Ind Vs Ban : சென்னையில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?!

இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வங்கதேச அணி முதல் முறையாக சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

சேப்பாக்கம் மைதானம்

சென்னை மைதானத்தில் இந்திய அணி கடைசியாக 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதன் பிறகு எந்த ஒரு டெஸ்ட் போட்டியும் சென்னையில் நடைபெறவில்லை. இதனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த போட்டியை பார்க்க காத்திருக்கிறார்கள். இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் திங்கட்கிழமை காலை 9.45 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்டில் குறைந்தபட்ச டிக்கெட் விலையாக ஆயிரம் ரூபாயும் அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த டிக்கெட்டுகளை insider.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து பெறலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருக்கிறது.