திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக மீனவர்கள் நமது எல்லைக்குள் மீன் பிடித்தாலும் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதை ஆகிவிட்டது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது இலங்கை ராணுவத்தால் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை 5 நாட்களில் திருப்பி கொண்டு வந்து விடுவோம். படகுகளையும் மீட்டு விடுவோம். தமிழக முதல்வர் மீனவர்கள் பிரச்னை குறித்து பல முறை பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதோடு பல்வேறு முறை இலங்கை கடற்படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால், தமிழக மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் மீனவர்களை விடுவிக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் மோடியால் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியவில்லை. புதுச்சேரியில் நான் முதல்வராக இருந்தபோது அப்போதைய ஆளுநர் கிரண்பேடி என்னை பணி செய்ய விடாமல் தடுத்துபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக முதல்வர் ஸ்டாலினை பணி செய்ய விடாமல் தடுத்து வருகிறார்.
தமிழக ஆளுநர் தொடர்ந்து பல்வேறு சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருகிறார். தமிழக அரசுக்கு எதிராகவும், அரசு கொண்டு வரும் திட்டங்களை விமர்சனம் செய்வதும், தமிழக அரசு திட்டங்களை மத்திய அரசோடு ஒப்பிட்டு அது பொருந்தாது எனவும் கூறி வருகிறார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தடம் மாறி போகிறார். பா.ஜ.க அவரை கைவிட்டு விட்டது. தமிழகத்தில் நடிகர் விஜய் மட்டுமல்ல, கர்நாடாகவிலும் பல நடிகர்கள் கட்சி தொடங்கினார்கள்.
தமிழகத்தில் விஜயகாந்த் போன்றோரும் கட்சி ஆரம்பித்தனர். தமிழகத்தில் எம்.ஜி.ஆரை தவிர வேறு யாரும் கட்சி ஆரம்பித்து நிலைக்கவில்லை. சில சட்டமன்ற உறுப்பினர்களாக வந்த பிறகு காணாமல் போய் விடுவார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதால் எந்த பிரச்னையும் எங்களுக்கு ஏற்பட போவதில்லை. மக்கள் நடிகர்களை பார்த்து ஓட்டுபோட மாட்டார்கள்” என்றார்.