`துரோகம் செய்த எனது மகள், மருமகனை ஆற்றில் தூக்கிப்போடுங்கள்!’ – மகாராஷ்டிரா அமைச்சர் சர்ச்சை பேச்சு

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலுக்காக தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவார் தனது கட்சி உடைந்த பிறகு புதிய தலைவர்களை தேடி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பா.ஜ.க மற்றும் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சி அதிருப்தி தலைவர்களை தனது பக்கம் இழுக்கும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறார். ஏற்கெனவே புனே, கோலாப்பூரில் பா.ஜ.க தலைவர்கள் சிலரை தனது பக்கம் இழுத்துவிட்டார். இப்போது கட்சிரோலியில் அஹ்ரி தொகுதி தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கும் தர்மராவ் பாபாவின் மகள் பாக்யஸ்ரீ மற்றும் மருமகன் ரிதுராஜ் ஆகியோர் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து போட்டியிட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

தர்மராவ் பாபா துணை முதல்வர் அஜித் பவார் அணியில் இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் தந்தைக்கு எதிராக பாக்யஸ்ரீயை களத்தில் இறக்க சரத் பவார் முயன்று வருகிறார். துணை முதல்வர் அஜித் பவார் தற்போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் கட்சிரோலி வந்திருந்த போது அவர் முன்னிலையில் தர்மராவ் பாபா பேசுகையில், ”மக்கள் கட்சியை விட்டு செல்லலாம். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. நமது குடும்பத்தை சேர்ந்த சிலர் எனது அரசியல் பலத்தை பயன்படுத்தி வேறு கட்சியில் சேர விரும்புகின்றனர்.

கடந்த 40 ஆண்டுகளாக மகாராஷ்டிரா அரசியலில் கட்சியை உடைப்பதில் மக்கள் திறமைசாலிகளாக இருக்கின்றனர். சரத் பவார் குரூப் தலைவர்கள் எனது குடும்பத்தில் பிரிவினையை ஏற்படுத்தி எனக்கு எதிராக தேர்தலில் போட்டியிட வைக்க விரும்புகின்றனர். எனது மருமகன், மகளை நம்பாதீர்கள். கட்சிக்கு துரோகம் செய்த அவர்களை ஆற்றில் தூக்கிப்போடுங்கள். என்னை விட்டு மக்கள் செல்லலாம். அப்படி செல்லும் ஒவ்வொருவரையும் ஆற்றில் தூக்கிப்போடவேண்டும். எனது மகளை அவர்கள் பக்கம் இழுத்துச்சென்று எனக்கு எதிராக நிறுத்துகிறார்கள்.

தந்தை, மகள்

ஒரு தந்தைக்கு மகளாக இருக்க முடியாத ஒருவரால் எப்படி உங்களுக்கு நம்பிக்கையாக இருக்க முடியும். இதனை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அவர் உங்களுக்கு என்ன நீதி வழங்குவார். அவரை நம்பாதீர்கள். அரசியலில் எனது மகள், சகோதரன், சகோதரி என்று பார்க்கமாட்டேன். ஒரு மகள் என்னை கைவிட்டாலும் இன்னொரு மகள் இருக்கிறாள். ஒட்டுமொத்த குடும்பமும் எனக்கு பின்னால் இருக்கிறது” என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அஜித் பவார், “நான் தவறு செய்துவிட்டேன். நீங்கள் அது போன்று குடும்பத்தை பிரித்து தவறு செய்துவிடாதீர்கள். உங்களது தந்தையுடன் இருங்கள்” என்று தெரிவித்தார்.