Vinesh Phogat: வினேஷ் போகத் மல்யுத்த வீராங்கனை டு காங்கிரஸ் வேட்பாளர்!

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் வினேஷ் போகத்.

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் எடை அதிகரிப்புக் காரணமாகத் தங்கப் பதக்கத்துக்கான போட்டிக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வினேஷ் போகத்தின் வருத்தத்தில் நாடே பங்கெடுத்தது.

ஒலிம்பிக்குக்குப் பிறகு மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் வினேஷ் போகத். தற்போது, அவரது வாழ்க்கையில் அரசியல் மூலம் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.

பிரிஜ் பூஷன் – சஞ்சய் சிங்

கடந்த ஆண்டு, மல்யுத்த சம்மேளனத்தின் அன்றைய தலைவரும், பாஜக-வின் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் தீவிர போராட்டத்தை முன்னெடுத்தனர். நீதிமன்ற தலையீட்டின் காரணமாக பிரிஜ்பூஷன் சரண் சிங் தலைவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால், அதன்பிறகு பூஷன் சரண் சிங்கின் நண்பரான சஞ்சய் சிங் அந்தப் பதவிக்கு வந்தார். ஒலிம்பிக்குக்குப் பிறகு, “மல்யுத்தத்தில் இந்தியா மேலும் ஆறு பதக்கங்களை வென்றிருக்கும், ஆனால் கடந்த 15-16 மாதங்களில் விளையாட்டில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக, பல பதக்கங்களை நாங்கள் இழந்திருக்கிறோம்.” என மல்யுத்த வீரர்களின் போராட்டத்தைக் குற்றம்சாட்டிப் பேசினார் இவர்.

தன்னுடைய போராட்டம் தொடரும் என்றும், விளையாட்டு வீரர்கள் யாரும் தான் கடந்து வந்த சங்கடங்களை அனுபவிக்கக் கூடாது என்றும் பேசியிருந்தார் வினேஷ் போகத்.

ஹரியானாவின் ஜுலானா தொகுதியில் போட்டியிடுகிறார் வினேஷ் போகத். முன்னாள் முதலமைச்சர் பூபேந்தர் சிங் ஹூடா கர்ஹி சம்ப்லா-கிலோய் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வினேஷ் போகத் – கார்கே – பஜ்ரங் புனியா – கே.சி.வேணுகோபால்

நேற்று ரயில்வே பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத், காங்கிரஸ் கட்சியிலும் இணைந்தார். அதைத்தொடர்ந்து நேற்றிரவில் வினேஷ் போகத் தேர்தலில் போட்டியிடுவதைக் காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

அந்த நிகழ்ச்சியில், ” வீதிகளில் நாங்கள் இழுத்துச் செல்லப்பட்டபோது, பாஜக-வை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எங்களுடன் நின்று எங்களின் கண்ணீரையும், வலிகளையும் புரிந்துகொண்டன.” எனப் பேசினார் வினேஷ் போகத்.

ஹரியானாவில் அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 8ல் முடிவுகள் வெளியாகும்.