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; புகாரளித்த பெற்றோரை தாக்கிய காவல் ஆய்வாளர்” – CPIM குற்றச்சாட்டு!

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி வயிற்றுவலியால் துடித்திருக்கிறார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து சோதித்ததில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில், பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ் என்பவரின் மீது சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளிக்கச் சென்றிருக்கின்றனர். அப்போது என்ன நடந்தது என்பது குறித்து அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

பாலியல் வன்கொடுமை

அந்த வீடியோவில், புகார் அளிக்க வந்த தங்களை காவல் ஆய்வாளர் தாக்கியதாகவும், சதீஷின் பெயரை புகாரிலிருந்து நீக்க வற்புறுத்தியதாகவும் தெரிவித்திருக்கின்றனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முகநூலில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னையில் ஆறாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவரது பெற்றோர்கள், அது குறித்து சென்னை, அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் முறையாக புகாரும் அளித்திருக்கிறார்கள்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர், குற்றவாளியை கண்டறிந்து, வழக்குப்பதிவு செய்து கைது செய்வதற்கு பதிலாக, அந்த மாணவியின் பெற்றோரை காவல் நிலையத்தில் வைத்து அவமானப்படுத்தியும், குற்றவாளி பெயரை ஏன் புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என மிரட்டியும், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இப்படி சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, கடமையை நிறைவேற்ற மறுத்தது, புகார் கொடுத்தவர்களை தாக்கியது, பாலியல் புகாருக்கு உள்ளான குற்றவாளியை பாதுகாத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன்

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர் சிகிச்சையும், மனநல ஆலோசனையையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளையும் தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், காவல்துறை தரப்பு, “சிறுமியின் பெற்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. காவல் ஆய்வாளர் தன் வேலையை மட்டும் செய்தார்” எனக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.