TVK : `வீடியோ வெளியிடப்போகும் விஜய்?; மாவட்டத் தலைவர்களுக்கு பறந்த மெசேஜ் – பின்னணி என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பற்றிய செய்திகள் பரபரப்பாக உலாவிக் கொண்டிருக்கும் நிலையில், நாளை காலை 11 மணிக்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜய் ஒரு வீடியோவின் வழி முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாகச் சொல்கிறார்கள் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள்.

TVK Vijay

விக்கிரவாண்டி வி.சாலையில் செப்டம்பர் 23 ஆம் தேதி மாநாடு நடத்த வேண்டி அனுமதி கேட்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி த.வெ.க சார்பில் விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் மனு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 2 ஆம் தேதி த.வெ.க வுக்கு மாநாடு சார்ந்து 21 கேள்விகள் கேட்டு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதற்கான பதில்களை வழங்க 5 நாட்கள் அவகாசமும் கொடுத்திருந்தார்கள். இந்நிலையில் செப்டம்பர் 6 ஆம் தேதியான நேற்று த.வெ.க சார்பில் அந்த கேள்விகளுக்கு பதில் மனுவும் காவல்துறையிடம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் விஜய் நாளை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போகிறார் எனும் தகவலும் கிடைத்திருக்கிறது.

த.வெ.க வின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் இதுகுறித்து விசாரித்தோம், “இன்று மாலையிலிருந்தே ஆனந்த் அண்ணன் ஒவ்வொரு மாவட்டத் தலைவராக அழைத்துப் பேசி வருகிறார்.

TVK Vijay – விஜய் த.வெ.க

நாளை எங்களின் தளபதி காலை 11 மணிக்கு வீடியோ மூலம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவிருப்பதாகவும் அந்த அறிவிப்பு வெளியானவுடன் அத்தனை பேரும் பட்டாசு வெடித்து மக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடத் தயாராக இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

TVK Vijay | விஜய்

வீடியோவில் தளபதி மாநாட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனத் தெரிகிறது. மேலும், தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்ய வழங்கிய விண்ணப்பத்துக்கும் டெல்லியிலிருந்து அதிகாரப்பூர்வமாக நல்ல தகவல் ஒன்று இரண்டு நாட்களுக்கு முன்பு கிடைத்திருப்பதாகவும் தெரிகிறது. அதையும் தளபதி அறிவிக்கக்கூடும். இதுவே எங்களுக்கு பெரிய சந்தோஷம்தான். ஏனெனில், எங்கள் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்த பிறகு ஒரு சில கட்சியினர் எங்களுக்கு எதிரான வேலைகளில் இறங்கியிருந்தனர். கட்சியின் சுருக்கமான பெயருக்கு சிலர் சொந்தம் கொண்டாடினார். இதனால் எங்களுக்குமே கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது.

தேர்தல் ஆணையமும் ஒன்றிரண்டு முறை எங்கள் தரப்பை அழைத்து சில விவரங்களைக் கேட்டறிந்தது.

கடந்த ஜூலை 18 ஆம் தேதி ஆனந்த் அண்ணனின் பிறந்தநாள். அன்றைக்கு நிறைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தோம். அப்போது கூட டெல்லியில் தேர்தல் ஆணையத்திலிருந்து அழைப்பு வந்ததால் அண்ணன் உடனடியாக நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கிளம்பி சென்று விளக்கமளித்திருந்தார். இப்போது தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் த.வெ.கவும் இணைந்திருப்பதாகத் தெரிகிறது.

TVK

இதுவே எங்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. நாளைக்கு தளபதி சொல்லப்போகும் செய்தியைக் கேட்டு மாநாட்டுக்காக இன்னும் விறுவிறுப்பாக வேலைகளை தொடங்குவோம்.” என்கின்றனர் உற்சாகமாக. மற்றொரு மேற்கு மாவட்ட நிர்வாகி ஒருவரிடமும் பேசினோம். அவரும் நாளை வீடியோவாகவோ, அறிக்கையாகவோ தளபதியிடமிருந்து அறிவிப்பு வரும். அதற்காக காத்திருக்கிறோம் என்றார்.

மாநாடு சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் த.வெ.க தரப்பில் பதிலளிக்கப்பட்டிருந்தாலும் காவல்துறை அந்த பதில்களை ஏற்றுக்கொண்டு இன்னும் மாநாட்டுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் மாநாடு குறித்த தகவல் எதுவும் தெரிவிப்பாரா என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். தேர்தல் ஆணையம் த.வெ.க வை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இணைத்திருக்கும் செய்தியை விஜய் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.